சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் : 27 ஆம் திகதி தீர்ப்பு : பிணையளிக்க சட்ட மா அதிபர் எதிர்ப்பு 

Published By: Digital Desk 2

09 Oct, 2021 | 09:50 AM
image

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  குற்றப் பகிர்வுப் பத்திரம்  மீதான வழக்கு விசாரணை நேற்று  மீளவும் விசாரணைக்கு வந்தது.

 

இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கானது மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்னவால், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணிகளை மட்டும் மன்றுக்குள் அனுமதித்து மூடிய அறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில தவணைகளாக ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட  எவருக்கும் இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்கவோ  அறிக்கையிடவோ நீதிபதி அனுமதியளிக்காத  நிலையில், குறித்த வழக்கு  நேற்றும் தொடர்ந்தது.

 கொரோனா நிலைமையை காரணம் காட்டி நீதிபதி ஊடகவியலாளர்களை நீதிமன்ற அறிக்கையிடலுக்காக திறந்த மன்றில் அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்ததாக இது தொடர்பில் ஊடகவியலாளர்கள், நீதிமன்ற பதிவாளரிடம் கேட்ட போது பதிலளிக்கப்பட்டது.

எனினும், சர்வதேச அவதானிப்புடன் கூடிய குறித்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பொது மக்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

 இவ்வாறான பின்னணியிலேயே இந்த வழக்கு  நேற்று மூடிய அறையில் விசாரிக்கப்பட்டது.

வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளின் தகவல்கள்  வழக்கு விசாரணையின் பின்னர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பிரகாரம், சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம்  அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகியோரே இவ்வழக்கின்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பில் நேற்று பிணை கோரப்பட்டுள்ளது.

 குறித்த இருவருக்கும்  குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை குற்றச்சாட்டுக்கள் வாசித்துக்காட்டப்படவில்லை.

அவர்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின்   கீழும்,  2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் 5 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார், குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 75 சாட்சியாளர்களின் பட்டியலையும் 17 ஆவணங்களையும் சட்ட மா அதிபர் இணைத்துள்ளார்.

  இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ, ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சட்டத்தரணி நிரான் அங்கிடெல், கனேசயோகன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் பிரசன்னமானது.  மத்ரசா பாடசாலை அதிபர் சலீம் கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தலைமையில் சட்டத்தரணிகள்  ஆஜராகினர்.

 மன்றில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு அமைய,  முதலில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ பிணை கோரி வாதங்களை முன் வைத்துள்ளார். அவர்  சுமனசேன எதிர் சட்டமா அதிபர் எனும்  உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய வழக்குத் தீர்ப்பை முன் வைத்து ஹிஜாசுக்கு பிணை கோரியுள்ளார்.

 குறிப்பாக குடிவரவு குடியகல்வு சட்டத்தை மையப்படுத்திய குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பில், முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக 6 இருப்பினும் அதன் பிரயோகம் அரசியலமைப்பை மீறுவதாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளதை ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ சுட்டிக்காட்டி பிணை கோரியுள்ளார்.

இதனையடுத்து மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, பல உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை மன்றில் முன்னிறுத்தி, நீதிமன்றின் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேறு நிறுவனங்களுக்கு  அதிகாரம் இல்லை எனவும், பிணையளிப்பது குறித்த செயர்பாடு நீதிமன்றின் செயற்பாடு என சுட்டிக்காட்டி பிணை கோரியுள்ளார்.

 இதன்போது நீதிபதியும் சில  கேள்விகளை தொடுத்து உயர் நீதிமன்றின் தீர்ப்பு, கீழ் நிலை நீதிமன்றங்களில்  பிரயோகிக்கப்படுவது தொடர்பில்  விளக்கம் பெற்றுள்ளார்.

 எவ்வாறாயினும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொல்சிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, பயங்கரவாத தடை சட்டம் என்பது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் எனவும், அதன் கீழ் குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றுக்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை எனவும் வாதிட்டுள்ளார்.

 இவ்வாறான நிலையில் விடயங்களை ஆராய்ந்துள்ள நீதிபதி, பிணைக் குறித்த தீர்ப்பை எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக கூறியுள்ளார்.

 இதனிடையே,  குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டாலும், ஏனைய வழக்குகளைப் போன்று நியாயமான வழக்கு விசாரணைக்கான ஆவணங்களில் பல இரு பிரதிவாதிகளுக்கும் இன்னும் கையளிக்கப்படவில்லை எனவும், நியாயமான வழக்கு விசாரணைக்கான குறித்த தேவை தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி வாதங்களை மன்றில் முன்வைப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற்பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 இதனைவிட,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரை உடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட  சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்தார். 

அது முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, தண்டனை சட்டக் கோவையின் 102, 113 (ஆ) ஆகிய அத்தியாயங்களின் கீழும்,  1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) ( உ) பிரிவின் கீழும்,  2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின்  3(1) ஆம் உறுப்புரையின் கீழும்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கான நம்பகரமான  தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டியே, அக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை மன்றில்  ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17 ஆலோசனை வழங்கினார்.

அதன்படி இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜாசிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் அவரை குற்றவியல் சட்டக்கோவை நடைமுறைக்கு அமைய நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்த நிலையிலேயே முதன் முறையாக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இவ்வாறான நிலையிலேயே சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17 வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஹிஜாஸுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அல் சுஹைரியா மத்ரஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இவ்வாறான பின்னணியிலேயே அவ்விருவருக்கும் எதிராக தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40