''வருமானம் ஈட்டுவதற்கு அப்பால் குரலற்றவர்களின் குரலாக சமூக முயற்சியாண்மையை கட்டியெழுப்பலாம்''

Published By: Digital Desk 2

30 Sep, 2021 | 08:13 PM
image

நேர்காணல் : ஆர்.ராம்

இலங்கையின் சமூக முயற்சியாண்மையின் ஊடாக சமூக பொறுப்புள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு முடியும் என்பதோடு அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு அப்பால் குரலற்றவர்களின் குரலாக, ஜனநாயக பாதுகாப்பு அரணாகவும் கட்டியெழுப்ப முடியும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.மகேஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,  

கேள்வி :- பல்கலைக் கழகங்கள் ஊடாக எவ்வாறு சமூக முயற்சியாண்மை ( Social Entrepreneurship  ) செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது?

பதில் : -பல்கலைக்கழகங்கள் அறிவைத் தேடுவதையும், பரப்புதலையும் முக்கியமான பணிகளாக ஆற்றி வருகின்றது. அதற்கு அப்பால் மாணவர்களின் திறன்களை விருத்திசெய்தல், தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தல் போன்ற முக்கியமான பணிகளையும் தற்போது மேற்கொள்கின்றது.

 

அதாவது, பல்கலைக்கழகங்கள் மரபுரீதியான முறைமையிலிருந்து முயற்சியாண்மை சார் பல்கலைக்கழகங்களாக மாறவேண்டிய தேவைப்பாடு தற்போது காணப்படுகின்றது. அந்த அடிப்படையில், பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் முடிவின் பிரகாரம், சமூகத்திற்கு பயன்தகு வகையில் புதியபொருட்கள் சேவைகளை எவ்வாறு சமூகத்திற்கு வழங்கமுடியும், சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் வகையிலான பங்களிப்பினை எவ்வாறு வழங்க முடியும் என்பதே முயற்சியாண்மை சார் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளாக உள்ளன.

இதற்காக பிரட்டிஷ் கவுன்சிலின் (British Council ) உதவியுடன் பல்கலைக்கழகங்களில் சமூக முயற்சியாண்மையை பாதுகாக்கும் மையமொன்றை ( Social Enterprise Incubation Laboratory   ) ஸ்தாபித்துள்ளோம். இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களை முயற்சியாளர்களாக மாற்றும் நீண்டகாலச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்தமையங்கள் ஊடாக மாணவர்களுக்கான பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், புத்தாக்க சிந்தனைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வழங்கப்படுகின்றது.

கேள்வி :- பல்கலைக்கழகங்கள் ஊடாக சமூக முயற்சியாண்மை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதற்கான காரணம் என்ன?

பதில் :- இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. சமூகமுயற்சியாண்மை என்பது வணிக முயற்சியாண்மையிலிருந்து வேறுபட்ட தத்துவமாகும். சமூக முயற்சியாண்மையின் அடிநாதமாக இருப்பது சமூகப் பிரச்சினைகளாகும்.

 

இலங்கையைப் பொறுத்தவரையில், நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்டசமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக கூறுவதானால், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை இன்மை, வறுமை, வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், அரச நிறுவனங்களின் தொழிற்படாத்தன்மை, போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். 

மேலும், மொத்ததேசிய உற்பத்தியில் சமூகசேவைக்காக ஒதுக்கீடுசெய்யப்படும் நிதியானது அண்மைக்காலங்களில் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது. குறிப்பாக 2007ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 7.9சதவீதமாக இருந்த சமூக சேவைக்கான நிதி தற்போது 5சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இந்த நிலைமைகளில் இலங்கையில் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதாக இருந்தால் தனியார் துறையினரால் மேற்க்கொள்ளப்படும் சமூகத்தினை அடிப்படையாகக் கொண்ட முயற்சியாண்மை அவசியமாகின்றது. இந்தமுயற்சியாண்மைகள், வறுமையைஒழித்தல், வேலைவாய்ப்பினை ஏற்படுத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை உருவாக்குதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த இலக்குகளைக் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

கேள்வி :- புத்துருவாக்கத்துடன் தொடர்புடைய சமூக முயற்சியாண்மை பற்றியும் அதிலுள்ள விசேட நன்மை பற்றியும் குறிப்பிடுங்கள்?

