எழுத்துகளுக்காக சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை கவிஞர்

04 Aug, 2021 | 09:01 PM
image

ஆர். ஜெயந்தி

இலங்கையில் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளை  பெரும்பாலன முஸ்லிம் மக்கள் கொண்டாடிய போதும் பல குடும்பங்கள் அவ்வாறு இல்லை. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இடம் பெற்ற பல கைதுகள் கூட அதற்கு காரணமாகின்றன.

அந்த வரிசையில் இளம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீமின் கைது, மனித உரிமை அமைப்புகளையும், பெரும்பான்மை இனத்தவர்கள் உள்ளிட்ட பல சமூக அமைப்புகளையும் கேள்வி எழுப்பத் தூண்டியுள்ளது.

அஹ்னாஃப் ஜசீமுடன் இணைந்து புத்தாடை உடுத்தி பெருநாளை கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்புடன் அவரது சகோதரர் மற்றும் குடும்பம் காத்துக்கொண்டு இருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர். தமது மதம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் பல சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது மிக அவசியமான ஒன்று, எனினும் பல சந்தர்ப்பங்களில் இனவாதத்தைத் தூண்டும் வகையான  கைதுகள் மற்றும் நீண்ட கால தடுப்பு காவல், இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் பலரின் அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

இதில் குறிப்பாக, 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் நியாயமற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் பயங்கரவாத தடுப்பு சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் எண் 56 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு   குற்றச்சாட்டுகள்  இன்றி  தடுத்துவைக்கப்பட்டுள்ள, இளம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீமின் கைது இலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு சான்று.

2020 மே 16 அன்று கைது செய்யப்பட்டு தற்போது ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள அஹ்னாஃப் ஜசீமின், சிறுவயது முதலே தமிழ் புலமையும் கவிதை எழுதுவதில் ஆர்வமும் உடையவர் என அவரின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

2019 மார்ச் 30 ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தில் ஏழுவருடம் கல்வியைப் பூர்த்தி செய்துள்ள அஹ்னாஃப், அதே ஆண்டில் ஜூலை 01 ஆம் திகதி புத்தளம் மாவட்டம் மதுரங்குளியில் அமைந்துள்ள ஆங்கில மொழிமூல “ஸ்கூல் ஒஃப் எக்ஸலன்ஸ்” இல்  தமிழ் பாட ஆசிரியராக இணைந்துள்ளார்.

ஆரம்பத்தில் உறவினர் வீட்டிலிருந்து பணிக்குச் சென்ற அவருக்கு  2 மதங்களின் பின்னர்  பாடசாலை நிர்வாகத்தின் உதவியுடன் பாடசாலை கட்டிடத் தொகுதியில், தங்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததாக அவரின் சகோதரர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தனது பணியை முன்னெடுத்த அவர்  2020  மார்ச் மாதம் அளவில்  நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல்  ஊரடங்கு காரணமாக தமது  ஆவணங்கள் அனைத்தையும்  பாடசாலையில் கட்டிடத்தில் விட்டுவிட்டு  உடைகளை கூட எடுத்துக் கொள்ளாமல் அஹ்னாஃப் ஜசீம் வீட்டிற்கு வந்ததாக அவரின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

இதன்போது  அஹ்னாஃப் ஜசீமின் கல்வி சார்ந்த ஆவணங்கள் சான்றிதழ்கள் மற்றும் “நவரசம்” புத்தகத்தின் 100 க்கு மேற்பட்ட பிரதிகளையும்  பல கவிதைகளையும் பாடசாலையின் கட்டிடத்தில் வைத்துவிட்டு வந்திருந்ததாக அவரின் சகோதரர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 259 அப்பாவி மக்களைக் காவுகொண்ட மிலேச்சத்தனமான  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடங்கள் கடந்திருந்த நிலையில் அரசாங்கம் குண்டு வெடிப்பு குறித்த விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருந்தது.

இந்நிலையில்,  2020, மே  மாதம் 6 ஆம் திகதியளவில்,   புத்தளம், மதுரங்குளியில்  உள்ள கட்டிடம் ஒன்றில், சஹ்ரான் பயங்கரவாத பயிற்சி வழங்கியதாகவும் அங்கு பணியாற்றி ஆசிரியர் ஒருவரும் அடிப்படைவாதத்தைப் போதித்ததாக  சந்தேகிக்கப்படுவதாகவும்  ஊடகங்களில் செய்திகள்  வெளியாகின.

