தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதென்பது அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகின்றபோதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அசமந்தமாகவிருப்பதாக ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் குற்றம் சாட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்று காணி உரிமம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   அவர்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

200 வருடகால வரலாற்றைக்கொண்ட தோட்டத்தொழிலாளர்கள் தற்போதும் காணி, வீட்டு உரிமம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்த நாட்டை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியவர்கள் தோட்டத்தொழிலாளர்களேயாவர்.   ஆனால் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. கௌரவம், சுதந்திரம் வழங்கப்படவில்லை. அவை அனைத்தும் வழங்கப்படவேண்டும்.

வீட்டு உரிமம், காணி உரிமம் வழங்கப்படவேண்டும். அதுமட்டுமன்றி தோட்டங்களில் தொழில் புரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் காணி, வீட்டு உரிமங்கள் வழங்கப்படவேண்டும்.

சிறுபான்மை சமூகங்கள் தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டுவரும் இந்தச் சந்தர்ப்பத்தினை முறையாக பயன்படுத்தி நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் எமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப அங்காங்கே காணி உரிமங்கள் வழங்கப்பட்டன. எனினும் அவற்றை முறைமையாக மக்களிடத்தில் கையளிப்பதில் அசமந்தப்போக்கே நிலவுகின்றது. ஆகவே இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட்டு எமது மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றார்.