வவுனியாவிற்குள் மேலும் 3  சிங்கள கிராமங்கள் “வவுனியா வடக்கு நிர்வாக எல்லை நீளுகிறது: குடிப்பரம்பல் மாறுகிறது”

Published By: Gayathri

24 Oct, 2021 | 04:56 PM
image

ஆர்.ராம்

நாட்டில் கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் தாராளமாக இருக்கையில், கட்டமைக்கப்பட்ட, திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் மற்றொரு அங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் வடக்கின் வாயிலான வவுனியா மாவட்டத்தில் நகர்த்தப்பட்டிருக்கின்றது.

கனுகேவெவ, கம்பிலிவெவ, வெஹரதென்ன ஆகியன வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்டதும் கெப்பிற்றிப்கொல்லாவ, பதவியா பிரதேச செயலாளர் பிரிவு நிர்வாகத்திற்குச் சொந்தமானதும், வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது மூன்று சிங்கள குடியேற்றக் கிராமங்கள். 

இம்மூன்று சிங்கள குடியேற்றக் கிராமங்களையும் வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் நிர்வாகத்திற்கு உட்பட்டதாகவுள்ள வெடிவைத்தகல்லு கிராமசேவகர் பிரிவுடன் இணைத்துக் கொள்வதற்காகவே அனைத்து அரச நிருவாகச் செயற்பாடுகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 

போரிற்கு பின்னரான சூழலில் வட மாகாணத்தினதும் வட மத்திய மாகாணத்தினதும் எல்லைப்பகுதியான மாமடுவ முதல் கொக்குத்தொடுவாய் வரையில் சிங்கள குடியேற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாராளமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அரச இயந்திரத்தின் பரிபூரண ஆசீர்வாதமும் காணப்படுகின்றது.

 

மேலும் இவ்விதமான  செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசாங்கங்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணப்படவில்லை. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். முதல் தற்போதை ஜனாதிபதி ஜீ.ஆர் வரையில் ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கின்றனர்.

மேற்படி எல்லைப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதை எந்தவொரு அரசாங்கமும் முக்கியமான பணியாகவே கொண்டிருக்கின்றது. 

ஏனென்றால், குறித்த எல்லைப்பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் ஊடாக மூன்று விடயங்களை சாதிக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

தமிழர்களின் தாயக பூமியான வடக்கு, கிழக்கு இணைவை நிரந்தரமாக பிரித்தல்

வடமத்திய மாகாணத்தின் எல்லையை நீட்டித்து கடற்பரப்பினை பெற்றுக்கொடுத்தல்

வடக்கு மாகாண குடிப்பரம்பலை மாற்றியமைத்தல்

இந்த இலக்குகளை அரசாங்கம் அடைவதற்காக மகாவலி அதிகாரசபை, வன இலாகா திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகியன முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், தற்போது கனுகேவெவவில் உள்ள 600 குடும்பங்களையும், கம்பிலிவெவ மற்றும் வெஹரதென்ன ஆகிய பகுதிகளில் உள்ள 430 குடும்பங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வெடிவைத்த கிராம சேவகர் பிரிவுடன் இணைக்கப்படவுள்ளது.

கடந்தவாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட எல்லை நிர்ணயக் கூட்டத்தின் போதும், அதனையடுத்து நடைபெற்ற பொதுநிர்வாக அமைச்சுடனான கூட்டத்தின்போதும் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இதற்கான அனைத்துச் செயற்பாடுகளும் ஏறக்குறைய பூர்த்தி அடைந்துவிட்டது.

மேற்படி மூன்று பகுதிகளையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் கொண்டுவருவதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் அப்போது வவுனியா மாவட்ட செயலாளராக இருந்த தற்போதைய வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துசேன.

கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். 

இதன்போது, கனுகேவெவ, கம்பிலிவெவ மற்றும் வெஹரதென்ன ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டிருந்த மக்களை தேரர்கள் சகிதம் அழைத்து வந்தார் அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர். 

கெப்பிற்றிக்கொல்லாவ, பதவியா பிரதேச செயலாளர் பிரிவினுள்ளும், அநுராதபுரம் மாவட்ட செயலகத்தினுள்ளும் தமது நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கடினமாக இருக்கின்றது என்ற அவர்களின் மனக்குறைகளைக் கையிலெடுத்துக்கொண்டவர் அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் பிரஸ்தாபிக்கச் செய்தார். 

அதன் விளைவு, கனுகேவெவ, கம்பிலிவெவ மற்றும் வெஹரதென்ன ஆகிய பகுதி மக்களை ‘கிட்டிய நிர்வாகப் பிரிவிற்குள் உள்வாங்குங்கள்’ என்று ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டார். இந்தக் கூற்று வவுனியா மாவட்டச் செயலகத்தின் செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலிலும் உள்வாங்கப்பட்டது. 