பதில் :- சமூக முயற்சியாண்மை என்பது உயரியமானிடவியல் பண்புகளை தன்னிடத்தே கொண்ட வணிக முயற்சியாகும். இந்த எண்ணக்கரு தற்போதைய சூழலில் மிக பொருத்தமானதாக காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் சமூக முயற்சியாண்மை என்றபதம் ஒரு சமூக இலட்சிய நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்ட வணிகத்தை ஒத்த ஒரு பிரிவாக விளங்குகின்றது.

சமூக முயற்சியாண்மையில் வணிகமொன்றில் சமூக இலட்சிய நோக்கம் வெளிப்படையானதாகவும் தெளிவானதாகவும் அமைதல் வேண்டும் ஆகவே வணிகத்தில் சமூக இலட்சியம் தொடர்பான தாக்கம் முக்கியமானதாகும். அந்த அடிப்படையில் சமூகமுயற்சியாளர்கள் சமூக மாற்றத்திற்கான முகவர் என்ற வகிபாகத்தினை வகிக்கின்றனர்.

ஆகவே சமூக முயற்சியாண்மையானது சமூகசார்பு இலக்கு, பரஸ்பரம், கூட்டுத்திறன் போன்ற பண்புகளை மையமாகக் கொண்டுதோற்று விக்கப்படல் வேண்டும். சிவில் சமூகத்தின் பங்குபற்றலுடன் சமூக பெறுமானமதிப்பினை ஏற்படுத்துவதும் ஒரு பொருளாதார நடவடிக்கையுடன் புத்துருவாக்கத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதும் சமூக முயற்சியாண்மையின் மற்றுமொருபண்பாகும்.

 

ஆகவே சமூக முயற்சியாண்மை என்பது புத்துருவாக்கல் ஊடாக ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்தினையும் வாழ்வதற்க்கான சூழ்நிலைகளையும் விரிவாக்க பிரஐகளினை அணிதிரட்டி செயலூக்கப்படுத்தும் ஒருவடிவமாக நோக்கப்படுகின்றது. உதாரணமாக அண்மையில் நாம் மாத்தளையில் மேற்க்கொண்ட கள ஆய்வின் போது பெண் ஒருவர் தனது சமூக முயற்சியாண்மை கரு எவ்வாறு தோன்றியது என்பதை பின்வருமாறு குறிப்பிட்டார் ஒவ்வொரு பாடசாலைகளின் முன்னாலும் (கொரோனா பரவலுக்கு முன்னர்) பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பாடசாலை ஆரம்பித்தது முதல் நிறைவடையும் வரையில் கூட்டமாக காத்திருக்கும் நிலைமையொன்று உள்ளதும்.

 

இதனால், குறித்த பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் நேரம் வீணாக விரயமாகின்றது. உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்விதமான நிலைமைகள் காணப்படுவதில்லை. இலங்கையின் பாதுகாப்பு துறை சார்ந்த நம்பிக்கை இன்மையே இந்த நிலைமைக்கு காரணமாகின்றது. இவ்வாறு கூட்டமாக காத்திருப்பவர்களை மையப்படுத்தி சிறியதொழில் முயற்சியொன்றை முன்னெடுத்து வெற்றிபெற்றிருக்கின்றார். 

பாடசாலைக்கு முன்னால் காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் விரயமாகும் நேரம் முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் பொலித்தீன் பாவனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் காரணப்படுகின்றன. அவற்றை மையப்படுத்திய புத்தாக்க சிந்தனைகள் ஊடான தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியும்.

 

மேலும், இவ்விதமான தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதன் ஊடாக தமக்கு தேவையான முதலீட்டு நிதியையும் தாமே தேடிக்கொள்கின்ற நிலைமையொன்றும் காணப்படுகின்றது. பொதுவாக சமூக முயற்சியாளர்கள் தமது முயற்சிகளுக்கான நிதியை தாமே தேடிக்கொள்ளுதலும் இத்துறையின் சிறப்பானதொரு அம்சமாக குறிப்பிட முடியும்.

