கடலட்டைப் பண்ணை உருவாக்கம் ; அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசெளகரியங்களை ஏற்படுத்தும் - கடற்றொழிலாளர்கள்

Published By: Digital Desk 3

20 Jul, 2021 | 01:07 PM
image

அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ளுகின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசெளகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடலட்டைப் பண்ணை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்ககும் போதே கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் பொது மண்டபத்தில் இரணைதீவு பிரதேச கடற்றொழில் சார் சங்கங்களின் பிரதிநிதிகளினால் இன்று (19.07.2021) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்,  கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு பணம் பெற்றுக் கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்துக்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது, அன்றாடம் காட்சிகளாகவும் பொருளாதார அடிமைகளாகவும் வாழ்ந்து வந்த எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதமாகவே கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் அனைத்தையும் இழந்து, நாதியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜயாவின் முயற்சியினாலும் தற்துணிவான தீர்மானங்களினாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கான கடலட்டைப் பண்ணைகளை அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி அண்மையில் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஏனெனில், ஏற்கனவே இணைதீவுப் பிரதேசத்தினைச் சேர்ந்த எமக்கு இதுவரை 83 கடலட்டைப் பண்ணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எமது பிரதேசத்தில் விண்ணப்பித்திருக்கின்றார். அவர்களுக்கும் பண்ணைகள் வழங்கப்படுகின்ற பட்சத்தில் எமக்கான எதிர்காலத்தை நாம் வளமானதாக உருவாக்கிக் கொள்ள முடியும்" என்று தெரிவித்தனர்.

இதன்போது, கடலட்டைப் பண்ணைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தலா பத்து இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரினால் தெரிவித்த கருத்து தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், 

"நாங்கள் யுத்தத்தினால் நாடோடிகளாக அலைந்து அனைத்தையும் இழந்து, நாளாந்த வாழ்கையில் எமது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே திண்டாடிக் கொண்டு இருக்கின்றவர்கள். அப்படிப்பட்ட நாங்கள் தலா பத்து இலட்சம் கொடுத்து கடலட்டைப் பண்ணைகளை பெற்றிருக்கின்றோம் என்று தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

இவ்வாறான பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களிடம் நாம் மன்றாட்டமாக கேட்கின்றோம். தயவு செய்து வைக்கோல் பட்டடை நாய்கள் போன்று செயற்படாதீர்கள்.

உங்களால் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனையவர்கள் செய்வதை இடையூறு செய்யாமல் விலத்தி இருங்கள். நீங்கள் அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக வெளியிடுகின்ற இவ்வாறான கருத்துக்களினால், கடலட்டைப் பண்ணை உருவாக்கம் தடைப்படுமானால், விண்ணப்பித்துவிட்டு   பண்ணைகளுக்காக காத்திருக்கின்ற நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கான மாற்றுத் திட்டம் உங்களிடம் என்ன இருக்கின்றது? என்று கேட்க விரும்புகின்றோம்" என்று தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

அதேவேளை,  கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைச் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த இரணைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்,

"கௌதாரிமுனை விவகாரம் பற்றிய புரிதல் இல்லாதவர்களினாலும், அரசியல் நோக்கங்களுக்காகவும், ஒரு சில தரப்பினரிடம் நல்ல பிள்ளை பெயரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் சில தரப்பினரால் குறித்த விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு்ள்ளது.

இரணைதீவுப் பகுதியில் கடலட்டைப் பண்ணை உருவாக்கப்பட்ட காலத்தில் பல்வேறு தரப்புக்கள் பண்ணைளைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளையும் அழுத்தங்களையும்கூட பிரயோகித்தனர். ஆனால், உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாகவே இரணைதீவுப் பண்ணைகள் எமக்கு கிடைத்திருந்தன. இதேபோன்ற பிரச்சினைகள் ஏனைய இடங்களிலும் எதிர்கொள்ளப்பட்டதை நாம் அறிந்திருக்கின்றோம்.

எனவே கௌதாரிமுனையில் வெளியார் பண்ணை அமைந்திருப்பது தொடர்பாக நாம் பதற்றமடையத் தேவையில்லை. அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைச்சர் ஐயா பார்த்துக் கொள்ளுவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

நாம் அறிந்தவரையில், கடலட்டை குஞ்சுகளை பராமரிக்கின்ற நேசரிகளே அங்கு அமைக்கப்பட்டுள்ளன. 

ஏராளமான கடலட்டை குச்சுகள் பராமரிப்புக் காலத்தில் உயிரிழக்கின்றன. எம்மால் முட்டைகளில்   உற்பத்தி செய்யப்படுகின்ற குஞ்சுகளில் 10 வீதமானைவை மாத்திரமே நேசரி பாராமரிப்பை தாண்டி  பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் சீனாவில் இது 30 வீதமாக காணப்படுகின்றது.

கடலட்டை குஞ்சு உற்பத்தி மற்றும்  பராமரிப்பு போன்ற விடயங்களில் எம்மைவிட சீனர்களுக்கு நிறைய அனுபவமும் அறிவும் இருக்கின்றமையே இதற்கு காரணமாகும். குறித்த விடயங்களை நாமும் பயன்படுததிக் கொள்வது எமது வருமானத்தினை மேலும் அதிகரித்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்

அதனைவிட, எமது பிரசேத்தில் கடலட்டைப் பண்ணைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் , கடலட்டை குஞ்சுகளின் தேவையையும் விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் எடுத்தோம் கவுத்தோம் என்று விடயங்களை அணுகாது எம்மை நாடிவருகின்ற விடயங்களை அணுகுவதில் பன்னாடைகளாக இருக்காமல், அன்னப் பட்சிகளாக இருந்து எமக்கு தேவையான விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாகப் பார்ப்போமானால், எமது பிரதேசங்களை சில துறைசார் நிபுணர்களின் பற்றாக்குறை காணப்படுவதனால் வெளியில் இருந்து அவ்வாறான நிபுணர்களை அழைத்து வந்து எமது  தேவைகளை நிறைவு செய்கின்றோம். அதைப் போன்றே இதனயும் அணுக வேண்டுமே தவிர, பதற்றமடைந்து எமது தலைகளில் நாமே மீண்டும் மீண்டும் மண்ணை போட்டுக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்துள்ளனர்

குறித்த ஊடகச் சந்திப்பில், கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர் சங்கம், வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கம், நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் சங்கம், இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் இரணைதீவு கடலட்டைப் பண்ணை   சங்கம் ஆகியவறறின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31