எம் தமிழினத்தை இனி ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை  என வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் தமிழ் மொழி மூலமான ஒருமைப்பாடு வழிவகுக்கட்டும் எனவும்  முதலமைச்சர்  அறைகூவல் விடுத்தார்.

 தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அரங்கில் ஆரம்பமான முத்தமிழ் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ” உலகமயமாக்கல் சூழலில் ஈழத்து கலை, இலக்கிய, கலாச்சாரப் போக்கும் சவால்களும் ” என்ற தலைப்பில் உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

  எம் தமிழினத்தை இனி ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை. 

எமது தமிழ்; எமது தமிழ் இலக்கியம்; எமது தமிழ்க் கலைகள்; எமது தமிழ்ப் பாரம்பரியங்கள்; எமது தமிழ் வாழ்க்கை முறை. எமது சமூக ஒருமைப்பாடே வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைப்பன. 

இதுவரை காலமும் நாங்கள் பல விதங்களில் எமது முரண்பாடுகளையே முன்னிறுத்தி வந்துள்ளோம். 

நான் வேறு குடி நீ வேறு குடி என்றோம்; நான் வடக்கு நீ கிழக்கு என்றோம்; நான் விவசாயி நீ மீன்பிடிப்பவன் என்றோம்; நான் தமிழன் நீ முஸ்லீம் என்றோம். 

எம்மை எல்லாம் இனிமேலாவது தமிழ் மொழி ஒன்றுபட வைக்கட்டும்! தமிழ் மொழியின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத்தின் அழகில் இனி ஒன்றுபட முன்வருவோம் என்றார்.