ஸ்பெயின் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து அவரை அணுகிய இளைஞர் ஒருவர், அவரது முகத்தில் தனது கைமுஷ்டியால் பலமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அந்நாட்டுப் பிரதமர் மரியானோ ரஜோய், காலிசியன் நகரில் ஆதரவாளர்களை சந்திக்கச் சென்ற போதே மேற்படி 17 வயது இளைஞன் அவரைத் தாக்கியுள்ளான்.

அந்த இளைஞன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தான் பிரதமருடன் சுய புகைப்படம் (செல்பி) எடுக்க விரும்புவதாக தெரிவித்து அவரை அணுகி புகைப்படமெடுத்துக் கொண்ட வேளையிலேயே அவன் அவரது இடது கன்னத்தில் எவரும் எதிர்பார்க்காத தருணத்தில் கை முஷ்டியால் ஓங்கிக் குத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தில் பிரதமரின் கன்னம் சிவந்த போதும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறிப்பிட்ட இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைதுசெய்து அழைத்துச் சென்றனர். அந்த இளைஞன் ஏதாவது இனவாத குழுவின் உறுப்பினரா என்பது அறியப்படவில்லை.