அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த  தங்க நகைகளையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும்  கொள்ளையடித்து சென்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (15) நள்ளிரவு வேளையில் இடம்  பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கொங்கிறீட் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தமை பொலிசாருக்கு தெரியவந்து வெள்ளிக்கிழமை (16) இரவு மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரியும் சுகாதார பரிசோதகரான இ.மோகனதாஸன் என்ற இவ்வீட்டு உரிமையாளர் உட்பட குடும்ப அங்கத்தவர்கள் வியாழக்கிழமை (15) பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சித்தாண்டியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் வெள்ளிக்கிழமை 11 மணியளவில் சுகாதார பரிசோதகரின் ஆலையடி வேம்பில் உள்ள வீட்டுக்கு  உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்துள்ளது. 

 இதனையடுத்து உறவினர் சுகாதார பரிசோதகருக்கு கைதொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் உடன் சித்தாண்டியில் இருந்து  வீட்டுக்கு வந்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.  

பொலிசார், அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை  வருகை தந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதன்போது கொள்ளையர்கள் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்து அலுமாரியை உடைத்து தங்கச்சங்கிலிகள், வளையல்கள், காதணிகள்,கைச்செயின், மோதிரங்கள் ,கல் நகைகள் மற்றும் பென்ரன் உட்பட 16 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் கொள்ளையிட்டு சென்றுள்ளமை தெரியவந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இக்கொள்ளையர்கள் வீட்டின் சகல இடங்களிலும் தேடுதல் மேற்கொண்டு இவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

இக்கொள்ளை தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.