தும்மலசூரிய நாற்சந்தி பிரதேசத்தில் பலரை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பலவந்தமான முறையில் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் காற்சட்டைக்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தும்மலசூரிய நாற்சந்தி பிரதேசத்தில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களை கத்தி ஒன்றைக் காட்டி அவர்களை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் கப்பம் பெற்று வந்ததாக மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு நேற்று  மாலை நபர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக் கொண்டிருந்த போது மாதம்பை பொலிஸார் அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளஞரை பொலிஸார் பரிசோதித்த போது அவரது காற்சட்டைக்குள்ளிலிருந்து கைக்குண்டு ஒன்று இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் குறித்த கைக்குண்டைக் காட்டியே இவ்வாறு கப்பம் பெற்று வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

 இவர் கப்பமாகப் பெற்றுக் கொள்ளும் பணத்தைக் கொண்டு ஹெரோயின் போதைப் பொருள் பாவிப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

29 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சுபர்கள் அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு அச்சத்தினால் அது தொடர்பில் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்வதையும் தவிர்த்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.