தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகின்றோம் : இது இலங்கையின் பலத்துக்கு வலுச்சேர்க்கும் - விசேட நேர்காணலில் இந்திய வெளியுறவு செயலர்

Published By: Priyatharshan

03 Oct, 2021 | 09:30 PM
image

ஒரு பரந்த நோக்கின் அடிப்படையில், இந்தியாவுடன் பெருமளவான கப்பல் பரிமாற்ற வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கம் போன்ற பரஸ்பர நன்மை அளிக்கும் திட்டங்களில் இந்திய முதலீடு மற்றும் பங்களிப்பின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்கமான தொடர்புகள் மேலும் வலுவடையும் என்று நாம் உணர்கின்றோம். அத்துடன் இதன் பயனாக எமது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளும் மேலும் வலுவடையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

Image

இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் பிரதான இலக்காக இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைகின்றது. பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் பெறுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்கவேண்டியது இலங்கையினதும் அந்நாட்டு மக்களினதும் அறிவை சார்ந்தது. 

பல்லாயிரமாண்டு கால நீட்சியைக்கொண்டதும் பரஸ்பர நன்மை அளிக்கக்கூடியதுமான எமது உறவுகளின் மீது நாம் முழுமையான நம்பிக்கையினை கொண்டிருக்கின்றோம் என்றும் இந்திய வெளியுறவு செயலர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி: கடந்த சில தசாப்தங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு சீரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதி கிளர்ச்சி இரு நாடுகளினதும் பின்னணியில் உள்ள நிலையில் தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இலங்கையுடனான வலுவான உறவுகளுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவத்தினை கொடுத்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் பிரதான  இலக்காக இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைகின்றது.

Image

கொவிட்-19 பெருநோயினால் ஏற்பட்டிருக்கும் இடை யூறுகள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களினால் முழு உலகமும் போராடிவரும் நிலையில் இந்த நிலைப்பாடானது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னரான நமது வரலாற்றினை மீட்டு பார்க்கும் போது, எமது இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்குவதாக, பிராந்திய சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான தந்திரோபாய சிந்தனைகளுடன் - மக்களுக்கிடையிலான வலுவான உறவு துல்லியமாக காணப்படும் சந்தர்ப்பங்களை நாம் அவதானிக்க முடியும். 

இவற்றின் அடிப்படையில் எமது நீண்ட கால உறவுகளை வலுவாக்கி அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உள்ளது.

இந்தியா –இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவானது உயர்மட்ட விஜயங்கள் மற்றும் தொடர்புகள் மூலமாக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. கடந்த சில வருடங்களாகவும் இவ்வாறான விஜயங்கள் தொடர்ந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தினை முறையே 2019 நவம்பர் மற்றும் 2020 பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தனர். 2020 செப்டெம்பர் பிரதமர் நரேந்திர மோடி மற் றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் வெற்றிகரமான மெய்நிகர் இருதரப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் 2020 நவம்பரில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் 2021 ஜனவரியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்கள்.

நான் வெளிவிவகார செயலராக பதவி யினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த முதலாவது விஜயத்தின்போது இரு நாடுகளுக் கிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை, இராஜதந்திர ஈடுபாடுகள், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் சார் ஒத்துழைப்பு, மற்றும் கலாசார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குவதனை இலக்காகக் கொண்டுள்ளேன். 

கொவிட் 19 நிலைமை சுமூகமடைந்துவரும் நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான - மக்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இது அமையும் என்று நான் நம்புகின்றேன். 

Image

கேள்வி: 1987 இந்திய –இலங்கை உடன்படிக்கை தற்போதும் செயற்பாட்டில் உள்ளதா? 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் படி இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றததே?

பதில்: மிகவும் முக்கியமான கடல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பங்காளராக உள்ள இலங்கை உட்பட சகல அயல் நாடுகளுடனும் அமைதியான உறவினைப் பேணுவதற்கு இந்தியா விரும்புகின்றது. இரு தரப்பினரதும் ஐக்கியம் மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான பரஸ்பர கௌரவத்தினை அடிப்படையாகக் கொண்டே இரு தரப்புக்கும் இடையிலான பன்முக ஈடுபாடுகள் அமைந்துள்ளன. வரலாற்று ரீதியில் ஆழமான நாகரிக மற்றும் கலாசார உறவுகளில் மிகவும் இறுக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதன் அடிப்படையில் இரு நாடுகளும் பரஸ்பர செழுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது நிலையான ஆர்வத்தினை கொண்டுள்ளன. எமது பகிரப்பட்ட வரலாற்றின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இலங்கையால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இந்தியா துரிதமாக பதிலளித்து செயற்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் காணப்பட்ட இலங்கையின் தலைமைத்துவத்தின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இச்செயற்பாடுகள் காணப்பட்டன.

