சீன உரத்தை நாம் நிராகரித்துடன் அந்த கப்பலை நாம் திருப்பி அனுப்பியுள்ளோம்  : உரத்தை பரிசோதனைக்காக மூன்றாம் தரப்புக்கு அனுப்ப இணங்கவில்லை - மஹிந்தானந்த

29 Oct, 2021 | 12:12 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சீன உரத்தை நாம் நிராகரித்துடன் அந்த கப்பலை நாம் திருப்பி அனுப்பியுள்ளோம். அந்தக் கப்பலில் உள்ள உரத்தை பரிசோதனைக்காக நாம் மூன்றாம் தரப்புக்கு அனுப்புவதற்கு இணங்கவில்லை.

மாறாக  எமது நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு  உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து தரும்படியும், அவ்வாறு புதிதாக உற்பத்தி செய்யப்படும் உரத்தை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மூன்றாம் தரப்பினருக்கு கொடுப்பதற்குமே  சீன தூதுவருடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

எமது நாட்டில் தற்போது நிலவும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னணியில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்பவர்கள் காணப்படுகின்றனர்.

 அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆதரவாளர்களைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள  உரம் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களை தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள 'கொவிஜன மந்திரய' வில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் விளக்குகையில்,

" நாட்டின் பெரும்போக விவசாயம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் ஆரம்பமானது. இதன்படி டிசம்பர் மாதம் வரையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதுவரையில் எட்டு இலட்சம் ஹெக்டயர் நெற் பயிர் செய்கை நிலம் காணப்படுவதுடன்,  ஆற‍ரை இலட்சம் விவசாயிகள் காணப்படுகின்றனர்.  இதில், 562 விவசாய சேவை மத்திய நிலையங்களின் தகவல்களின்படி  2 இலட்சத்து 4 ஆயிரம் ஹெக்டயர் விவசாய  நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொலன்னறுவை, அநுராதபுரம் மாவட்ட விவசாயிகள் நீர் தேவையில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். கடந்த 2 தினங்களாக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் விவசாயிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி, சகல விவசாயிகளின் இணக்கத்துடன் இம்மாதம் 28 (இன்று) மற்றும் நவம்பர் 5 ஆம் திகதிகளில் நீரை விநியோகிப்பதற்கு தீர்மானித்தனர். அந்த மாவட்டங்களில்  சகல விவசாயிகளும் நெற் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.

மேலும், சிறு போக விவசாயத்துக்காகவும் நீர் விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகள் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். ஆகவே, அடுத்த மாதம் 10 ஆம், 15 ஆம் திகதிகளில் இந்த எட்டு இலட்ச  ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பிலும்  இந்நாட்டு விவசாய மக்கள் விவசாயத்தை மேற்கொள்வார்கள். 

விவசாயம் உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளுக்காக சேதனப் பச‍ளை உரம், உயிரியல் திரவ உரம், நைட்ரிஜன் உரம் மற்றும் பொட்டாசியம் உரம் ஆகிய நான்கு வகையான உர வகைகளுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு உரங்களை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், இரண்டு உரங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளோம். 

தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  சேதன பசளை உரம் விவசாய மத்திய நிலையங்களுக்கு கிடைக்கச் செய்து வருகிறோம். இது விவசாயம் செய்யும் படிமுறைகளுக்கு அமைவாக அதனை வழங்கி வருகிறோம்.  உயிரியல் திரவ உரத்தையும் வழங்கி வருகிறோம்.

நைட்ரிஜன் உரத்தை வழங்கவுள்ளோம். இந்த நைட்ரிஜன் உரம் தாங்கிய கொள்கலன்கள்  அடுத்தமாதம் 5 ஆம் திகதியளவில் இந்தியாவிலிருந்து வந்தவுடன் அந்த உரத்தையும் தேவைக்கேற்க விவசாய மத்திய நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படும். கடைசியாக பயன்படுத்தப்படும் பொட்டாசியம் உரத்தை அடுத்த மாத ஆரம்பத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், பெரும்போக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயப் பகுதிகளுக்கான அணைகளின் ஊடாக நீரை  விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் நீரைத் தர வேண்டாம் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். ஆயினும் தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளனர்.  உணவுப் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினை ஏற்படாதென்றும் , நெற் பயிர்ச் செய்கைக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாதென்றும் நாம் நம்புகிறோம்.

