அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதல் தின வைபவத்தில் மயங்கி விழுந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைபவத்தில் கலந்து கொண்டவர் ஹிலாரி கிளின்டன் அல்ல எனவும் அவரைப் போன்ற உருவத் தோற்றத்தைக் கொண்ட பிறிதொருவர்  என அவரது எதிர்ப்பாளர்கள் விநோதமான உரிமைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஹிலாரி கிளின்டனுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ள நிலையில் அவர் தன்னைப் போன்ற ஒருவரை தனக்குப் பதிலாக குறிப்பிட்ட ஞாபகார்த்த தின நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளதாக சமூக இணையத்தளப் பயன்பாட்டாளர்கள் பலரும் கூறுகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை வைபவத்தில் கலந்து கொண்ட ஹிலாரிக்கும் நிஜ ஹிலாரிக்குமிடையே உருவத் தோற்றத்தில் வேறுபாடுகள் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஹிலாரியின் சுட்டு விரல் அவரது மோதிர விரலை விடவும் பெரிதாகவுள்ள நிலையில் 9/11 ஞாபகார்த்த தின வைபவத்தில் கலந்து கொண்டவரின் விரல்கள் அதற்கு எதிர்மாறாகவுள்ளதாகவும் அதேசமயம் அவர்கள் இருவரதும் மூக்கும் காதுகளும் வித்தியாசமாகவுள்ளதாகவும் மேற்படி சமூக இணையத்தள பாவனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.