இதே சந்தர்ப்பத்தில் புத்தளம் கற்பிட்டி, பகுதியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மௌலவி ஒருவருடன் தொடர்புப்படுத்தி இந்த செய்திகள் வெளியானதாக அஹ்னாஃப் ஜசீமின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு சோதனை  இடப்பட்ட கட்டிடம்  அஹ்னாஃப்   தங்கியிருந்த  பாடசாலை கட்டிடம் என்பதைத் தாம் அறிந்து கொண்டதாகவும்  அங்கு, வைக்கப்பட்டிருந்த “நவரசம்” புத்தகங்கள்  உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும்  குற்றத்தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவரின் சகோதரர் கூறுகின்றார்.

“எனினும் எனது சகோததரர் குற்றமற்றவர் என்பதால் விசாரணைகளை எதிர்கொள்ள  அவர் தயாராக இருந்தார். நாம் எதிர் பார்த்தது போன்று நோன்பு பெருநாளுக்கு சில தினங்களுக்கு முன்னர்  வெள்ளை வேனில்  ஒரு குழுவினர் அஹ்னாஃப் ஜசீமை தேடி எமது வீட்டிற்கு  வந்தனர்”

“நோன்பு துறப்பதற்கு சில நிமிடங்களே இருந்து. அப்போது  எமது  வீட்டிற்கு வந்த  பொலிஸ் உடை அணிந்த ஒருவர் உள்ளிட்ட  ஐவர்  எனது சகோதரர் தொடர்பில் விசாரித்தார்கள் எனினும் அவர் வெளியில் சென்றிருந்ததால் அவர் வரும் வரை அவர்கள் எமது வீட்டில் காத்திருந்தனர்.” என சம்பவத்தை விபரிக்கின்றார் அஹ்னாஃப் ஜசீமின் சகோதரர்.

“எனது சகோதரர் வந்த உடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் 105 “நவரசம்” புத்தகங்கள் உட்பட 154 புத்தகங்களை  எடுத்துக்  கொண்டதோடு, எமது  சகோதரரையும்  விசாரணைக்கு  அழைத்தனர்” எனவும் அவர் கூறுகின்றார்.

இதன் போது அஹ்னாஃப்  ஜசீம், நோன்பு துறப்பதற்கான தொழுகையை செய்திருக்கவில்லை என்பதால் அதற்கு அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் எனினும் அதுவரை, விசாரணைக்காக  வந்திருந்தவர்கள்  அஹ்னாஃபின் பின்னால் இருந்ததாகவும் அஹ்னாஃபின்  சகோதரர்  குறிப்பிடுகின்றார்.

ஒரு தீவிரவாதியை போன்று  அழைத்துச்  செல்லப்பட்ட  தனது  சகோதரர்  மறுநாள் மீண்டும் தமது வீட்டின் வாசல் வரை அழைத்து வரப்பட்டதோடு மேலும் நவரசம் புத்தகங்களை  ஊர்  மக்களிடமிருந்து சேகரித்து  தருமாறு  குற்றத்தடுப்பு பிரிவினர்  தமது குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அஹ்னாஃபின்  சகோதரர்  குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு  “நவரசம்”  புத்தகங்களை வைத்திருந்தவர்கள் தொடர்பிலும் அங்கு வந்தவர்கள் விசாரணைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிடும் அவர் இந்த செயற்பாடுகளை அடுத்து ஊர் மக்கள் பீதி அடைந்தாகவும் பலர் “நவரசம்”   புத்தகத்தை தீ இட்டு கொளுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு  தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாஃப்  ஜசீம்  மீது “இனவாதம் மற்றும் தீவிரவாதத்தை போதித்தமையும் புத்தகங்களை வெளியிட்டமை  எனும் சந்தேகத்தில் கைது செய்யப்படுவதாக ”  பொலிஸார்  குற்றச்சாட்டை முன்வைத்த போதும் தமது சகோதரர் இதுவரை ஒரு புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுள்ளதாகவும் அதில் அவர் இனவாதத்தையோ  தீவிரவாதத்தையோ போதிக்க வில்லை என  அஹ்னாஃபின்  சகோதரர்  வாதிடுகின்றார்.

