இன்று தளர்த்தப்பட்டது தனிமைப்படுத்தல் ஊரடங்கு : மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கும்  

01 Oct, 2021 | 07:33 AM
image

(ஆர்.யசி)

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படுகின்ற போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கும் என கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

நாடு திறக்கப்பட்டாலும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நீங்கவில்லை எனவும்,  இன்று தொடக்கம் பொதுமக்கள் கடுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி  அத்தியாவசிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் எனவும், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து அனாவசியமாக எவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார தரப்பினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பரவிக்கொண்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாகவும் டெல்டா வைரஸ் புதிய பிறழ்வுகள் காரணமாகவும் கடந்த 42 நாட்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. 

நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கத்திலும் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படுவதாக கொவிட் வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானம் எடுக்கும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தல் நிலைமை நீங்கவில்லை

எவ்வாறு இருப்பினும் இன்று அதிகாலை நான்கு மணியின் பின்னர் நாடு திறக்கப்படுகின்ற போதிலும் கொவிட் வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலையில் இருந்து நாடு இன்னமும் விடுபடவில்லை என சுகாதார வைத்திய தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது செயற்பட்டால் மீண்டும் மோசமான வைரஸ் தொற்று தாக்கமொன்றுக்கு முகங்கொடுக்க  வேண்டிவரும் எனவும், பொதுமக்கள் தடுப்பூசியை மாத்திரம் நம்பி பொறுப்பில்லாது செயற்படக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று தொடக்கம் அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் நீண்ட காலமாக அரச சேவைகள் முழுமையாக முன்னெடுக்கப்படாது கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் இன்று தொடக்கம் அரச சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார். 

குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் திணைக்களம், கடவுச்சீட்டு காரியாலயம் ஆகியவற்றின் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு புகையிரத சேவைகள் இடம்பெறாது

எனினும் இன்று நாடு திறக்கப்படுகின்ற போதிலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு புகையிரத சேவையும் முன்னெடுக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 

பொதுப்போக்குவரத்து நிலைமைகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், புதிய வைரஸ் தொற்றுக்களை உருவாக்கிவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் சுகாதார தரப்பின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும் மாகாணங்களுக்கு உள்ளும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படாது. புகையிரதங்களில் ஆசனங்களில் அமர்ந்து செல்லும் பயணிகளை விடவும் அளவுக்கு அதிகமான பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கின்ற காரணத்தினால் வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதென்ற  காரணத்திற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் இயங்கும்

அதேபோல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படாது, ஆனால் மாகாணங்களுக்குள் அதிகளவில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும். 

எனினும் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்கும் வேளைகளில் அடிப்படை சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். ஒவ்வொரு பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளின் சுகாதார வழிமுறைகள் குறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கண்காணிக்க வேண்டும் என்ற கட்டாய தீர்மானமும் வெளிவந்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க விசேட அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதான இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கூறுகையில்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (இன்று) அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, எனினும் நாளாந்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதாகவே உள்ளது. 

கொவிட் மரணங்களும் 50 இற்கு அதிகமாகவே பதிவாகி வருகின்றது. ஆகவே நாட்டின் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையில் இருந்து நாம் விடுபடவில்லை. எனினும் நாட்டை கட்டுப்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கூட மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை எம்மால் இப்போது நீக்க முடியாது. ஏனைய கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்தும் மக்களுக்கு அறிவிக்கப்படும். 

அதேபோல் நாடு திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும், நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றது. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அச்சுறுத்தல் குறித்து அனுபவம் உள்ளது, கடந்த டிசம்பர் மாதத்திலும் அதேபோல் புதுவருட காலத்திலும் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுத்தோம். எனவே சிந்தித்து தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக செயற்பட வேண்டும் என்றார்.

பிரதி சுகாதார பணிப்பாளர் சிறப்பு வைத்தியர் ஹேமந்த ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், நாடு இப்போது திறக்கப்படுகின்ற போதிலும் எச்சரிக்கை நிலையில் இருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை. 

நாட்டை திறக்கவும் வேண்டும் அதேபோல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையிலும் நிலைமைகளை கையாள வேண்டும். ஆகவே அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வேறு எதற்காகவும் மக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

பிரதான சுகாதார கட்டுப்பாடுகள் அனைத்தும் வழமை போன்று முன்னெடுக்க வேண்டும்.புதிதாக விசேட கட்டுப்பாடுகள் எதனையும் பிறப்பிக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் பொது நிகழ்வுகளை நடத்துவது, காரியாளையங்கள் ஆரம்பிக்கப்படுவது, பொதுப்போக்குவரத்தை கையாள்வது போன்ற விடயங்களில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38