ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் - கம்மன்பில

Published By: Digital Desk 3

28 Jul, 2021 | 10:25 AM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்பதை அவரே  தெரிவித்துள்ளதால் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள அரசியல் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புவதாகவும், இல்லையேல் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் அரசாங்கம் பிளவுபடும் நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் கூறும் அமைச்சர் உதய கம்மன்பில, தேசிய ரீதியில் அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தை கைவிட்டு வெளியேற நாம் தயாரில்லை எனவும் கூறினார்.

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் உள்ளதை நாம் இன்றும் நிராகரிக்கவில்லை, அரசாங்கதிற்குள் ஏற்பட்ட பிரச்சினையை சிலர் வெளியில் பிரசித்தியாக வெளிப்படுத்த முயற்சித்தனர், ஆனால் நாம் அரசாங்கத்திற்குள் எமக்கு எதிராக எழுந்த நெருக்கடிகளை வெளிப்படுத்தவோ அல்லது அதன் மூலம் பிளவுகளை ஏற்படுத்தவோ நினைக்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் வேறு நிகழ்ச்சி நிரலொன்று இயங்கிக்கொண்டுள்ளது என்பதை இன்றும் நாம் உறுதியாக கூறுவோம்.

அரசாங்கம் பாரிய நெருக்கடியில் உள்ளது, பொருளாதார நெருக்கடி நிலைமைகள் கையாள்வதில் சிக்கல்கள் உள்ளன. பொருளாதாரதத்தை சமப்படுத்த மக்களின் பணத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. 

இதனால் மக்களும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டுமென நாம் நினைக்கின்றோம். ஆனால் அரசாங்கத்தில் உள்ளவர்கள் சகலரும் அதே நிலைப்பாட்டில் உள்ளனரா என்பதில் சசந்தேகம் உள்ளது.

அதேபோல் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அரசாங்கத்தை ஒன்றிணைத்துவிட்டனர் என்பதை நான் கூறவில்லை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே கூறியுள்ளார். 

அதுமட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்த யோசனையை ஏற்றுக்கொண்டிருந்தாள் பிரேரணை தோற்றாலும் கூட மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் பிரசாரம் ஒன்றினை கொண்டுசென்றிருக்க முடியும். ஆகவே  எதிர்க்கட்சியினரின் திட்டங்கள் தவிடுபொடியாகிவிட்டன.

மேலும் அடுத்த தவணைக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அவரே சில விடயங்களை கூறியுள்ளார். 

அவர் இப்போது இவ்வாறான காரணிகளை கூறியது நல்ல விடயமென்றே நாம் கருதுகின்றோம். அவ்வாறு இல்லையேல் இப்போதே அரசாங்கத்திற்குள் அடுத்த ஜனாதிபதி யாரென்ற போட்டித்தன்மை உருவாகி இறுதியாக பிளவுகளும் ஏற்பட்டுவிடும். 

எனவே அவரே அடுத்த தடவையும் இருப்பார் என்ற அரசாங்கத்தின் உறுதியாக கொள்கையொன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றார். 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்