அதனடிப்படையில் தற்போது ‘ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ என்ற தோரணையில் நிர்வாகப்பிரிவு மாற்றத்திற்கான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்பின்னால் காணப்படும் ‘திட்டமிட்ட, கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை’ வவுனியா மாவட்ட செயலகத்தினதும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினதும் தமிழ் அரச அதிகாரிகள் நன்கறிந்திருந்தும் ‘ஜனாதிபதியின் உத்தரவு’ என்பதால் சூழ்நிலைக் கைதிகளாக்கப்பட்டு மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளனர். 

அதேநேரம், இம்மூன்று பகுதிகளையும் வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவுடன் இணைப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பது இங்கு எழும் முக்கியமான கேள்வியாகும். 

வெடிவைத்தகல்லு கிராம சேவர்கள் பிரிவு 93.4 துரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு வெடிவைத்தகல்லு, கோயிற்குளம், ஊற்றுக்குளம் ஆகிய மூன்று கிராமங்கள் காணப்பட்டிருந்தன. 

இந்நிலையில் தான் வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் 2013 இல் மகாவலி அதிகார சபை தனது கைவரிசையை காட்டியது.

வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம், வெடிவைத்தகல்லிற்கு அண்மித்து அநுராதபுர மாவட்டத்திற்கு சொந்தமாகவிருந்த போகஸ்வெவ-01, போகஸ்வெவ-02,  கம்பிலிவெவ, வெஹரதென்ன ஆகிய பகுதிகளில் மொத்தமாக 478குடும்பங்களைக் குடியேற்றியது மாகாவலி அதிகாரசபை. 

பின்னர், 2017 இல் போகஸ்வெவ-01, போகஸ்வெவ-02,  கம்பிலிவெவ, வெஹரதென்ன ஆகிய நான்கு கிராமங்கள் பகுதி அளவில் வெடிவைத்தகல்லு கிராமசேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டு அவற்றின் நிர்வாகம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிடத்தில் மகாவலி அதிகார சபையினால் கையளிக்கப்பட்டது. 

இந்த நிலைமையானது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மைக் கட்சிகளின் எழுச்சிக்கு வித்திட்டிருக்கின்றது. 2011ஆம் ஆண்டு வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் 2,253 வாக்குகளைப் பெற்று 8ஆசனங்களையும், சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள் 2,107வாக்குகளைப் பெற்று 5ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

வெடிவைத்தகல்லுடன் நான்கு சிங்கள கிராமங்கள் பகுதி அளவில் இணைக்கப்பட்டதன் பின்னர் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் 5,175வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும் சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள் 4813 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களையும் பெற்றுள்ளன. 

இந்நிலையில், தற்போதைய முனைப்பான நடவடிக்கைகளின் அடிப்படையில் கனுகேவெவ, கம்பிலிவெவ, வெஹரதென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,030 குடும்பங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். 

ஒரு குடும்பத்திற்கு தலா நால்வர் என்று கணக்கிட்டாலும் 4,120 சிங்களவர்கள் பிரதேச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர். அவ்வாறாயின், வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியுரிமை அடுத்த தேர்தலில் யாரிடம் இருக்கப்போகின்றது என்பது பற்றி இங்கு சுட்டிக்கூற வேண்டிய அவசியமில்லை. 

இதனைவிட, வவுனியாவில் நாமல்கம, நந்திமித்திரகம, சலினிகம, கலாபொகஸ்வெவ என்று புதிய சிங்கள குடியேற்றக் கிராமங்களின் பட்டியல் நீள்கிறது. 

இந்த விடயங்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாலும், சிவில் அமைப்பினராலும் வெறுமனே ‘வடக்கின் அல்லது வவுனியாவின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கை’ என்று தொனிப்பொருளில் அடையாளப்படுத்தப்பட்டு விட்டன. 

ஆனால் நிரந்தர முற்றுப்புள்ளியை வைப்பதற்கான எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அதன் விளைவே தற்போது கனுகேவெவ, கம்பிலிவெவ, வெஹரதன்ன பகுதி சிங்களவர்களை வவுனியாவுக்குள் புகுத்தும் துணிகரத்திற்கு வித்திட்டுள்ளதுஎன்பதே யாதார்த்தம். 

ஆகவே, இந்த விடயத்தினையும் வெறுமனே ஒரு குடிப்பரம்பல் மாற்றும் பிரச்சினையாக மட்டும் அடையாளப்படுத்தி விட்டோ அல்லது பாராளுமன்றில் உரைகளை ஏட்டிக்குப் போட்டியாக ஆற்றிவிட்டோ அமைதியானால் இன்னும் பல ‘கமே’க்களும் ‘வெவ’க்களும் நிர்வாக எல்லைக்குள் வந்துகொண்டு தான் இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13