ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையூடான ஆபத்துக்கள்  நிறைந்த பயணம்: வரித்தொகையும் இரட்டிப்பாகியது 

Published By: Gayathri

04 Aug, 2021 | 09:50 PM
image

அமெரிக்க கூட்டுப்படைகளின் வெளியேற்றத்தினை அடுத்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர், 

இந்நிலையில் எல்லையைக் கடந்து செல்லும் மக்கள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்து அவ்விடத்தினை தாண்டிச் செல்வதற்காக அவர்கள் இலஞ்சம் கோர ஆரம்பித்திருக்கின்றார்கள். 

அதேசமயம் பாகிஸ்தான் அரசாங்கமும் எல்லையூடான பயணத்திற்கு தனியாக வரியை அறவிடுவதன் காரணமாக ஆப்கான், பாகிஸ்தான் எல்லையூடான பயணிகளின் பயணத்திற்கான வரித்தொகை தற்போது இரட்டிப்பாகியிருக்கிறது. 

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹாருக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள எல்லைகளான சாமன் மற்றும் ஸ்பின் போல்டக் ஆகிய பகுதிகளின் ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. 

இதன்போது வழக்கமாக பாகிஸ்தானின் சந்தைகள் அல்லது துறைமுகங்களுக்கு கட்டுப்பட்ட வரிகளுடன் விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்கின்றன. 

அதேபோன்று கந்தஹாரிலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் பாகிஸ்தான் துறைமுகத்திற்கு சில பொருட்கள் வருகின்றன. 

இவ்வாறு இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம் - வருடத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்பு வாய்ந்தவையாக உள்ளன. 

இந்த மாதத் தொடக்கத்தில் தலிபான்கள் எல்லை நகரத்தை கைப்பற்றிய பின்னர் இப்போக்குவரத்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இவ்வாறிருக்க, தலிபான்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இன்னும் எந்த மாகாணங்களினதும் தலைநகரங்களை தமதாக்கவில்லை. ஆனால் மாகாணங்களின் பிரவேசப் பகுதிகளை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்கள். 

குறிப்பாக, நில எல்லைகளை தம்வசப்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருப்பதோடு பின்னர் அவற்றை தொடர்ச்சியாக தக்கவைத்தும் வருகின்றனர். 

அந்த வகையில், ஆப்கான் அரசுக்கு சுங்க வரி உள்ளிட்ட முக்கிய வருவாயை வழங்கும் ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முக்கிய எல்லைகளை தலிபான்கள் தம்வசப்படுத்தியுள்ளனர். 

இதனடிப்படையில் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் இந்த வாரம் முதல் நாளான திங்கட்கிழமை முதல் மீண்டும் எல்லைகளின் ஊடான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருநாட்டு எல்லை ஊடாக பயணித்த பாரவூதி சாரதியான ஹிதாயத்துல்லா கான், “நாங்கள் கந்தஹாரில் திராட்சைகளை ஏற்றினோம், பாகிஸ்தானுக்கு வரும் வழியில் நாங்கள் மூன்று முறை நிறுத்தப்பட்டோம். எங்களிடத்தில் பணம் கேட்கப்பட்டது. மிரட்டும் தொனியில் பணம் கேட்டுப் பறிக்கப்பட்டது” என்று சாமன் எல்லைத் தரிப்பிடத்தில் வைத்துக் கூறினார். 

அத்துடன், “சில நேரங்களில் அவர்கள்(தலிபான்கள்) 3,000 ரூபா  2,000 ரூபா, வழங்குமாறு கோருவார்கள். வேறு சில இடங்களில் ஆயிரம் ரூபா தருமாறு கோருவார்கள்" என்றும் அவர் கூறினார்.

“ஸ்பின் போல்டக்கில் உள்ள தலிபான் அதிகாரிகளுக்கும், கந்தஹாரில் உள்ள அரச சுங்க அதிகாரிகளுக்கும் செலுத்த வேண்டிய வரிகளுக்கு மேல் போக்குவரத்து வழியில் பணம் செலுத்த வேண்டியுள்ளது” என்றும் அவர் மேலும் கூறினார். 

இதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட்டு வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் இம்ரான் காகர், “கராய்ச்சியிலிருந்து கந்தஹாருக்குச் செல்ல வேண்டிய துணியை ஒரு பாரவூதியில் எடுத்துச் செல்வதாக உதாரணமாக வைத்துக்கொள்வோம். 

அதற்கு, ஸ்பின் போல்டக்கில் வைத்து தலிபான்கள் 150,000 ரூபா கட்டணம் வசூலித்தனர், ஆனால் வாகனம் காந்தஹாரை அடைந்ததும் ஆப்கான் அரச அதிகாரிகளும் வரிகளை அறவிடுவதற்காக காத்திருந்தனர். 

தலிபான்களுக்கு பணம் செலுத்தியதை கூறியபோதும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வில்லை. ஆப்கான் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதனால் இன்னும் அதிக சுங்க வரிகளை செலுத்த வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.

1990 களில் நடந்த உள்நாட்டுப் போரின்போது ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த காட்சிகள் மீளவும் நினைவூட்டப்படுகின்றன. போராளிகளின் ஒட்டுச் செயற்பாடுகள் நடைபெற்றன. முக்கிய வர்த்தக வழித்தடங்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் சாலைகள் ஆகியவை விருப்பப்படி பயன்படுத்தபட்டன. 

தற்போது, பாகிஸ்தான் எல்லையில் நூற்றுக்கணக்கான பாரவூதிகள் எல்லையைக் கடப்பதற்காக நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன. அனுமதி பெற்ற பாரவூதிகள் தூசி நிறைந்த சமவெளியிலும்  கரடுமுரடான மலைப்பாங்கான பாதைகளிலும் பயணத்தை ஆரம்பித்தன. 

அவற்றுக்குப் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தலிபான்களின் ஆயுதங்கள் தாங்கிய வாகனங்கள் முன்னாலும் பின்னாலும் அணிவகுத்து வந்தன.

வெறுமனே நூறு கிலோமீற்றர்கள் தூரமே இத்தகைய பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் மிகவும் ஆபத்தான பயணமாகவே அதுவுள்ளது. 

இந்த ஆபத்தான பகுதியைக் கடந்த பின்னரும், ஆப்கானின் எல்லையில் பயணிக்க வேண்டிய பெருவீதிகள் முறையாக பராமரிக்கப்படாது மிக மோசமாக காணப்படுகின்றது. 

அத்துடன், அந்தப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, இராணுவ, பொலிஸ் சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு சோதகைள் முன்னெடுக்கப்படுவதோடு சாரதிகளிடத்திலிருந்து ‘தேநீர் செலவுக்கான பணம்’ என்ற பெயரில் பணம் பெறப்படுகின்றது. 

இதற்கு அப்பால் இடைவெளியில் கொள்கைக்காரர்களும் பொருட்களை திருடுவதற்கு முயற்சிகளை அவ்வப்போது முன்னெடுக்கின்றார்கள். 

இவற்றையெல்லாம் கடந்து பயணங்களை மேற்கொண்டாலும், தலிபான்களுக்கும், அரச படைகளுக்கம் இடையிலான மோதலின்போது பரஸ்பரம் நடைபெறும் குண்டுத்தாக்குதல்கள், ரொக்கட் வீச்சுக்கள், ஷெல் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கும் முகங்கொடுக்க அபாயமும் உள்ளது. 

“போர் நடந்துகொண்டிருக்கின்றது. எங்களுடைய உயிர்களும், உடைமைகளும் ஆபத்தில் உள்ளன. ஆனால் எங்களுக்கு இதனை விட வேறு வழிகள் தெரியவில்லை” என்று இந்த ஆபத்துக்கள் நிறைந்த பாதையின் ஊடாக கந்தஹார் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த பாரவூதி சாரதியான ரசாக் என்பவர் கூறுகின்றார். 

நன்றி: அல் அரேபியா போஸ்ட் 
தமிழில் : ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48