உர இறக்குமதிக்காக சீன உர நிறுவனமொன்றுக்கு விலை மனுக் கோரலொன்றை வழங்கியிருந்தோம்.  ஆயினும், இந்த சீன நிறுவனத்தின் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பற்றீரியா இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்துக்கு அமைவாக இதனை இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் போனது.  இதன் காரணமக இதனை ‍ கொண்டு வருவதை நாம் நிறுத்தினோம். மேலும்,  அந்நிறுவனத்துக்கு பணத்தை வழங்குவதை நிறுத்துவதற்கு நீதிமன்ற உத்தவொன்றை பெற்றுக்கொண்டோம்.

அப்படி இல்லையென்றால், அந்த விலை மனுக்கோரலில் உள்ளபடி அந்த நிறுவனத்துக்கு பணம் அளிக்கப்பட வேண்டிவரும். ஆகவே, எமது இராஜாங்க அமைச்சர் சீன தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் இணக்கப்பாடொன்றுக்கு வந்தோம். எமது நாட்டில் உரம் தொடர்பில் சட்டங்கள் உள்ளன. அந்த சட்ட திட்டங்களுக்கு அப்பால் சென்று செயற்பட முடியாது"  என்றார்.

சீன கப்பலை நாம் திருப்பி அனுப்பியுள்ளோம். எமது நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு  உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து அதனை அனுப்பி வைக்குமாறு நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் என அமைச்சர் அளுத்கமகே தெரிவித்தார். 

" சீன உரத்தை நாம் நிராகரித்துடன் அந்த கப்பலை நாம் திருப்பு அனுப்பியுள்ளோம். அந்தக் கப்பலில் உள்ள உரத்தை பரிசோதனைக்காக நாம் மூன்றாம் தரப்புக்கு அனுப்புவதற்கு இணங்கவில்லை. மாறாக  எமது நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு  உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து தரும்படியும், அவ்வாறு புதிதாக உற்பத்தி செய்யப்படும் உரத்தை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மூன்றாம் தரப்பினருக்கு கொடுப்பதற்குமே  சீன தூதுவருடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டது. 

மேலும், நாட்டில் தற்போது நிலவும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னணியில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்பவர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆதரவாளர்களைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். 

தொடர்புடைய செய்தி 

தரமான உரத்தை அனுப்பினால் பெறுவோம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே 

‍ரொபட் அன்டனி 

 சீன உர கப்பலை எந்த ஒரு காரணத்துக்காகவும் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காது.  அந்த கப்பலை நாங்கள் மீண்டும் சீனாவுக்கு அனுப்பி விடுவோம்.    சீனாவிலிருந்து உரிய தரத்துடன் இலங்கைக்கு உரம்  கொண்டுவரப்பட்டால்  அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  மாறாக நாங்கள் சீனாவிலிருந்து உரம் பெறுவதை நிராகரிக்கவில்லை.  எனினும் தரமான உரத்தையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

இந்த விடயத்தை இலங்கைக்கான சீனத் தூதுவரிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெளிவாக தெரிவித்துவிட்டார்.  மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.  எனவே இம்முறை பெரும்போகத்தில் விளைச்சலில் வீழ்ச்சி இருக்காது என்று எதிர்பார்க்கிறோம்.    அவ்வாறு விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டால்  இழப்பீடு வழங்குவதற்கு ஒரு பொறிமுறை  தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 ஜனாதிபதி செயலகத்தினால் வாராந்தம் நடத்தப்படும் செய்தியாளர்  சந்திப்பு நேற்று இணையவழியில் நடைபெற்றது.  இதில் நேற்றைய தினம் உர விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டது.  இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

 அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரத்தை கைவிட்டு காபன் உரத்தை கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டது.  அப்போது விவசாயிகள் எமக்கு உரம் தாருங்கள் என்று கேட்க ஆரம்பித்தனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.    நாங்கள் உரத்தை பெற்று கொடுத்ததன் பின்னர் தற்போது உரத்தின் தரம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.  அதாவது இந்த எமது செயற்திட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. உற்பத்தி குறைவடைந்தால்  அரசாங்கம் நட்டஈடு வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறது.  இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுகின்றது. இந்த உரம் தரமானது  என்பதை நாங்கள் உறுதிபடுத்துகின்றோம். அந்த வகையிலேயே நாங்கள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.  வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பாக பேசப்படுகிறது.  அது பகிரங்கமான கேள்வி மனுக்கோரலின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது.  அந்த கேள்வி மனு கோரல் செயற்பாட்டில் அதிகாரிகளே பங்குபற்றுவார்கள்.  அதில் நானும் இராஜாங்க அமைச்சரும் உட்கார மாட்டோம்.

இம்முறை பெரும் போகத்தில் உற்பத்தி  வீழ்ச்சி அதாவது அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதற்கு நாங்கள் நட்டஈடு வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறோம்.  இது தொடர்பாக கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படும்.  சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரசாயன உர பாவனையில் எந்தளவு தூரம் விரயம் இடம் பெறுகின்றது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதாவது பயிருக்கு இடுகின்ற உரத்தில் கிட்டத்தட்ட 70 வீதமான உரம் வெறுமனே வீண் விரையம் ஆகிறது.  அது சுற்றாடலடனும்  நீருடனும்   இணைந்து கொள்கிறது. இதனால் எந்தளவு தூரம் தீங்கு கிடைக்கும் என்பது தொடர்பாக நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பாக தொடர்ச்சியாக அறிக்கைகளை விடுத்து கொண்டிருக்கின்றது. 

 இந்த பின்னணியிலேயே இந்த முறையை மாற்றி அமைப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்தது.  இது கொள்கை ரீதியான தீர்மானமாகும்.   எனவே இதன் நல்ல பக்கம் குறித்து அனைவரும் பேச வேண்டும்.  இதன்  மற்ற பக்கங்கள் பற்றி மட்டுமே அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.  இதில் இருக்கின்ற நல்ல பக்கம் குறித்தும் பேச வேண்டும்.   தற்போது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள நனோ நைட்ரஜன் உரத்தின் தரம் குறித்தும் பேசுகின்றனர்.  ஆனால் இரசாயன உரத்தில் காணப்படுகின்ற தீமைகள் தொடர்பில் யாரும் பேசுவதில்லை. இங்கு  வீண்விரயம் என்ற விடயத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படுகின்றது.

கேள்வி எனினும் ஒரு குறிப்பிட்ட அளவில் கிருமி நாசினிகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறதே?

பதில்   இலங்கையில் கிழங்கு வெங்காயம் போன்ற பயிர்ச் செய்கையின்போது சில நோய்கள் அவற்றுக்கு ஏற்படுவதுண்டு.  அவற்றை சமாளிப்பதற்கு இந்த காபன் உரம் போதுமானதாக இல்லை. எனவே ஒரு சிறிய அளவு கிருமி நாசினிகளை இறக்குமதி செய்து விவசாய அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் பொதுவான சந்தைக்கு விடமாட்டோம். எங்களிடமே இருக்கும். யாருக்காவது தேவைப்பட்டால் அது தேவையான அளவு கண்காணிப்பு பரிசோதனைகளின் பின்னர் வழங்கப்படும். அது மிகவும்  வீரியம் குறைந்தளவிலான கிருமிநாசினிகள்.   அதாவது  

கேள்வி இலங்கைக்கான சீனத் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை  புதன்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதன்போது சீனக் கப்பல் தொடர்பாக பேசப்பட்டதா ?  

பதில் பிரதமர்   சர்வதேச ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமாகும்.  அதன் அடிப்படையிலேயே சீன தூதுவர் உடனான சந்திப்பு நடைபெற்றது.  இதனை ஒரு விடயத்துக்காக மட்டும் நீங்கள் வரையறுத்து விட வேண்டாம்.  ஆனால் இந்த சந்திப்பின்போது பிரதமர் தெளிவாக ஒரு சில விடயங்களை குறிப்பிட்டார்.  

