இளைய தளபதி விஜய் நடித்து வரும் 60 ஆவது படத்திற்கு ‘பைரவா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானதன் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

2007 இல் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் அழகிய தமிழ்மகன். இப்படத்தை இயக்கியவர் பரதன். சுமார் 9 வருடத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இருவரது கூட்டணியில் உருவான படத்தின் சூட்டிங் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விஜயின் 60 ஆவது படம் என்பதால் அவரது இரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்திற்கு பெயரிடப்படாமல் சூட்டிங் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ‘பைரவா’ என்ற பெயருடன் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ நேற்று வெளியாகியுள்ளது. ‘பைரவா’ படத்தின் போஸ்டர் இரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும், டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சதீஷ், ஜெகபதி பாபு, சுதான்ஷ_ பாண்டே, ஆடுகளம் நரேன், ஸ்ரீமான், அபர்ணா வினோத், ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் நாரயணன் இசையமைக்க விஜயா புரோடக்ஷன் தயாரிப்பு வேலையை செய்து வருகிறது.

படம் தொடங்கியபோது எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ படத்தின் பெயரை தலைப்பாக வைக்கப்படலாம் என்ற செய்தி உலாவந்தது குறிப்பிடத்தக்கது.