ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இன்று காலை இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான  சி.சி.டீ.வி.   காணொளிகளும்   பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.  ஏறாவூர் - முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்.எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை   கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தனர். 

இச்சம்பவம்; குறித்து இதுவரை 43 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் 13 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

அத்துடன்  சம்பவ இடத்திற்கு  அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கெமரா காட்சிகள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. சம்பவதினம் நள்ளிரவிற்கும் அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார்  சைக்கிளொன்றில் பல தடவைகள் அவ்வீதியில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. இக்காட்சிகள் தெளிவின்மை காரணத்தினால் பரிசோதனைக்கான மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு காணொளி அனுப்பப்பட்டுள்ளது.        

இதேவேளை, ஜெசீரா பாணுவின் கணவரின் சகோதரனை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து தொடர்ந்தும் விசாணைக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற தினம் தொடக்கம் இவரது நடவடிக்கைகளை அவதானித்த பின்னர் ஏறாவூர்ப் பொலிஸ் குழுவும் மட்டக்களப்பு பொலிஸ் குழுவினரும் இவரை தனித்தனியாக விசாரணை செய்தன.

இதையடுத்து சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரிக்க பொலிஸார் முடிவுசெய்தனர். இதற்காக நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அயல் வீட்டார், குடும்ப உறவினர் அவ்வீட்டில் வேலை செய்த மேசன்மார், அண்மைக்காலமாக அவ்வீட்டிற்கு அதிகம் வருகை தந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவருடன் தொலைபேசி உரையாடலில் அதிகம் ஈடுபட்டவர்கள் என 43 பேரிடம் இதுவரை தகவல்கள் பெறப்பட்டுள்ளன.