“மூன்று மாதங்களுக்கும் அதிகமாக கை விலங்கு போடப்பட்டு வைத்திருந்ததாக ” தமது சகோதரர் தெரிவித்ததாகவும் இது தவிர அவர் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அஹ்னாஃபின்  சகோதரர் சந்தேகம் வெளியிடுகின்றார்.

அஹ்னாஃப் கல்வி பயின்ற “ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தில்”, கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதத்தையும் இஸ்லாமிய இனவாதத்தையும் எடுத்துக்கொண்டு அதே சிந்தனையை மாணவர்களுக்கு   போதித்ததாகச் சாட்சி வழங்கும் படி அஹ்னாஃப் ஜசீம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவரின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

தனது தந்தையுடன் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சாட்சியை வழங்குவதற்கு அஹ்னாஃப் ஜசீம் மற்றும் அவரின் தந்தை மறுத்துவிட்டதாகவும் அஹ்னாஃப் ஜசீமின் சகோதரர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு, சாட்சி வழங்கும் பட்சத்தில் அஹ்னாஃப்  ஜசீம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதோடு விடுதலை செய்யப்படுவார் என குற்றத்தடுப்பு பிரிவினர் கூறியுள்ளதாகவும் அவரின் சகோதரர் கூறுகின்றார்.

தடுப்புக்காவில் உள்ள போது தமது சகோதரர் பலமுறை சுகயீனம் உற்றதாகவும் அவருக்கு சில தடவைகள் ,  மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவரின் சகோதரர் குறிப்பிடுகின்றார்.

எனினும் சுகாதாரம், உளநலம், எழுத்து சுதந்திரம், மற்றும் வாசிப்பதற்கான சுதந்திரம் என அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாகவும்  அஹ்னாஃப்  ஜசீமின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

வாரத்தில் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் மட்டுமே அஹ்னாஃப்  ஜசீமுடன் கதைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவரின் சகோதரர் கவலை வெளியிடுகின்றார்.

அவரின் விடுதலைக்காகத் தாம் இறைவனிடம் பிரார்த்தித்தபடி காத்திருப்பதாகவும் எந்த குற்றமும் இழைக்காத தனது சகோதரர் விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கையை முன்வைக்கின்றார்.

அஹ்னாஃபின் கைது இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மட்டுமல்ல இலங்கையின் சர்வதேச மனித உரிமை கடமைகளையும் மீறுவதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர்  அம்பிகா சற்குணநாதன்  தெரிவிக்கின்றார்.

தடுத்து வைக்கப்படும் அனைவருக்கும் எழுதுவதற்கு மற்றும் புத்தகம் வாசிப்பதற்கு உரிமை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமானது அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது. ஆகையால் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் கட்டாயம் ஒருவரின் உரிமைகள் மீறப்படுகிறது என அம்பிகா சற்குணநாதன்  தெரிவிக்கின்றார்.

உதாரணமாக பயங்கரவாத தனிச்சட்டத்தின் கீழ் ஒருவர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படாமல் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்படலாம். மேலும் இவ்வாறு தடுத்து வைக்கப்படும் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாக வழக்கின்போது சமர்ப்பிக்கலாம்.

இதனால் வாக்குமூலம் எடுப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டோர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம். அப்படி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோர் பலர். ஆகையால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டமே மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.

 ICCPR சட்டமானது அரசாங்கத்தால் பிழையான முறையில் பயன்படுத்தப்படுகின்றது. “மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் மனித உரிமைகளை மீறுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது” என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர்  அம்பிகா சற்குணநாதன்  வலியுறுத்துகின்றார்.

