பூஜித், ஹேமசிறிக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரத்தினை கையளிக்க நீதிமன்றம் உத்தரவு

Published By: Digital Desk 3

07 Aug, 2021 | 10:37 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும்  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர  ஆகியோருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை கையளிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

இந்நிலையில் அந்நடவடிக்கைகளுக்காக குறித்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று குறித்த வழக்கானது   கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர்  அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவரும் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களின் கைரேகை பதிவுகளை பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று நீதிமன்றில் ஆஜராகிய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீள ஆராய்ந்து உறுதியான ஒரு குற்றப் பகிர்வுப் பத்திரத்தை முன் வைக்க நீதிமன்றில் அனுமதி கோரினார். அதற்கு அனுமதியளித்த நீதிமன்றம் வழக்கை அதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

முன்னதாக, தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கடமையை நிறைவேற்ற தவறியதன் ஊடாக  கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் பூஜித்த, ஹேமசிறி மீது குற்றம்  சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே இவ்விருவருக்கும் எதிராக தனித் தனியான அவ்வழக்கு விசாரணைகளுக்கு மூவர் கொண்ட  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்க சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம்  கோரியிருந்தார்.

கடந்த மே மாதம் 3 ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக, 2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்,  உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து  கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய தகவல்களை காட்சிப் படுத்தும் நடவடிக்கை  முதலில் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டது.

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவருக்கும் எதிராக மூவர் கொண்ட விஷேட நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் தனித்தனியாக வழக்கு விசாரணைகள் இரண்டினை முன்னெடுக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைக்கும் முகமாகவே இவ்வாறு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

அதற்கான கோரிக்கை சட்ட மா அதிபரால், பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் கடந்த மே 3 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 7 ஆம் திகதிக்கும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,  தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் இருந்து கிடைக்கப் பெற்ற,  இரகசிய மற்றும் உளவுத் தகவல்களை கணக்கில் கொள்ளாது இருந்தமை, அதனை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக  சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் மத வழிபாட்டுத் தளங்கள், ஹோட்டல்கள் மற்றும் வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல் நடாத்த  ஒருங்கிணைந்துள்ளதாகவும்,   இறுதிக் கட்ட தயார் நிலையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் அளிக்கப்பட்டும் அவற்றை கணக்கில் கொள்ளாமல் பராமுகமாக நடந்துகொண்டமை ஊடாக 275 பேரின் மரணத்துக்கும்  சுமார் 500 பேர் வரையிலானோரின் காயங்களுக்கும்  பொறுப்புக் கூற வேண்டும் எனும் வகையில், பூஜித், ஹேமசிறிக்கு எதிராக  தண்டனை சட்டக் கோவையின் 296 மற்றும் 300 ஆம் அத்தியாயங்களின் கீழ் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அது குறித்தே மேல்  நீதிமன்றில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

2019 ஏப்ரல் 7 ஆம் திகதிக்கும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியை குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறிக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் குறித்து போதுமான உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும், அதனை தடுக்க போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமை ஊடாக 275 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாகவும் காயமடைந்த 500 இற்கும் அதிகமானோரை  கொலை செய்ய முயற்சித்தமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும்  இவ்விருவருக்கும் எதிராக  குற்றச்சாட்டுக்கள் தண்டனைச் சட்டக் கோவையின் 296 மற்றும் 300 ஆம் அத்தியாயங்களின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போது அவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த ஜூலை 7 ஆம் திகதி  அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த 2019 ஜூலை 2 ஆம் திகதி ஏப்ரல் 21 தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.  தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327,328 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ்   இவர்கள் இருவரும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்ததக கூறி அவர்கள் அப்போது கைது செய்யப்ப்ட்டனர். எனினும் 2019 ஜூலை 9 ஆம் திகதி, அப்போதைய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன குறித்த இருவருக்கும் பிணையளித்திருந்தார்.

எனினும் அப்பிணை உத்தரவை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனுக்கமைய, இந்த விவகாரத்தில் பூஜித், ஹேமசிறி ஆகியோரின் பிணை ரத்து செய்யப்பட்டு 2019 ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மேல் நீதிமன்றம் ஊடாக அவர்கள் பிணைப் பெற்றுக்கொண்ட நிலையில்,  அந்த விடயம் குறித்த விசாரணைகள் நிறைவடைந்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே தற்போது அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் மேல் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு நீதிபதிகளும் பெயரிடப்பட்டு, ஆரம்பகட்ட அமர்வுகளும் இடம்பெர்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24