பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் ரீதியான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் - சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு

Published By: Digital Desk 3

29 Jul, 2021 | 11:16 AM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் பெண்கள் முகங்கொடுக்கும் உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில், அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் துன்புறுத்தல்கள் பற்றிய முறைப்பாடுகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றன. 

எனவே பெண்கள் எதிர்நோக்கும் உடலியல் ரீதியான வன்முறைகள் அதிகம் பேசப்படுவதைப்போன்று உளவியல் ரீதியான வன்முறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின்  மகளிர் பிரிவின் பணிப்பாளர் மாலினி உபசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி நாட்டில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இறுக்கமான சட்டங்களின் ஊடாக மாத்திரம் முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரமுடியாது. மாறாக பெண்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சமூகக்கண்ணோட்டத்திலும் ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலத்தில் நாடளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைச்சம்பவங்கள் அதிகளவில் பதிவாகிவரும் சூழ்நிலையில், பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது குடும்ப வன்முறைச்சட்டம் நடைமுறையிலிருக்கும் அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் பலதரப்பட்ட சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களையும் இலங்கை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி பாலின ரீதியிலும் சமூக, பொருளாதார அடிப்படைகளிலும் பெண்களை வலுவூட்டுவதற்கான பல்வேறுபட்ட செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு மேலதிகமான பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அல்லது ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் ஆகியவை தொடர்பில் மகளிர் விவகார அமைச்சினால் தொடர்ந்தும் கவனம்செலுத்தப்பட்டுவருகின்றது.

பெண்கள் எதிர்கொள்ளும் உடலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டாலும்கூட, அவர்கள் எதிர்நோக்குகின்ற உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் எங்கும் பதிவுசெய்யப்படுவதில்லை. பெண்களில் பெரும்பாலானோர் அதனை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேபோன்று குடும்பங்களுக்குள் பெண்களை சமத்துவமாக நடத்தும் போக்கு காணப்படுகின்றதா? பெண்கள் உளவியல் ரீதியில் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை சட்டத்தின் ஊடாகக் கட்டுப்படுத்துமுடியாத நிலையில், அதுகுறித்து அதிகம் பேசப்படுவதும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதும் இன்றியமையாததாகும்.

நாட்டில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இறுக்கமான சட்டங்களின் ஊடாக மாத்திரம் முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரமுடியாது. மாறாக பெண்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சமூகக்கண்ணோட்டத்திலும் ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டியது அவசியமாகும். பெண்கள் மீதான அடக்குமுறைகளைப் பொறுத்தவரை, அவற்றைய பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குடும்ப வன்முறைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திவிடமுடியாது. மாறாக பொருளாதார, சமூக, சமய, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் பெண்கள் அடக்குமுறைகளுக்கும் தொல்லைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர்.

மேலும் இவ்வாறான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் அதுகுறித்துத் தெரியப்படுத்துவதற்கு ஏற்றவகையில் 1938 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று இதுபோன்ற சம்பவங்களின்போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஆலோசகர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளின்கீழும் நியமிக்கப்பட்டிருப்பதுடன் எமது அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் 11 ஆலோசனை வழங்கல் மத்திய நிலையங்களும் இயங்கிவருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆலோசனை சேவையைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை பெருமளவினால் அதிகரித்திருக்கின்றது என்று குறிப்பிட்டார்

அவரைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப்பிரிவின் அதிகாரி சட்டத்தரணி சஜீவனி அபயகோன் கூறியதாவது:

பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளின்போது பெண்களின் உரிமைகள் மாத்திரம் மீறப்படுவதாக அதனை மட்டுப்படுத்திக்கொள்வது ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். ஏனெனில் எமக்குக் கிடைப்பெறும் முறைப்பாடுகளில் பெருமளவானவை வீடுகளில் பிள்ளைகளின் முன்னால் தாயாரைத் தந்தையார் தாக்குகின்ற சம்பவங்களாகும். இவ்வாறான சம்பவங்களின்போது, அதில் தொடர்புபட்டிருக்கும் பிள்ளை வெளிப்படுத்தமுடியதா மறைமுகமான பாதிப்பை எதிர்கொள்கின்றது. அதுமாத்திரமன்றி எதிர்காலத்தில் அவர்கள் குடும்பவாழ்க்கையொன்றை முன்கொண்டுசெல்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் எமது நாட்டில் காணப்படும் சட்டங்கள் தொடர்பில் பலருக்குப் போதியளவான தெளிவில்லை. இலங்கையின் எழுத்தறிவு வீதம் உயர்வாகக் காணப்படுகின்ற போதிலும், சட்ட அடிப்படைகள் தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் அறிவு மிகவும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது. ஆகவே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய சட்டநடவடிக்கைகள், அவற்றுக்கான தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானதாகும் என்று வலியுறுத்தினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21