மேலே கூறப்பட்டிருக்கும் அணுகுமுறையின் அடிப்படையிலேயே 13ஆவது திருத்தத்தின் மூலமான நன்மைகள் தொடர்பாக இந்தியாவின் நோக்கு அமைந்திருக்கின்றது. இதன் காரணமாகவே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் உட்பட ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை கோருகின்றோம். எமது நோக்கின் அடிப்படையில் இதன் மூலமாக பரந்ததும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஜனநாயக நாடாக இலங்கையின் பலத்துக்கு வலுச்சேர்க்கும்.

Image

கேள்வி: இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினையை இலங்கை எழுப்பி வருகின்றது. இது தொடர்பாக உங்களின் நோக்கு என்ன?

பதில்: மீனவர்களினதும் மீன்பிடி தொடர்பானதுமான விவகாரங்கள் உண்மையில் மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட வேண்டியவை. 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு கடல் குறித்த உடன்படிக்கைகளின் பிரகாரம் இவ்விடயம் தொடர்பான உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீன்பிடி வளங்களை பாதுகாத்தல் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமென கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக எமது நீண்ட கால நிலைப்பாட்டினை இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதற்கு நான் விரும்புகின்றேன். அதாவது மீனவர்கள் தொடர்பான விடயங்களில் மனிதாபிமான ரீதியான அணுகுமுறை ஒன்றினை அமுல்படுத்தி வன்முறைகளையோ அல்லது பலத்தினையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே தமது நீண்டகால நிலைப்பாடாகும்.

2021 செப்டெம்பர் 29ஆம் திகதி இலங்கை-–இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கலந்துகொண்டிருந்த சர்வதேச கடல் எல்லைக்கோடு தொடர்பான சந்திப்பிலும் 2020 டிசம்பர் மாதம் இந்தியா –இலங்கை மீன்பிடித் துறை செயலாளர்கள் இடையில் நடைபெற்ற கூட்டு செயற்குழு கூட்டத்தின்போதும் மிகவும் வினைத்திறன் மிக்க பேச்சுக்கள் இரு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அத்துடன் இலங்கை வசமுள்ள இந்திய மீன்பிடி படகுகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்கம் ஊடாக பொருட்களை கடத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: பரஸ்பர பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான பகிரப்பட்ட கடப்பாடுகளில் கடல் மார்க்கம் ஊடான கடத்தல் நடவடிக்கைகள் போன்ற நாடுகடந்த குற்றச் செயல்களுக்கு எதிரான இலங்கை-,இந்திய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமான விடயமாகும். இவ்விடயம் தொடர்பில் பரந்தளவிலான விவரங்களை முன்வைக்காமல், எமது கடற்படைகள், கரையோர காவல் படைகள் மற்றும் ஏனைய முகவரமைப்புக்கள் இடையில் காணப்படும் வலுவான ஒத்துழைப்பு காரணமாக போதைப் பொருட்கள், ஆயுதங்கள், ஏனைய பொருட்களை கடத்தும் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக உங்கள் வாசகர்கள் ஊடக அறிக்கைகள் மூலமாக அறிந்திருப்பார்கள் என்று நான் மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றேன்.

Image

மிகவும் நெருக்கமான அயல்நாடுகள் என்ற அடிப்படையில் நமது இரு நாடுகளினதும் பாதுகாப்பு நலன்கள் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட முடியும். இதில் கடல்மார்க்கமான பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். இருதரப்பு ஒத்துழைப்புக்கு சமாந்தரமாக இங்கு பிராந்திய ஒத்துழைப்பு குறித்த விடயங்களும் மிக முக்கியமான வகிபாகத்தினை கொண்டுள்ளன. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான முத்தரப்பு மாநாட்டில் இந்தியா ,இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகள் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் கடல் தொடர்பான விடயங்களில் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை கட்டியெழுப்புவதற்கு திடசங்கற்பம் பூணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் தலைமையிலான கொழும்பு பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றிருந்தது. கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம், கடத்தல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள், அத்துடன் இணைய குற்றங்கள் ஆகிய நான்கு முக்கிய விடயங்களிலும் ஒத்துழைப்பினைப்பேண வேண்டியதன் அவசியத்தினை அடையாளம் காண முடிந்தது.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த மரபை பாதுகாப்பதற்கு ஐ.நா. முன்வரவேண்டுமென அறைகூவல் விடுத்திருந்தார். இந்தியா இந்த அழைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி செயல்படுமா?