 

கேள்வி :-  சமூக முயற்சியாண்மை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் விருப்பு, ஆர்வம், ஈடுபாடு எவ்வாறுள்ளது?

பதில் : - சமூகமுயற்சியாண்மையானது 1980 களின் பின்னர் தான் பிரபல்யமாகி தற்போது உலகளாவிய ரீதியில் வளர்ந்து வருகின்றது. ஆகவே இந்தவிடயம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிருவாகத்தினர், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான விளக்கங்களை வழங்கவேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

 

மிக அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் சமூக முயற்சியாண்மைபற்றி சான்றிதழ் கற்கை நெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கற்கைநெறியில் பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்தபலரும் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர். ஆகவே சமூக முயற்சியாண்மையின் தாற்பரியம் பற்றியபுரிதல் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது என்று நம்பிக்கைகொள்ளமுடியும்.

 

இதனைவிடவும், பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் உள்ளிட்டபல்வேறு விடயங்களும் முன்னெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விதமான செயற்பாடுகளால் கல்வியாளர்கள் சமூகத்தினுள்ளும் நல்லவரவேற்பு உள்ளது. ஆகவே இதனை பட்டப்படிப்பு கற்கைநெறியாகவும் எதிர்காலத்தில் உருவாக்கமுடியும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி :- சமூக முயற்சியாண்மையின் எதிர்காலத்திற்கான வகிபாகம் எவ்வாறு இருக்கப் போகின்றது?

பதில் :- பல்கலைக்கழகங்களின் மிக முக்கியமான கடமையானது, நல்ல மாணவர்களை உருவாக்குவதாகும். அவ்வாறான நிலையில் பேராதனை போன்ற முதல் நிலை பல்கலைக்கழகமானது நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மாணவர்களை உள்ளீர்த்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து கூட மாணவர்கள் கற்கைகளில் இங்கு பங்கேற்றிருக்கின்றார்கள்.

இவ்வாறு பல்கலைக்கழகங்களிற்கு வருகைதரும் மாணவர்கள் அனைவரும் இளைய வயதுடையவர்கள். ஆகவே இந்த சமூக முயற்சியாண்மை கருத்திட்டத்தினை அவர்களுக்கு புகட்டுவதன் ஊடாக முறையான, வினைத்திறனான சமூகமாற்றத்தினை ஏற்படுத்தமுடியும்.

 

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாவட்டங்களும் சரி, ஏனைய மாவட்டங்களும் சரி அடிப்படை பொருளாதார வளர்ச்சியை (கல்வி, சுகாதாரம், உட்கட்டுமானம், வேலைவாய்ப்பு போன்றனவாகும்) எட்டியுள்ளது என்று கூறுவதற்கு இல்லை. இலங்கை போன்ற வளர்ந்தவருகின்ற அரசாங்கத்தினாலும் அந்தவிடயத்தில் முழுமையான பங்களிப்பினைச் செய்ய முடியாதிருக்கின்றது.

 

ஆகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் அடிப்படை பொருளாதார வளர்ச்சியின்மையானது, அந்த மாவட்டங்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது. ஆகவே சமூக தொழில் முயற்சியாண்மை விடயத்தினை பயன்படுத்தி தனி நபர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் ஊடாக சமூகமாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

 

குறிப்பாக, வெளிநாட்டு நிதி உதவியில், நன்கொடைகளில் தங்கிவாழும் தரப்பினரை இயங்குகின்ற, வினைத்திறனான தரப்பாகமாற்ற முடியும். அதுமட்டுமன்றி சமூகப் பொறுப்புள்ள சமூகமொன்றை உருவாக்கிக்கொள்ளமுடியும். அதுமட்டுமன்றி, வருமானத்திற்கு அப்பால், குரலற்றவர்களின் குரலாக, ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாகவும் சமூக முயற்சியாண்மையை கட்டியெழுப்ப முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13