ஞானசாரதேரர் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் கடும் கண்டனம்

Published By: Digital Desk 3

29 Oct, 2021 | 09:38 AM
image

(நா.தனுஜா)

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கும் அந்தச் செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படாமைக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்களவர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரதேரர் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை அனைவரும் அறிந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டவராவார். 

அவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கேலிக்கூத்தானதும் நகைப்பிற்குரியதுமான விடயமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின்றி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு நியாயமானவையாக அமையும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் தற்போது பலதரப்பட்டவர்களாலும் விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கேசரியிடம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குறித்த செயலணியின் தலைவராக ஞானசாரதேரர் நியமிக்கப்பட்டமை கடும் கண்டத்திற்குரியது என்று சுட்டிக்காட்டினார். 

அதேவேளை தமிழ் பிரதிநிதிகளின்றி இந்த செயலணி உருவாக்கப்பட்டிருப்பதிலிருந்து ஜனாதிபதி இன்னமும் திருந்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்தின் பல்வேறு அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் ஞானசாரரின் தலைமையில், தமிழ் உறுப்பினர்கள் எவருமின்றி 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற புதிய ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம். இது வெறுமனே நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான கண்துடைப்பு நடவடிக்கையே தவிர, இந்தச் செயலணியினால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

குறிப்பாக தமிழர்களின்றி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு நியாயமானவையாக அமையும் என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. இது இனங்களுக்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவிப்பதற்கு வழிவகுக்குமே தவிர, ஒருபோதும் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயத்தை வழங்காது.

இனத்துவேசத்தை விதைப்பதன் ஊடாக எந்தவொரு விடயத்தையும் சாதித்துவிடலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேசத்தை விதைப்பதன் ஊடாக உண்மையான பிரச்சினைகளை மறக்கடித்துவிடலாம் என்றும் அதன்மூலம் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வென்றுவிடலாம் என்றும் அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய உத்திகள் சிங்களவர்கள் மத்தியில் எடுபடாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இதுகுறித்துக் கேசரிக்குக் கருத்துத்தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், 'ஞானசாரதேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி செயலணியானது வெளிப்படையாக அரங்கேற்றப்படுகின்றதொரு கண்துடைப்பு நாடகம் மாத்திரமேயாகும். 

பெரும்பான்மையின சிங்களவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு அனைத்து இனமக்களுக்கும் பொதுவானதாக அமையமுடியும்? குறிப்பாக தமிழர்களுக்குரிய தேசவழமைச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு முக்கிய விடயங்கள் படிப்படியாக இல்லாமல்செய்யப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக மாகாணசபைத்தேர்தல்களும் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருகின்றன. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் பிளவுகளைத் தோற்றுவித்து, இலங்கையைத் தனிச்சிங்கள - பௌத்த நாடாக மாற்றியமைப்பதற்கான பிரகடனமாகவே இந்த 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணியைக் கருதவேண்டியிருக்கின்றது' என்று கூறினார்.

மேலும் தமிழர்களின் பிரதிநிதித்துவமின்றி உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி செயலணி தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வினவியபோது அவர் கூறியதாவது:

'தற்போது நாட்டிலுள்ள 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கலகொட அத்தே ஞானசாரதேரர் தலைமையில் இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டிருப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்ற சட்டங்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதே போதுமானதாக இருக்கும். 

அதாவது ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை அனைவருக்கும் சமத்துவமான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது. ஆனால் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற புதிய செயலணியை உருவாக்கி, அதற்குத் தலைவராக இலங்கையின் சட்டங்களை மதிக்காத ஒருவரை நியமித்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது எதிர்வருங்காலங்களில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். 

ஏற்கனவே உரப்பற்றாக்குறை உள்ளடங்கலாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சூழ்நிலையில், அவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது' என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 'சிங்களவர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரதேரர் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை அனைவரும் அறிந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டவராவார். 

அவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் கண்டனத்திற்குரியது என்பதுடன் மறுபுறம் நகைப்பிற்குரியதுமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேசரியிடம் தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையைப் பொறுத்தமட்டில் நாட்டிலுள்ள சட்டங்கள் அனைவருக்கும் சமத்துவமான வகையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவம் மற்றும் பாரம்பரியத்தை இல்லாமல்செய்து பெரும்பான்மையினத்தவரின் விருப்பத்திற்கு அமைவாகவே அனைவரும் செயற்படவேண்டும் என்பதை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவரின் அபிலாஷைகளை நிராகரிப்பதாகவே இந்தப் புதிய செயலணியின் செயற்பாடுகள் அமையும். ஏனெனில் இத்தகைய செயலணிகள் உருவாக்கப்படும்போது அவை இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஸ்தாபிக்கப்படவேண்டும். 

ஆனால் இந்தப் புதிய செயலணியின் உறுப்பினர்களில் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில் சிங்களவர்களும் பெயருக்கு சில முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் தமிழர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

எனவே இது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் உண்மையான தாற்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய செயலணி என்பதுடன் இதன்மூலம் அரசாங்கத்தின் இனவாதப்போக்கையும் தௌ;ளத்தெளிவாக விளங்கிக்கொள்ளமுடிகின்றது என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04