பதில்: விலைமதிக்க முடியாத பரிசாக கருதப்படும் புத்த பெருமானின் போதனைகள் உலகின் ஏனைய இடங்களுக்கு பரப்பப்பட்ட இடமாக இந்தியா ஆசியினை பெற்றுள்ளது. இன்று இந்தியாவுக்கும் ஏனைய பல நாடுகளுக்கும் இடையிலான மிக முக்கியமானதொரு நாகரிக பிணைப்பினை பௌத்த மரபுரிமை ஏற்படுத்தி வருகின்றது. இவற்றில் இலங்கை மிக முக்கியமானதும் விசேடமானதுமான இடத்தினை கொண்டிருப்பதுடன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து பௌத்தத்தின் பரிசினை பெற்றுக்கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. பௌத்தமதத்தின் எமது பகிரப்பட்ட வாழ்க்கை பாரம்பரியம் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் அகத்தூண்டப்படுகின்றனர் என்பதுடன் கிரமமான பரிமாற்றங்கள், பௌத்த தாதுக்களை காட்சிப்படுத்தல், பௌத்த யாத்திரைகள்,பௌத்த ஸ்தலங்களின் பாதுகாப்பு போன்றவற்றினால் அது உயிர்ப்புடனுள்ளது. ஆகவே எமது நாடுகளில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பகிரப்பட பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது எமது உரிமை, பொறுப்பு மற்றும் கடமையாகும்.

கேள்வி : கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பௌத்த மதத்திற்கான நன்கொடை குறித்த தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில்: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை ஒன்றினை அறிவித்திருந்தார். உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள், ஆளுமை விருத்தி செயற்பாடுகள், கலாசார நடவடிக்கைகள், தொல்பொருள் ரீதியான ஒத்துழைப்பு, புத்த பெருமானின் தாதுப்பொருட்களை இருதரப்பிலும் காட்சிப்படுத்தல், இந்திய யாத்திரைகளை மேம்படுத்தல் ஆகிய திட்டங்கள் ஊடாக பௌத்த மத அடிப்படையிலான மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த நன்கொடை ஆதரவளிக்கும். இந்த திட்டத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக இருநாட்டு அரசாங்கங்களும் தற்போது கலந்தாலோசித்து வருகின்றன. விரைவில் இவ்விடயம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுமென நாம் நம்புகின்றோம்.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது நிலுவை யில் உள்ள ஒரு விடயமாகும். இலங்கை சமூகங்களின் ஒரு பகுதியான அம்மக்களுக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்தை வழங்குவதற்கு இந்தியா முன்வருமா?

பதில்: இவ்விடயம் மனிதாபிமான அடிப்படையில் கையாளப்பட வேண்டிய மிக முக்கியமானதும் தற்போது இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான இலங்கை மக்களின் வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதுமான விடயமாகும். அம்மக்கள் இந்தியாவில் இருக்கும் வரை அவர்களுக்கு தேவையான சகல விடயங்களையும் எம் மால் வழங்க முடியும். ஆனாலும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதே உண்மை. ஆகவே அவர்கள் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமையாகும். இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே காணப்படுகின்ற புரிந்துணர்வு அடிப்படையில் நாம் இன்னமும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணி வருகின்றோம். இம் மக்கள் நாடு திரும்புவதற்கு அல்லது மீளக் குடியேறுவதற்கு ஒரு வாழ்வாதார உதவிப் பொதி நிச்சயமாக ஆதரவினை வழங்கும்.

கேள்வி : ஜனாதிபதியின் செயலாளரின் தகவல்களுக்கு அமைவாக, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் தாமதமான கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது. இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் பதில் என்ன?

பதில் : இலங்கையுடனான எமது பங்குடமையில் சக்தி துறைகள் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் சக்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கவும், பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் தொடர்ந்தும் ஈடுபாட்டினை கொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து இலங்கை ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் சாதகமான பேச்சுக்கள் இருதரப்பு அரசாங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்றுவருகின்றன.

கேள்வி : இலங்கையில் அதிகரித்துவரும் சீன முதலீடுகள் குறித்து இந்தியாவில் கவலை கள் எழுந்துள்ளன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்து வருவதை இந்தியா எவ்வாறு பார்க்கின்றது. குவாட் மீதான சார்புநிலை அதற்கான பதிலாக அமையுமா?

