பலம்வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை ! தடுமாறுமா ? வெற்றி பெறுமா ?

Published By: Gayathri

01 Nov, 2021 | 10:50 AM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் தோல்வி அடையாமல் இருக்கும் இரண்டு அணிகளில் ஒன்றான பலம் வாய்ந்த இங்கிலாந்தை தனது 4 ஆவது போட்டியில் அரைகுறை நம்பிக்கையுடன் இலங்கை இன்று எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி ஷார்ஜா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று (1) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தரவரிசையில் பின்னிலையில் இருந்ததால், இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை, ஆரம்பப் போட்டிகளிலும் தொடர்ந்து சுப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், பலம்வாய்ந்த அணிகளுடனான போட்டிகளில் படு தோல்விகளை சந்தித்ததால் அரை இறுதிச் சுற்று வாய்ப்பை இலங்கை பெரும்பாலும் இழந்துவிட்ட நிலையில் இருக்கின்றது.

இப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஒட்டுமொத்த  ஆற்றல்கள் வெளிப்படாதது இலங்கை அணியின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது.

இலங்கையின் முன்வரிசை வீரர்களில் பெத்தும் நிஸ்ஸன்க மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 2 அரைச் சதங்களுடன் 169 ஓட்டங்களை மொத்தமாக பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.

பந்துவீச்சிலும் வனிந்து ஹசரங்க 11 விக்கெட்களுடன் ஷக்கிப் அல் ஹசனுடன் முதலாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஷக்கிப் அல் ஹசன் துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளாக  உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் பிரகாசிக்காதமையும் இலங்கை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இளம் வீரர் சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு சதம் பெற்றுள்ள போதிலும் அசலன்க மாத்திரமே தொடர்ச்சியாக பிரகாசித்துள்ளார்.

என்றாலும் இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதா? இல்லையா? என்பதில் இலங்கை அணியின் முகாமைத்துவம் உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. 

மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் பெரும்பாலும் குசல் பெரேராவுக்குப் பதிலாக தினேஷ் சந்திமால் உள்வாங்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் தினேஷ் சந்திமாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

எனவே தொடர்ந்து விளையாடிவரும் வீர்களுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்வதே சிறந்தது என அணி முகாமைத்துவம் கருதுவதாக முகாமைத்துவ வட்டாரத்திலிருந்து தெரிய வருகின்றது.

சுப்பர் 12 சுற்றின் ஆரம்பப் போட்டியில் சவாலுக்கு மத்தியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை, அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிடம் 7 விக்கெட்களால் படுதோல்வி அடைந்தது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வனிந்து ஹசரங்கவின் ஹெட்-ட்ரிக்கின் உதவியுடன் வெற்றியை நெருங்கிவந்த இலங்கை, கடைசி ஓவரில் லஹிரு குமார வாரி வழங்கிய 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பிறெட் லீ (2007), கேர்ட்டிஸ் கெம்பர் (2021 4 பந்துகளில் 4 விக்கெட்கள்) ஆகியோரைத் தொடர்ந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரக்கெட் போட்டியில் வனிந்த ஹசரங்க ஹெட்-ட்ரிக் சாதனையை நிகழ்த்தியபோதிலும் டேவில் மில்லரின் அதிரடி அதனை வீண்போகச் செய்தது.

மறுபுறத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலிய ஆகிய மூன்று அணிளையும் சுப்பர் 12 சுற்றில் மிக இலகுவாக வெற்றிகொண்டுள்ள இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடுவதை பெரும்பாலும் உறுதிசெய்துகொண்டுள்ளது.

இந்த மூன்று போட்டிகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இங்கிலாந்து இன்றைய போட்டியிலும் வெற்றியைத் தொடர்வதற்கு முயற்சிக்கவுள்ளது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, மஹிஷ தீக்ஷன.

இங்கிலாந்து: ஜேசன் ரோய், ஜொஸ் பட்லர், டேவிட் மாலன், ஜொனி பெயார்ஸ்டோவ், ஒய்ன் மோர்கன் (தலைவர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், டய்மல் மில்ஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58