ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சாதித்தது என்ன?

Published By: Digital Desk 3

15 Sep, 2021 | 04:54 PM
image

ஸ்ரான்லி ஜொனி

2001 அக்டோபருக்கு பிறகு முதற்தடவையாக இப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் இல்லை.தனது படைகளை திருப்பியழைக்கும் தீர்மானத்தை நியாயப்படுத்திய அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2020 பெப்ரவரியில் தலிபான்களுடன் ட்ரம்ப் நிருவாகம் கைச்சாத்திட்ட படை வாபஸ் உடன்படிக்கைக்கு பிறகு தனக்கு இரு தெரிவுகள் மாத்திரமே இருந்ததாக சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதாவது, உடன்படிக்கையை மதித்து நடக்கவேண்டும் அல்லது உடன்படிக்கையை மீறி மேலும் கூடுதல் துருப்புக்களை அனுப்பி போரைத் தொடரவேண்டும்." என்றென்றைக்கும் இந்த போரை நான் விரிவுபடுத்தப்போனதுமில்லை, என்றென்றைக்குமே வெளியேற்றத்தை நான் நீடிக்கப்போனதுமில்லை" என்று பைடன் கூறினார். 

அமெரிக்க படைகள் வெளியேற்றத்தையடுத்து ஆகஸ்ட் 15 தலைநகர் காபூலை தலிபான்கள் துரிதமாக கைப்பற்றினார்கள்.அதனால் எரிச்சலூட்டும்  இந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது.இதில் இருந்து அமெரிக்கா அடைந்த பயன் என்ன?

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை இப்போது யதார்த்தபூர்வமான, தேசிய பாதுகாப்பு கொள்கைக் கருத்துக்கோணத்தில் இருந்து வியாக்கியானப்படுத்த பைடன் முயற்சிக்கின்றார்.தலிபான்களினால் ஆட்சிசெய்யப்பட்டது என்பதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா படையெடுக்கவில்லை ; ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்பட்டு செப்டெம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டது என்பதனாலேயே அந்த படையெடுப்பு என்று கடந்தவாரம் அவர் கூறினார். "தேசத்தைக் கட்டியெழுப்ப ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா போகவில்லை." என்று ஜூலை முற்பகுதியில் அவர் கூறினார்.2001,செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனை பிடிப்பது அல்லது கொலைசெய்வதும் அல் - அல்கொய்தா இயக்கத்தை சீர்குலைப்பதுமே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பிரதான இலக்குகளாகும். அந்த இலக்குகளை அமெரிக்கா அடைந்துவிட்டது என்று பைடன் கூறினார்.

அதேவேளை, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்துக்கு திரும்பிவந்திருப்பதன் முக்கியத்துவத்தை  பைடன் குறைத்து மதிப்பிடுகிறார் என்பது தெளிவானது. அமெரிக்காவின் பிரதான எதிரி தலிபான்களாக இருக்கவில்லை என்பதும் அவர்களைத் தோற்கடிப்பது பிரதான இலக்காக இருக்கவில்லை என்பதுமே இதன் பின்னணியில் உள்ள வாதமாகும்.

9/11 தாக்குதல்களின்  தோற்றுவாயாக ஆப்கானிஸ்தான் இருந்தது என்பதற்காகவே ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா சென்றது என்பது உண்மை என்கிற அதேவேளை, தலிபான்கள் பற்றிய பைடனின் மதிப்பீட்டை அவருக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை.அவர்களது நடவடிக்கைகள் இதை வெளிக்காட்டுகின்றன.2001 டிசம்பரில் அடக்கமான நிபந்தனைகளின் கீழ் சரணடைவதற்கு தலிபான்கள் முன்வந்தார்கள், ஆனால், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் அதை நிராகரித்தார்.அத்துடன் அவரின் பாதுகாப்பு திணைக்களம் தலிபான்களை தோற்கடிக்கவேண்டும் என்று சூளுரைத்தது.

தலிபான்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானின் மலைகளுக்குள்ளும் பாகிஸ்தானுக்குள்ளும் பின்வாங்கிச்சென்ற பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வாபஸாகவில்லை.2011 ஆம் ஆண்டில் பின் லேடன் கொல்லப்பட்ட பின்னரும் கூட அமெரிக்கா வாபஸ்பெறவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலைகொண்டிருந்து இஸ்லாமிய குடியரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தது.ஏனென்றால், தலிபான்கள் அதிகாரத்துக்கு திரும்பிவந்தால், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் தடம்புரண்டுபோகும் என்று என்ற கருத்தை அமெரிக்க தலைவர்கள் கொண்டிருந்தார்கள்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்கள் மாறியிருக்கிறார்களா என்பது இன்னமும் விவாதத்துக்குரியதாக இருக்கின்றது என்கிற அதேவேளை, இதே காலகட்டத்திற்குள் அமெரிக்க வெளியுறவுக்கொள்கைச் சிந்தனை மாறியிருக்கிறது என்பது தெளிவானது. அல்கொய்தாவுக்கு புகலிடம் அளித்துவைத்திருந்த  தலிபான்களை அமெரிக்கா 2001 ஆம் ஆண்டில் பிரச்சினையின் ஒரு பகுதியாக பார்த்து அவர்களை அதிகாரத்தில் இருந்துவிரட்டுவது பயங்கரவாதம் மீதான  போரின் ஒரு முக்கிய இலக்கு என்று கருதியது என்றால், 2021 ஆம் ஆண்டில் வெற்றியாளர்களான தலிபான்களை பயங்கரவாதம் மீதான போரில் இருந்து விடுவித்திருக்கிறது. பைடனின் கோட்பாட்டின் பிரகாரம் நோக்கும்போது தலிபான்கள் இப்போது ஆப்கானியர்களின் பிரச்சினையே தவிர, அமெரிக்கர்களின் பிரச்சினையல்ல. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கடைசி நாட்களில் விமானநிலைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவம் தலிபான்களுடன் ஒருங்கணைந்து செயற்பட்டது. தலிபான்களும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹக்கானி கட்டமைப்பும் இரு தனித்தனியான அமைப்புகள் என்று இராஜாங்க திணைக்களமே கூறியது கவனிக்கத்தக்கது.