அதாவது எக்காரணம் கொண்டும் இந்த சீன உர கப்பலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்காது. இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.  மாறாக தரமான எமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான உரத்தை அனுப்பும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.  இந்த விடயத்தை தெளிவாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரிடம் அறிவித்திருக்கின்றார்.  இது மிகவும் சுமுகமாக நடந்து சந்திப்பாகும்.   ஆனால் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இதன்போது பிரதமர் தெளிவாக அறிவித்து இருக்கிறார்.  அந்தவகையில் அந்த சீன கப்பல்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  மீண்டும் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்படும். 

கேள்வி இந்த சீன நிறுவனத்தின்   உள்நாட்டு முதுகவர் நிறுவனத்தின் தலைவர் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.  அப்படிப் பார்க்கும்போது இதில் ஏதாவது சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறதே? 

 பதில் சீன நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர்,  பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரியின் உறவினர் என்பது குறித்து எனக்கு தெரியாது.  சிலவேளை அவ்வாறு இருக்கலாம்.  ஆனால் இந்த சீன நிறுவனத்துக்கு முறையான கேள்வி மனுக்கோரல்களின் அடிப்படையிலேயே இந்த உரத்தை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.  கேள்வி மனுக்கோரலில் 22 நிறுவனங்கள் பங்கு பெற்றிருந்தன.  அதில் நான்கு நிறுவனங்கள் எமது தரத்திற்கு  உரத்தை விநியோகிக்க முன்வந்தன.  ஆனால் அதில் மூன்று நிறுவனங்கள்  நூறு வீத கொடுப்பனவை உடனடியாக எதிர்பார்த்தன.  இந்த நிலையிலேயே இந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.  ஆனால் அதன் தரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கின்றோம்.    இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெறுகிறது. 

கேள்வி விவசாய அமைச்சில் இருந்து பேராசிரியர் புத்தி மாரம்பே    நீக்கப்பட்டமை தொடர்பில்? 

பதில்  பேராசிரியர்  புத்தி மாரமபேவை நானே சேவையில் இணைத்துக் கொண்டேன்.  ஆனால் இவர் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் இந்த இரசாயன உரமற்ற விவசாயம் என்ற கொள்கையை விமர்சித்து வந்தார்.  இது அரசாங்கத்தின் கொள்கை, மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை தீர்மானமாக இருக்கின்றது.  அதனை இவர் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கின்றார்.  பின்னர் நாம் தேடிப் பார்த்தபோது இவர் சில ரசாயன உர நிறுவனங்களின் சேவை வழங்குனராக செயல்பட்டு இருக்கின்றார்.  எனவே அவ்வாறு இரசாயன நிறுவனங்களின் சேவை வழங்குனராக இருக்கின்ற ஒருவரை இரசாயன உரமற்ற   விவசாயத்துறையை கட்டியெழுப்பும் கொள்கை செயற்பாட்டில் வைத்துக்கொள்வது  முரண்பாடாக இருக்கின்றது.  அதனால் அவரை அந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு நான் ஆலோசனை வழங்கினேன்.  அதன்படி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  அவர் அவ்வாறு இரசாயன உர நிறுவனங்களின் சேவை வழங்குனராக  இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் அவரிடம் மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கின்றேன்.  இது தொடர்பாக நான் அவருடன் பல தடவை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றேன். 

கேள்வி இரசாயன உரத்தை கைவிடுவதற்கான    தீர்மானம் எடுத்தபோது அதற்கு அரசாங்கம் தயாராக இருந்ததா?  

 பதில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை அறிவித்தார்.  ஏற்கனவே எமது கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட தீர்மானமாக இது இருந்தது.  அப்போது நாடு சிறுபோகத்தில்   இருந்தது.  பெரும்போக பயிர்ச்செய்கை ஒக்டோபர்  மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.  எனவே எமக்கு ஐந்து மாதங்கள் இருந்தன.  இந்த ஐந்து மாத காலத்தில் நாங்கள் இதனை செய்து கொள்வதற்கான அவகாசம்   இருந்தது.  எனவே தயார்படுத்தலில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.  இலங்கையில் 16 லட்சம் ஹெக்டெயார்   காணியில் விவசாயம் செய்யப்படுகிறது.  இவற்றுக்கு உரத்தை  பெற்றுக்கொடுப்பதற்கு ஐந்து மாதங்கள்  போதுமானது.  

