தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் அடங்கிய உரத்துடன் சீன கப்பல் நாட்டை நெருங்குகின்றது - ரஞ்சித் மத்தும பண்டார

Published By: Digital Desk 3

17 Oct, 2021 | 12:01 AM
image

(நா.தனுஜா)

உரப்பற்றாக்குறையின் விளைவாக எமது நாட்டின் சராசரி நெல்லுற்பத்தியில் 40 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வுகூறப்படும் அதேவேளை, விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் உள்ளமை கண்டறியப்பட்டதன் பின்னரும்கூட, அந்த உரத்தை ஏற்றிய கப்பல் மீண்டும் நாட்டை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்கமுடியாத, தீங்கேற்படுத்தும் உரத்தை நாட்டிற்குள் அனுமதிக்கின்ற விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களின் விளைவாக நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒருபங்கிற்கும் அதிகமாக உள்ள விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு அவசியமான இரசாயன மற்றும் சேதன உரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முன்னொருகாலத்தில் அரிசிக்கான தேவையில் 40 சதவீதம் மாத்திரமே எமது நாட்டில் உற்பததிசெய்யப்பட்டதுடன் 60 சதவீதமானவை சீனாவிலிருந்தும் வியட்நாமிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.

இருப்பினும் டி.எஸ்.சேனாநாயக்க உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியினால் சுயதேவைப்பூர்த்தியடைந்த நாடாக இலங்கை மாற்றப்பட்டது. ஆனால் மீண்டும் வரலாற்றின் மோசமான பக்கங்களைநோக்கி நாட்டைத்திருப்பும் வகையிலான நடவடிக்கைகளிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.

அதேபோன்று அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் எமது நிலத்திற்கும் மனித உடலுக்கும் தீங்கேற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் இருப்பது பரிசோதனைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சீனாவிலிருந்து அந்த உரத்தை ஏற்றிவந்த கப்பல் திருப்பியனுப்பப்பட்டுவிட்டதாக விவசாயத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் அந்த உரத்தில் தீங்கேற்படுத்தக்கூடிய எந்தவொரு கூறுகளும் இல்லை என்று சீனா மறுத்திருந்த நிலையில், தற்போது அந்த உரத்தை ஏற்றிய ஹிப்போஸ்பிரிற் என்ற கப்பல் மீண்டும் இலங்கையைநோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

ஆகவே இவற்றிலிருந்து அந்நிய சக்திகளின் தேவைகளுக்கு அமைவாகவே எமது நாடு ஆளப்படுகின்றது என்பது தெளிவாகியுள்ளது. உண்மையில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்கமுடியாத, தீங்கேற்படுத்தும் உரத்தை நாட்டிற்குள் அனுமதிக்கின்ற விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உடனடியாகப் பதவி விலகவேண்டும்.

முழுமையாக சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்தி உலகின் எந்தவொரு நாடும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஒட்டுமொத்த உலகத்தினாலும் செய்யமுடியாத விடயத்தை எம்மால் எவ்வாறு செய்யமுடியும்? போரை முடிவிற்குக்கொண்டுவந்துவிட்டால், எதனைவேண்டுமானாலும் செய்யமுடியுமா? இவ்வாறானதொரு நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாண்டதன் விளைவாகவே இப்போது 13,000 இற்கும் அதிகமானோர் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றார்கள்.

அந்த வரிசையில் பெருமளவான விவசாயக்குடும்பங்களையும் பலிகொடுப்பதற்கு ஏற்றவகையிலேயே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.

உரப்பற்றாக்குறையின் விளைவாக எமது நாட்டின் சராசரி நெல்லுற்பத்தியில் 40 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுகின்ற நாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அவ்வாறெனின், இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் கூறுகின்ற காரணத்தில் என்ன நியாயம் இருக்கின்றது? இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுமாத்திரமன்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தீங்கேற்படுத்தக்கூடிய கூறுகள் அடங்கிய உரத்தை எமது நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01