கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதாக சீனத்தூதரகம் அறிவிப்பு - மக்கள் வங்கி பதில்

29 Oct, 2021 | 04:31 PM
image

(நா.தனுஜா)

சேதன உர இறக்குமதி தொடர்பில் விநியோகிக்கப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை 'கறுப்புப்பட்டியலில்' சேர்த்திருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் நடவடிக்கைகக்குப் பதிலளித்துள்ள மக்கள் வங்கி, இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்நாட்டின் பொறுப்புவாய்ந்த கட்டமைப்பு என்றவகையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக செயற்படும் கடப்பாட்டை தாம் கொண்டிருப்பதாகவும் மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த மேமாதத்திலிருந்து இரசாயன உரத்திற்குப் பதிலாக சேதன உரத்தைப் பதிலீடு செய்யும் வகையிலான பசுமை விவசாய அபிவிருத்திக்கொள்கைக்கு மாறியது. அதன்படி சேதன உரத்திற்கான தேவைப்பாடு பற்றிய அறிவிப்பும் கேள்விமனுக்கோரல் விண்ணப்பமும் கடந்த ஜுன்மாதம் விவசாய அமைச்சினால் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஷிங்டாவ் சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் கலந்துகொண்டதுடன் உரத்தை விநியோகிப்பதற்கான உரித்தைப் பெற்றுக்கொண்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்கள் பட்டியலில் இந்நிறுவனத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுடன் அதனூடாக இலங்கைக்கு 99,000 டொன் சேதன உரத்தை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஷிங்டாவ் சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் நிறுவனம் இலங்கையின் உள்ளக முகவர் ஊடாக பெறுனருடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன் அதற்கமைவாகக் கடன் தவணைக் கடிதமும் விநியோகிக்கப்பட்டது.

அதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தின் மாதிரிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தினால்  பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

அதன்மூலம் குறித்த உரத்தில் 'எர்வீனியா' என்ற தீங்கேற்படுத்தும் பற்றீரியா அடங்கியிருப்பது கண்டறியப்பட்டமையை அடுத்து, சேதன உரம் ஏற்றப்பட்ட அந்தக் கப்பலை மீண்டும் சீனாவிற்குத் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.

அதுமாத்திரமன்றி சீனாவின் ஷிங்டாவ் சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவர் நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக சேதன உரம் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதற்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சேதன உர இறக்குமதி தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம், உர இறக்குமதிக்கான கடன் தவணைக் கடிதத்திற்குரிய பணத்தைச் செலுத்துவதற்குத் தவறியமையினால் மக்கள் வங்கியை (இலங்கை) 'கறுப்புப்பட்டியலில்' சேர்ப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

சீவின் நிறுவனம் திறந்த விலைமனுக்கோரலில் வெற்றியீட்டியது. இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. சீனாவிலும் சர்வதேச முகவர் நிறுவனத்தினாலும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் உரத்தின் தரம் உறுதிப்படுத்தப்பட்டது. கப்பலின் ஊடாக உரிய காலப்பகுதியில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையம் அதனை இடைநடுவில் நிராகரித்தது. அதனால் (உரத்தினால்) தீங்கேற்படலாம் என்று கூறியது. கப்பலை நாட்டினுள் அனுமதிப்பதற்கு மறுத்தது. மூன்றாம் தரப்பினூடாகப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான யோசனையும் மறுக்கப்பட்டது. கடன் தவணைக் கடிதத்திற்கான கொடுப்பனவைச் செலுத்துவதற்கும் மறுப்புத்தெரிவிக்கப்பட்டது. எனவே இலங்கை மக்கள் வங்கி 'கறுப்புப்பட்டியலில்' சேர்க்கப்பட்டது என்று தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்ட மக்கள் வங்கி, சீனத்தூதரகத்தினால் தமது வங்கி கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தலைச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. 

அதன்படி அவ்வறிக்கையில் மக்கள் வங்கி மேலும் கூறியிருப்பதாவது,

மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு செலுத்தப்படாமையினால் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருப்பதாக அறிகின்றோம். இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீனத்தூதரகத்தின் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நாட்டின் பொறுப்புவாய்ந்த கட்டமைப்பு என்றவகையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக செயற்படும் கடப்பாட்டை மக்கள் வங்கி கொண்டிருப்பதே மேற்படி கொடுப்பனவைச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஒரேயொரு காரணமாகும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர், வழமையான வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களுக்கு அமைவாக குறித்த கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு விரைவாகச் செலுத்தப்படும் என்று மக்கள் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கேட்டறிவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் தொடர்புகொள்ள முற்பட்டோம். அதன்போது இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கி விரைவில் அறிக்கையொன்றை வெளியிடும் என்று ஆளுநரின் பிரத்யேக செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47