(புகழேந்தி)

கடல் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் கடலினுள் மூழு்கி இறந்துள்ள தகவல் அறிந்த பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் வீட்டில் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த வேலிப்பிள்ளை சண்முகம்(54) மற்றும் அவரது மனைவி திருமதி யோகேஸ்வரி சண்முகம்(45) ஆகியோர்களே இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இரு சகோதரர்கள் காணவில்லையென கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ஜந்து பேர்கள் பாசிக்குடா கடலுக்கு குளிக்கச் சென்றதாகவும் அவர்கள் கடல் நீரில் மூழ்கி காணமால் போயுள்ளதாகவும் ஏனைய மூவர்களும் மீனவர்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் சதீஸ்குமார் வயது (20) மற்றும் அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் வயது (18) ஆகியோர்களை கடலில் மூழ்கி காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை தேடும் பணியினை கல்குடா கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அவர்களது சடலம் கண்டெடுக்கப்படவில்லையெனவும் காப்பற்றப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.