(க.கமலநாதன்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்எதிரணியினருக்காக திறந்து விடப்ப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் ஆதரவும் கிடைக்கும் என அமைச்சர் விஜித் விஜமுனி சொய்ஸா நம்பிக்கை வெளியிட்டார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் இளைஞர்களை திசைதிருப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள்கள் சுதந்திர கட்சியின் தலைமைத்வத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலவந்தமாக பெற்றுக்கொண்டதாக கூறுகின்றனர்.

ஆனால் இது உண்மைக்கு புறம்பான விடயமாகும். கடந்த தேர்தலின் முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  உருவாக்கப்பட்ட கட்சிக்கான சட்டக்கோவையின் பிரகாரம் பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

அதேநேரம் கடந்த தேர்தல் நிறைவடைந்த காலப்பகுதியி;ல் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னிலை படுத்தப்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியை விட்டு நீக்குவதற்கான முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவும் இல்லை. இந்நிலையில் தேர்தலை வெற்றிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொண்டார் எனவே இங்கு எந்த வித சட்டமீறல்களும் இடம்பெறவில்லை.

அத்துடன் அந்த தருணத்தில் சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதற்கான சிறந்த வழி கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிக்கு வழங்கப்படுவதே என்று தீர்மானிக்கப்பட்டே வழங்கப்பட்டது. அதற்கமைய இன்றும் அவரால் சுதந்திர கட்சி பாதுகாக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது எம்மை எதிர்த்துக்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் ஆதரவு சுதந்திர கட்சிக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அதற்கான கதவையும் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து விட்டுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் பய்னபடுத்திக்கொள்வது சிறந்து என்றார்.