பதில்: இலங்கையுடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது மற்றும் இலங்கையின் முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் இருந்து சுயாதீனமாக உள்ளது. நாகரிக அடிப்படையிலும் நம்பிக்கை அடிப்படையிலும் இலங்கையுடன் கட்டியெழுப்பப்பட்ட எமது நீண்ட கால உறவுகள் என்ற அடிப்படையில் அமையப்பெற்ற ஸ்திரமான தளத்தினை சார்ந்துள்ளது. நமது பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் பெறுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்கவேண்டியது இலங்கையினதும் அந்நாட்டு மக்களினதும் அறிவைசார்ந்தது என்பதிலும் பல்லாயிரமாண்டுகால நீட்சியைக்கொண்டதும் பரஸ்பர நன்மை அளிக்கக்கூடியதுமான எமது உறவுகளின் மீதும் நாம் முழுமையான நம்பிக்கையினை கொண்டிருக்கின்றோம்.

மேலும் விநியோக சங்கிலியின் ஒருங்கிணைவை வலுவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களூடாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டினை மேம்படுத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதில் கணிசமான முன்னேற்றங்களை காணமுடிகின்றது என்பதனை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் திட்டங்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக இருதரப்பும் இணைந்து செயல்பட முடியும். இதன் மூலமாக பொருளாதார ரீதியிலான ஈடுபாட்டினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் காணப்படும் ஒத்துழைப்புடனான வாய்ப்புக்கள் பாக்கு நீரிணையின் இரு மருங்கிலுமுள்ள நிறுவனங்கள் மற்றும் மக்களினது நலன்களுக்காக விரிவாக்கப்படவேண்டியதும் சமமான முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளது.

கேள்வி: இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை அமுல்படுத்துவதில் இல ங்கை தாமதித்து வருவதாக இந்தியா ஒரு பிரச்சினையை எழுப்பி இருந்தது. இவ்விடயம் தொடர்ந்தும் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சனையாக உள்ளதா? அத்துடன் இவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காகவா நீங்கள் இங்கு விஜயம் மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்: கொவிட் தொடர்பான சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இரு தரப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்பார்த்த வகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த சிக்கல்களை திருப்திகரமான முறையிலும் காலத்துக்கு ஏற்ற வகையிலும் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது தொடர்பில் நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். சமநேரத்தில் மிகவும் பரந்தளவான துறைகளில் பல்வேறு ஒத்துழைப்பு திட்டங்களை கொண்டிரு க்கும் நாடுகளாக அல்லது உறுதியான பங்காளர்களாக இலங்கையும் இந்தியாவும் உள்ளதனை நினைவில் கொள்ளவேண் டியது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக கடன் உதவியின் கீழ் வழங்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மிகவும் முன்னேற்றகரமான வகையில் தொடர்கின்றன. நாம் எதிர்கொள்ளும் சில சவால்களை வெற்றிகரமான ஒத்துழைப் பின் மூலம் புறந்தள்ளிவிட முடியும். இந்த சில சிக்கல்களுக்கான துரிதமான பதில்களை நாம் தேடும் அதே நேரம் இந்த அபிவிருத்தி திட்டங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நமது பங்குட மையை நிர்ணயிக்க விரும்பவில்லை.

கேள்வி: கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பான தற்போதைய நிலைப்பாடு என்ன? இவ்வருட முற்பகுதியில் அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளா தார வலயம் ஆகிய நிறுவனங்கள் இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பில் இன்னமும் நடவடிக்கைகள் தொடர்கின்ற னவா?

பதில்: நீங்கள் அறிந்திருப்பது போலவே மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி குறித்து இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மீட்பு கொள்கலன் முனையத்தில் அபிவிருத்தி தொடர்பில் BOT உடன் படிக்கை ஒன்று கடந்த வாரம் நிறைவேற் றப்பட்டுள்ளதனை என்னால் அறிய முடி கின்றது.

ஒரு பரந்த நோக்கின் அடிப்படையில், இந்தியாவுடன் பெருமளவான கப்பல் பரிமாற்ற வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கம் போன்ற பரஸ்பர நன்மை அளிக்கும் திட்டங்களில் இந்திய முதலீடு மற்றும் பங்களிப்பின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையி லான கடல் மார்க்கமான தொடர்புகள் மேலும் வலுவடையும் என்று நாம் உணர்கின்றோம். அத்துடன் இதன் பயனாக எமது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30