வரலாறு ரீதியாக பார்த்தோமானால் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களின் உரிமைகளை மட்டுப்படுத்த பாவிக்கப்பட்டது. தற்போது முஸ்லீம் மக்களின் உரிமைகளை மட்டுப்படுத்த பாவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டமும் ICCPR சட்டமும் தற்போதைய அரசாங்கத்தால் மட்டுமல்ல,  நல்லாட்சி அரசாங்கத்தால் கூட கருத்து சுதந்திரத்தையும் மத சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் பாவிக்கப்பட்டதாக அவர்  சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த கடுமையான சட்டங்களின் கீழ் கைதாகுபவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால் அரசியலமைப்பின் 20 வது திருத்தச்சட்டத்தின் பின்பு மனித உரிமைகள்  ஆணைக்குழு சுயாதீனமான ஆணைக்குழு அல்ல. ஏனெனில் தற்போது ஜனாதிபதியே அதன் அங்கத்தவர்களை நியமிக்கிறார்.

அத்தோடு, உச்ச நீதி மன்றத்திற்கு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால் இது விசாரணைக்கு எடுக்கப்பட தாமதமாகலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதை தவிர ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சிறப்புப் பொறிமுறைகளுக்கு , அதாவது ஏதேச்சயாக தடுத்து வைத்தலை ஆராய்வதற்கான செயற்குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம். இக்குழு அரசாங்கத்திற்கு அவரின் சார்பில் பரிந்துரைகளை செய்யும் என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர்  அம்பிகா சற்குணநாதன்  ஆலோசனை வழங்குகின்றார்.

இலங்கையின் பயங்கரவாத தடை சட்டமானது, பாதுகாப்பு அமைச்சிற்கு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதாக அஹ்னாஃப்  ஜசீமின் விடுதலைக்காக  வாதிட்டுவரும் சட்டத்தரணிகள்  குழுவில் ஒருவாரான  சட்டத்தரணி, அருலிங்கம் சுவஸ்திகா தெரிவிக்கின்றார்.

பயங்கரவாதத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது பயங்கரவாதி என ஒருவரை  சந்தேகிக்கும் பட்சத்தில்  நீதிமன்ற உத்தரவின்றி அவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்து நீதிமன்றத்தில் பிற்படுத்தாது 18 மாதங்களுக்குத் தடுத்துவைக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள, அஹ்னாஃப்  ஜசீமின் கைதுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தின்  அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பிணை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக  சட்டத்தரணி, அருலிங்கம் சுவஸ்திகா தெரிவிக்கின்றார்.

எனிம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இதுவரை  விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அத்தோடு இந்த சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவர்கள் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் சாதாரண சிறைகளில் வைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.

எனவே அஹ்னாஃப்  ஜசீம் எப்போது விடுதலைசெய்யப்படுவார் என்ற ஒரு சரியான அனுமானத்திற்கு வரமுடியாதுள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டுகின்றார்.

அரசின் போக்குக்கு எதிராக செயற்படுபவர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் இந்த இரு  சட்டங்களின் மூலம் இலக்கு வைக்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்பட்ட கலவரத்தின்போது, இலங்கையின் தென் பகுதியில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள்  பயங்கரவாத தடை சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் வடக்கில் இடம்பெற்ற சிவில் யுத்தம் காரணமான பல இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அவர் நினைவு கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதங்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடுமையான  பயங்கரவாத தடை சட்டம்  மற்றும் ICCPR சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் அரசுக்கு எதிராக செயற்படுபவர்களையும் சிறுபான்மை இனத்தவர்களையும் இந்த சட்டங்களின்  மூலம் கட்டுப்படுத்துவதாகவும்  சட்டத்தரணி, அருலிங்கம் சுவஸ்திகா தெரிவிக்கின்றார்.

அரசின் இந்த செயற்பாடுகள் அதிகமாக சிறுபான்மையினரின் கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை சுதந்திரத்தை முடக்கும் செயற்பாடாகவே உள்ளது.  

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடும் உடைகள் தொடர்பிலும் கட்டுப்பாடுகளை விதிக்க பாதுகாப்பு அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறி முன்னெடுக்கப்பட்ட பல செயற்பாடுகள் சிறுபான்மையினரின் மத உரிமைகளில் தாக்கம் செலுத்தின.

இதன் பின்னணியில் மேற்கொள்ளப்படும் கைதுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டங்கள் கையாளப்படுகின்றமை இலங்கையில் சிறுபான்மையினரின் நிலை குறித்து சர்வதேசத்தின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குறணை கிராமமும் பொது மக்களின் சவால்களும்

2024-03-29 16:46:00
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48