623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாதத்தொகை நீக்கம் - மத்திய வங்கி ஆளுநர் அதிரடி அறிவிப்பு

Published By: Digital Desk 3

01 Oct, 2021 | 05:21 PM
image

(நா.தனுஜா)

அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த நூறு சதவீத உத்தரவாதத்தொகை வைப்பு கட்டுப்பாடு இன்றைய தினத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இவ்வருட முடிவில் 5 சதவீதமாகவும் 2022 இன் முதற்காலாண்டில் 6.5 சதவீதமாகவும் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பேரண்டப்பொருளாதாரம் மற்றும் நிதிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான செயற்திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுவைத்தார். மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இவ்வெளியீட்டு நிகழ்வில் செயற்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியதாவது:

எமது நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகால அடிப்படையில் வலுப்படுத்துவதை நோக்காகக்கொண்டு இந்தச் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனூடாகக் கடந்த காலத்தில் 'ஆசியாவின் ஆச்சரியம்' என்றும் 'ஆசியாவின் அடுத்த அதிசயம்' என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மறையான துலங்கலைக் காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அதேவேளை கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புக்கள் உரியவாறான அங்கீகாரத்தைப் பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்படவேண்டியவையாகும்.

குறிப்பாக கொவிட் - 19 சௌபாக்கிய மீள்நிதிவழங்கல் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கென 2,002 பில்லியன் ரூபாவும் மத்தியவங்கியினால் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று அரசாங்கத்தினால் வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம், வறிய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டமை, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான பயணக்கட்டுப்பாடுகள், பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை வசதிகள், சுகாதாரப்பாதுகாப்பு வசதிகளுக்கான ஏற்பாடு, சமூக மட்டத்திலான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவையாகும்.

443 வருடகால அந்நியர்களின் ஆட்சி, 30 வருடகாலப்போர், மின்சார மற்றும் வலுசக்தி நெருக்கடி, சுனாமி உள்ளிட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள், உலகளாவிய தொற்றுப்பரவல் உள்ளடங்கலாக இலங்கையானது காலத்திற்குக்காலம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவந்திருக்கின்றது.

எனினும் இவ்வாறான சவால்களின்போது அரசாங்கமோ அல்லது மத்தியவங்கியோ மாத்திரம் தனித்துச்செயற்பட்டு, அதனை வெற்றிகொள்ளமுடியாது. மாறாக வங்கிக்கட்டமைப்புக்கள், வங்கியல்லாக் கட்டமைப்புக்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்திப்பங்காளிகள், முதலீட்டாளர்கள், சேவை வழங்குனர்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியும்.

நாம் இப்போது பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டிருக்கின்றோம். அவற்றை நிவர்த்திசெய்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்திருக்கின்றோம். முதலாம்கட்டம் எதிர்வரும் 6 மாதகாலத்திற்கு உரியதாகவும் இரண்டாம்கட்டம் ஒருவருடகாலத்திற்கு உரியதாகவும் முன்றாம்கட்டம் நடுத்தர - நீண்டகாலத்திற்கு உரியதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 6 மாதகாலத்தில் கடன்சேவை, சேவை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை என்பவற்றை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசாங்கத்தின் கடன் கொள்கையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்தல், வங்கித்துறைச் செயற்பாடுகள் சாதகமான மட்டத்திலுள்ள போதிலும் சில பிரிவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தல், வங்கியல்லாத துறைகளில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமத நடவடிக்கைகளை இலகுபடுத்தல் ஆகியவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த 100 சதவீத உத்தரவாதத்தொகை கட்டுப்பாடு இன்றிலிருந்து (நேற்றிலிருந்து) அமுலுக்குவரும் வகையில் உடனடியாக நீக்கப்படுகின்றது. அக்கட்டுப்பாட்டின் விளைவாக இறக்குமதியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் அதனை நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

மேலும் கொவிட் - 19 வைரஸ் பரவலின் பின்னரான தற்போது 'நியூ நோர்மல்' நிலைமையின்கீழ் வங்கிகளைக் கண்காணிப்பதென்பது ஒப்பீட்டளவில் கடினமான விடயமாக மாறியிருக்கின்றது. எனவே அதற்கெனக் கண்காணிப்புக்குழுக்களை உருவாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

இவற்றின் ஊடாக இவ்வருட முடிவில் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதமாகவும் 2022 இன் முதற்காலாண்டில் அது 6.5 சதவீதமாகவும் அமையும் என்று எதிர்பார்ப்பதுடன் நாணயமாற்றுவீதம் மற்றும் வட்டிவீதம் என்பவற்றை நிலையான மட்டத்தில் பேணமுடியும் என்றும் நம்புகின்றோம் என்று குறிப்பிட்டார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02