 ஆனால் எம்மிடம் ஒரு குறைபாடு இருந்தது.  அதாவது இதனை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, அதாவது சந்தைப்படுத்துவதற்கு எம்மால் முடியாமல் போனது.  குறிப்பாக இந்த இரசாயன உரத்தின் தீமைகள் தொடர்பாக சுகாதார அமைச்சும் சுற்றாடல் அமைச்சின் அதிகளவில் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இது தொடர்பாக எதுவும் செய்யவில்லை.  எதுவும் பேச பேசவும் இல்லை.  அது எமது பக்கத்தில் மிகப்பெரியதொரு குறைபாடாக காணப்பட்டது. 

 உதாரணமாக நீங்கள் வடக்கு-கிழக்கு நிலைமையை எடுத்து பாருங்கள்.  வடக்கு கிழக்குக்கு 2010ஆம் ஆண்டு வரை  ரசாயன உரம் செல்லவில்லை. என்று அந்த மக்கள் என்னிடம் கூறுகின்றனர்.  இலங்கை அதிகளவான விவசாய உற்பத்தி வடக்கு கிழக்கில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் அவர்களுக்கு தற்போது கூட இந்த இரசாயன உரம் தேவையில்லை.  காபன்  உரமே போதுமானது என்பதை கூறுகின்றனர்.   95 வீதமானோர் வடக்கு கிழக்கில் தற்போது பயிர் செய்துவிட்டனர்.  எனவே அங்குள்ள நிலைமையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

கேள்வி விளைச்சல் குறைவடைந்தால்  இழப்பீடு வழங்கப்படும். அப்படியானால் நுகர்வோருக்கு என்ன நடக்கும்? 

 பதில் இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அதற்கான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும்.  ஆனால் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படாது   என்றே   என்றே நாங்கள் கருதுகிறோம்.  ஒருவேளை 10 சதவீதம் அல்லது 15 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டால் அதற்கான நட்டஈட்டை நாங்கள் பெற்றுக் கொடுப்போம். 10 அல்லது  15 வீத வீழ்ச்சி ஏற்பட்டாலும் அது நுகர்வோரை பாதிக்காது. 

கேள்வி சீன உரக் கப்பல்  தொடர்பான அரசாங்கத்தின் இறுதி முடிவு என்ன

 பதில் எமது இறுதி முடிவு மிகவும் தெளிவானது.  நாங்கள் அந்த சீன உரக்கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்.  அதனை பொறுப்பேற்க மாட்டோம்.  அதனை மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம்.  அங்கு சென்ற பின்னர் சரியான முறையில் தரத்திலான உரத்தை அந்த நிறுவனம் எமக்கு மீண்டும் வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.  சீனாவிடமிருந்து உரம் பெறுவதை  நாங்கள் நிராகரிக்க வில்லை.  மாறாக தரமான ஒரு உரத்தையே எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில் சீனா தரமான உரத்தை அனுப்பினால்  அதனை நாங்கள் பெற்றுக் கொள்வோம்.  மாறாக இந்த உர கப்பலை  பொறுப்பேற்க மாட்டோம்.  காரணம் அதன் மாதிரிகளை பரிசோதித்தபோது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கேள்வி மூன்றாம் தரப்பின் ஊடாக பரிசோதனை செய்வது தொடர்பாக பேசப்படுகிறதே ? 

பதில் இது தொடர்பாக ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  அதாவது மூன்றாம் தரப்பினர் இதனை பரிசோதனை செய்து  பார்க்கலாமா  என்று கோரப்பட்டது. அதனை நாங்கள் மறுக்கவில்லை.  ஆனால் மூன்றாம் தரப்பினர் பரிசோதனை செய்தாலும்  நாங்கள் எமது இரசாயன கூடங்களில் அவற்றை பரிசோதனை செய்து அதன் தரத்தை பரீட்சித்துப் பார்ப்போம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47