வேன் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக லொறி என்பன மோதி இடம்பெற்றுள்ள விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று  மாலை ஆனமடு சிலாபம் வீதியின் ஆண்டிகம சங்கட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இவ்விபத்தில் ஆனமடு தெபடவெவ பிரதேசத்தைச் சரத் எனும் 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்தில் உயிரிழந்த நபர் நேற்று  மாலை ஆனமடு திசையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சிலாபம் திசையில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே சிலாபம் திசையிலிருந்து வேன் ஒன்று வந்துள்ளதுடன் சங்கட்டிக் குளம் பிரதேசத்தில் வைத்து வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளதாகவும், அதேநேரம் சிலாபம் திசையிலிருந்து வந்த சிறிய ரக லொறி ஒன்று வேனின் பின்புறமாக மோதியுள்ளதாகவும்  இவ்விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உடனடியாக ஆனமடு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளதாகவும் ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் லொறியின் சாரதிகள் ஆனமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

ஆனமடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டப்ளிவ். எம். டப்ளிவ். டீ. விஜேகோனின் ஆலோசனையின் பேரில் இவ்விபத்து தொடர்பில் ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.