(எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் வீடில்லாமல் வீதியோரங்களிலுள்ள யாசகர்கள் உள்ளிட்டோரை பொலிஸாரின் மூலம் இணங்கண்டு அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்து வாக்குரிமை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளார் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்குள் பிரதான தேர்தல்களின் போது கொழும்பில் பணிப்புரியும் தூர பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு வாக்களப்பதற்கான வசதிகளை கொழும்பில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிடுகையில்,

சர்வசன வாக்குரிமை இலங்கையர்களுக்கு முதன் முதலாக கிடைக்கபெற்றது. எனவே இந்த வாக்குரிமையை நாம் உரிய முறையில் பிரயோகம் செய்ய வேண்டும். தற்போது இளைஞர்கள் மத்தியில் தேர்தல்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் வெறுப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகவே தேர்தல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் வீடில்லாமல் வீதியோரங்களிலுள்ள யாசகர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரின் மூலம் இணங்கண்டு அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்து வாக்குரிமை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். மேலும் அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் குணமடைந்த நோயாளர்களை வாக்காளர்களாக பதிவு செய்யவுள்ளோம்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்குள் பிரதான தேர்தல்களின் போது கொழும்பில் பணிப்புரியும் தூர பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான வசதிகளை கொழும்பில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

மேலும் காணாமல் போனோர் சான்றிதழ் உள்ளவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்படமாட்டாது. மரணமான சந்தர்ப்பத்தில் மாத்திரமே பட்டியலிருந்து பெயர் நீக்கப்படும் என்றார்.