(லியோ நிரோஷ தர்ஷன்)

முறையான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு பதிலாக பழிவாங்குவதில் எவ்விதமான பலனும் ஏற்பட போவதில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன , அநீதியான வரி சுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியாவிடின் ஜனாதிபதி பதவி எதற்கு எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். 

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

வற் வரி விதிப்பு சட்ட விரோதமானது என உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே சட்டத்திற்கு முரணாக அறவிடப்பட்ட வற் வரி மக்களுக்கு மீண்டும் சென்றடைய வேண்டும். ஆனால் அரசாங்கம் வற் வரி கொள்ளையை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் அதனை திருத்தங்களுடன் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளது. 

கூட்டு எதிர் கட்சி இதனை வன்மையாக கண்டிப்பதோடு பாராளுமன்றத்தில் அதற்கு எதிராக செயற்படவும் தேவைப்படின் மீண்டும் நீதி மன்றம் செல்லவும் தயாராக உள்ளது. அப்பாவி நோயாளிகளுக்கு வற் வரி விதிக்கும் அரசாங்கம் சிகரட்டிற்கு வரியை அதிகரிக்குமாறு கூறினால் தடுமாறுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது பழிவாங்கல்களை முன்னெடுப்பதால் எவ்விதமான பலனும் இல்லை. அவ்வாறு செய்வதாயின் நல்லாட்சி என எவ்வாறு கூற முடியும் அதற்கு ஜனாதிபதி பதவி ஒன்று எதற்கு ?

எனவே சட்ட விரோதமாக அறவிடப்பட்ட வற் வரியை மீண்டும் செலுத்த வேண்டும். அதே போன்று கடந்த காலத்திற்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை நிறைவேற்ற கூடாது . இதனை மீறி செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை கூட்டு எதிர் எடுக்கும்.மேலும் இன்று குழப்பகரமான நிலையில் அனைத்து விடயங்களும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.