பயங்கரவாதம் மீதான போர்

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது அதை புஷ் அழைத்த பயங்கரவாதம் மீதான  உலகளாவிய போரின் முதலாவது அடி என்று கருதப்பட்டது.பயங்கரவாதத்துக்கு எல்லைகள் கிடையாது என்றும் பயங்கரவாதம் மீதான போரும் எல்லைகளுக்குள் மட்டுப்படாது என்றும் புஷ் கூறினார்.அந்த போர் இப்போது எங்கே நிற்கிறது?

2001 ஆம் ஆண்டில் அல் -- கயெடா பெருமளவுக்கு ஆப்கானிஸ்தானுக்குள் குவிந்திருந்தது.அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும் தலிபான்களின் வீழ்ச்சியும் அல் -- கயெடாவின் சீர்குலைவுக்கு வழிவகுத்தன.அது தலைமறைவாக இயங்கவேண்டியதாயிற்று.ஆனால் தோற்கடிக்கப்படவோ அல்லது அழித்தொழிக்கப்படவோ இல்லை.பல வருடங்களாக அல் -- கயெடாவின் புதிய கிளைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தோன்றத்தொடங்கின.அவற்றில் மிகவும் கொடூரமான ஒன்று 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு அபூ மூசாப் அல் -- சார்காவி தலைமையில் ஈராக்கில் தோன்றிய அல்-- கயெடாவாகும்.ஜோர்தானில் பிறந்த சார்காவி 2006 அமெரிக்காவின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார்.ஆனால், ஈராக் அல் -- கயெடா ஈராக்கின் இஸ்லாமிய அரசு இயக்கமாக மாற்றம் பெற்றது. அதுவே பின்னர் 2014 ஆம் ஆண்டில் ஈராக்கினதும் சிரியாவினதும் எல்லைப்பிராந்தியங்களில் முதன்முதலான ' கலிபேற்றை ' (இஸ்லாமிய ஆட்சியை) பிரகடனம் செய்த இஸ்லாமிய அரசு இயக்கமாக வந்தது.

மட்டுப்பாடான பயன்கள்

இஸ்லாமிய அரசின் பௌதீக உட்கட்மைப்புக்கள் அமெரிக்கா உட்பட  ஈரான், ஈராக், குர்திஷ் மற்றும் ஷியா திரட்டல் படைகள், சிரியா மற்றும் ரஷ்யா  ஆகியவற்றைக்கொண்ட கூட்டணியின் ஒருங்கிணைந்த போரினாலும் தனித்தனியான போர்களினாலும் நிர்மூலஞ்செய்யப்பட்டன.உலகின் ஏனைய பகுதிகளிலும் இஸ்லாமிய அரசு மாகாணங்களை நிறுவியது. இதில் இஸ்லாமிய அரசு மேற்கு ஆபிரிக்க மாகாணம் மற்றும் இஸ்லாமிய அரசு கோராசன் மாகாணம் ஆகியவையும் அடங்கும்.ஆகஸ்ட் 26 காபூலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 200 க்கும் அதிகமானவர்களை பலியெடுத்த குண்டுதாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு கோராசன் மாகாணமே உரிமை கோரியது. அல்கொய்தாவும் ஆபிரிக்காவில் குறிப்பாக, சஹில் பிராந்தியத்தில் அதன் கடுமையான பிரசன்னத்தைக் கொண்டிருக்கிறது.அந்த பிராந்தியத்தில் அல்கொய்தா அண்மைக்காலத்தில் மேற்கொணட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.2001 ஆண்டில் அல்கொய்தா ஆப்கானிஸ்தானில் குவிந்திருந்த பயங்கரவாத இயந்திரமாக இருந்ததென்றால், இப்போது அது உலகம் பூராவும் பரவிய ஒரு பன்முகப்படுத்தப்பட்ட  சேர்க்கையாக மாறிவிட்டது.

அமெரிக்க பிரதான பரப்பில் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடிய ஆற்றல்களை இழந்துவிட்டதாக அமெரிக்கா நினைக்கின்ற அல்கொய்தாவின் ஆப்கான் கட்டமைப்புக்களை சீர்குலைத்தமைக்காகவும் பின் லேடனை கொன்றமைக்காகவும் அமெரிக்கா பெருமையடையலாம். ஆனால், இந்தளவு மட்டுப்பாடான இலக்குகளை அடைவதற்கு ஆப்கானிஸ்தானில் 20 வருடங்கள் நிலைகொண்டிருந்திருக்க வேண்டுமா? இரு ட்ரில்லியன் டொலர்களை இழந்திருக்கவேண்டுமா? 2300 படைவீரர்களை பலிகொடுத்திருக்கவேண்டுமா? அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களும் மக்களும் முகங்கொடுக்க வேண்டிய கேள்விகள் இவை.

(த இந்து) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54