தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரையுடன் வலம் வருபவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவர் தமிழில் இயக்கிய முதல்படமான சின்னமணிக்குயிலே இதுவரை வெளியாகவில்லை. அதனையடுத்து கார்த்திக் பானுப்பிரியா நடித்த கோபுர வாசலிலே என்ற படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிநேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில் காஞ்சிவரம் தேசிய விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஓஸ்கார் விருதை மனதுள் வைத்து ‘சில சமயங்களில்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய எண்ணத்திற்கு ஏற்றவாறே இப்படமும் ஓஸ்கார் விருதிற்கு முந்தைய விருது நிகழ்வான கோல்டன் குளோப் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய திரையிடலுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே தமிழ் படம் இது தான் என்பது இதன் சிறப்பம்சம்.

இது குறித்து பேசும் இயக்குநர் பிரியதர்ஷன், ‘நான் இது வரை ஏராளமான படங்களை கொமர்ஷலுக்காக இயக்கியிருக்கிறேன். ஆனால் இதயத்துடன் நெருக்கமாக  இரண்டேயிரண்டு படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். அதில் ஒன்று காஞ்சிவரம் மற்றொன்று சில சமயங்களில்.’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

இப்படத்தில் 8 கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எயிட்ஸ் என்ற உயிர்கொல்லி நோயைப் பற்றிய விழிப்புணர்விற்காக புதிய திரைக்கதை உத்தியுடன் சொல்லியிருக்கிறார்.  இதில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், சண்முக ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பிரியதர்ஷன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஒப்பம் என்ற மலையாளப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்