அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. 

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், அவுஸ்திரேலிய அரசாங்கமானது மிகுந்த வெளிப்படையான மனிதாபிமான கொள்கைகளை கொண்டுள்ளது எனவும் உண்மையான குடியேற்றவாசிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சில குற்றவாளிக்குழுக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலை அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமல்லாது முழுப் பிராந்தியத்திற்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை தமக்கு வழங்குவது தொடர்பில் தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்.