மூடியின் முதலீட்டாளர் சேவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது - நிதியமைச்சு

Published By: Digital Desk 3

21 Jul, 2021 | 10:55 AM
image

(நா.தனுஜா)

இலங்கையானது அதன் முதிர்ச்சியடைந்த (காலஅவகாசம் பூர்த்தியடைந்த) கடன்களை மீளச்செலுத்துவதற்கு அவசியமான நிதியைத் திரட்டிவரும் சூழ்நிலையில், மூடியின் முதலீட்டாளர் சேவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது. 

இந்த அறிவிப்பானது, இலங்கையின் சர்வதேச பிணைமுறிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு முதலீட்டுவாய்ப்புக்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்று நிதியமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, இத்தகைய அடிப்படையற்ற அறிவிப்புக்களைக் கருத்திற்கொள்ளாமல் எந்தவொரு விடயம் தொடர்பிலும் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

இலங்கைக்கான நீண்டகால நாணய வழங்குனர்கள் மற்றும் முதிர்ந்த பாதுகாப்பற்ற கடன்கள் என்பன மூடியின் முதலீட்டாளர் சேவையினால் 'தரமிறங்குவதற்கான மதிப்பாய்வில்' வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வெளியகத்தேவைக்கான சொத்துக்களின் திரவத்தன்மை மோசமடைந்துவரும் நிலையில், மூடியின் முதலீட்டாளர் சேவையினால் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையினால் மீளச்செலுத்தப்படவேண்டியிருக்கும் கொடுப்பனவுகள் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலை மற்றும் அரசாங்கம் அதனை உரியவாறு கையாள்வதற்கான இயலுமையைக் கொண்டிராமை ஆகியவை மூடியின் முதலீட்டாளர் சேவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி மூலம் வெளிப்பட்டுள்ளன. 

குறிப்பாக இருதரப்புத் தொடர்புகள் மூலம் (பிறநாடுகள் மற்றும் அமைப்புக்கள்) இலங்கை அரசாங்கம் ஓரளவிற்கு நிதியைத் திரட்டிக்கொண்டிருப்பினும்கூட, தற்போதுவரையில் அரசாங்கத்தின் நிதிமூலங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டவையாகவே காணப்படுகின்றன.

நம்பகத்தன்மையுடைய வெளியக நிதிமூலத்தின் ஊடாக நிலையானதும் பெருந்தொகையானதுமான நிதி உட்பாய்ச்சலை இலங்கை கொண்டிராமை இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே தாழ்ந்த மட்டத்தில் காணப்படுகின்ற இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு தொடர்ந்தும் குறைந்துசெல்லும் என்றும் மூடியின் முதலீட்டாளர் சேவையினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கையின் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

எதிர்வரும் ஜுலை மாதம் முடிவடையும் சர்வதேச பிணைமுறிகள் உள்ளடங்கலாக இலங்கையானது அதன் முதிர்ச்சியடைந்த (காலஅவகாசம் பூர்த்தியடைந்த) கடன்களை மீளச்செலுத்துவதற்கு அவசியமான நிதியைத் திரட்டிவரும் சூழ்நிலையில், மூடியின் முதலீட்டாளர் சேவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது.

இலங்கைக்கான நீண்டகால நாணய வழங்குனர்கள் மற்றும் முதிர்ந்த பாதுகாப்பற்ற கடன்கள் என்பன மூடியின் முதலீட்டாளர் சேவையினால் 'தரமிறங்குவதற்கான மதிப்பாய்வில்' வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் அவை தரமிறங்குவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. எதுஎவ்வாறெனினும். மூடியின் முதலீட்டாளர் சேவையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பானது, இலங்கையின் சர்வதேச பிணைமுறிகள் உள்ளடங்களாகப் பல்வேறு முதலீட்டுவாய்ப்புக்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கக்கூடும். கடந்த காலத்திலும் இத்தகைய தரப்படுத்தல் கட்டமைப்புக்களால் வெளியிடப்பட்ட தரவுகள், பிணைமுறிகள் உள்ளிட்ட முதலீட்டுக்கருவிகளின் சந்தை விலைகளில் மாற்றமேற்படுவதற்கு வழிவகுத்தன. 

எதிர்வரும் ஜுலைமாத இறுதியில் முடிவடையும் சர்வதேச பிணைமுறிகளுக்கு மீளச்செலுத்துவதற்கு அவசியமான 1,000 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் தயார்ப்படுத்தியிருக்கின்றது. அதேவேளை மீளச்செலுத்தவேண்டிய கொடுப்பனவுகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கும்போது மூடியின் முதலீட்டாளர்சேவையினால் இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்படுவது இது முதல்முறையும் அல்ல. 

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதிர்ச்சியடைந்த சர்வதேச பிணைமுறிகளுக்கான கொடுப்பனவை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக மீளச்செலுத்தியமைக்கு முன்னரான 2020 செப்டெம்பர் 28 ஆம் திகதியன்றும் மூடியின் முதலீட்டாளர் சேவையினால் இவ்வாறானதொரு அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வருடத்தின் முதற்காலாண்டில் மொத்தத்தேசிய உற்பத்தியானது 4.3 சதவீதமாகப் பதிவானதுடன் அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகவிரைவாக மீட்சியடைவதற்கான குறிகாட்டிகளும் வலுவாகத் தென்பட்டன. மேலும் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார செயற்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பக்கூடிய உறுதிப்பாட்டை வழங்குவதற்கும் அவசியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொருளாதாரத்தின் மீளெழுச்சிக்கு சமாந்தரமாக அரசாங்கத்தின் வருமானங்கள் மற்றும் செலவினங்களை சமநிலையில் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மூடியின் முதலீட்டாளர் சேவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது, தரப்படுத்தல் முகவர் நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் பேணிவரும் தொடர்பினை மீளாய்விற்கு உட்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. அதேவேளை இத்தகைய அடிப்படையற்ற அறிவிப்புக்களைக் கருத்திற்கொள்ளாமல், எந்தவொரு விடயம் தொடர்பாகவும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04