இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : ஆப்கானிஸ்தான் - ஸ்கொட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Published By: Gayathri

25 Oct, 2021 | 04:37 PM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் 2 ஆம் குழுவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் விளையாட ஆரம்பித்த போதிலும் அவை தகுதிகாண் சுற்றுகள் மூலம் நீண்ட தூரம் பயணித்தே பிரதான சுற்றில் விளையாடி வந்துள்ளன.

இம் முறை சுப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நேரடியாக தகுதிபெற்ற அதேவேளை, ஸ்கொட்லாந்து பிராந்திய மற்றும் முதலாம் சுற்றுகளில் விளையாடி சிறந்த பேறுபேறுகளுடன் தகுதிபெற்றுக்கொண்டது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஸ்கொட்லாந்து 2007 இலும் ஆப்கானிஸ்தான் 2010 இலும் முதல் தடவையாக விளையாடியிருந்தன. 

உலகக் கிண்ணத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடியுள்ளபோதிலும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளன.

இந்த இரண்டு அணிகளினதும் அண்மைக்கால பெறுபேறுகளின் பிரகாரம் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாகத் தென்படுகின்றது. 

ஆனால், எத்தகைய சவாலையும் முறியடிக்கக்கூடிய அணி என்பதை பங்களாதேஷுடனான முதல் சுற்று வெற்றிமூலம் ஸ்கொட்லாந்து நிரூபித்துள்ளது.

சுப்பர் 12 சுற்றுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடிய போதிலும் சொந்த நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அவ்வணி வீரர்களால் நிம்மதியாக தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. 

சில வீரர்கள் தி ஹண்ட்ரட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றபோதிலும் ஏனையவர்கள் போட்டிகளின்றி வெறுமனே பயிற்சிகளில் மாத்திரம் ஈடுபட்டுவந்தனர்.

எவ்வாறாயினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஈட்டிய வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

மேலும் அதன் ஆரம்ப வீரர்களான ஹஸ்ரத்துல்லாஹ் ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்ததைப் போன்று இன்றைய போட்டியிலும் பிரகாசிப்பார்கள் எனவும் அஸ்கர் அப்கான் தனது அனுபவத்தின் மூலம் சிறந்த பங்களிப்பை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுபவசாலியான மொஹம்மத் நபியின் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் சாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்து எந்தவொரு தனிப்பட்ட வீரர்களிலும் தங்கியிருக்கவில்லை. நடந்து முடிந்த போட்டிகளில் வெவ்வேறு வீரர்களினது ஆற்றல்களுடனேயே ஸ்கொட்லாந்து வெற்றிபெற்று வந்துள்ளது.

அணித் தலைவர் கய்ல் கோட்ஸர், 31 வயதான ஜொஷ் டாவி, ப்றட் வீல், மார்க் வொட், ரிச்சி பெரிங்டன், ஜோர்ஜ் மன்சே ஆகியோர் தமது அணியின் வெற்றிக்காக ஆக்ரோஷத்துடன் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இந்த 2 அணிகளும் சந்தித்த 6 சந்தர்ப்பங்களிலும் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. இரண்டு அணிகளும் 2016 க்குப் பின்னர் இன்றைய தினமே ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

அணிகள்

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், அஸ்கர் அப்கான், மொஹம்மத் நபி (தலைவர்), கரிம் ஜனத், கல்பாதின் நய்ப், ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

ஸ்கொட்லாந்து: ஜோர்ஜ் மன்சே, கய்ல் கோட்ஸர் (தலைவர்), மெத்யூ க்ரொஸ், ரிச்சி பெரிங்டன், கெலம் மெக்லியொட், மைக்கல் லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், ஜொஷ் டாவி, சபியான் ஷெரிப், ப்றட் வீல். 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35