ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனம் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் மறுபுறம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான பாரிய முயற்சியில் மஹிந்த அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக இவ்வாறு புதிய கட்சியை ஆரம்பித்து அதனை முன்னெடுப்பதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

அதாவது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. அந்தவகையில் புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படுத்துவதற்கான குழுவானது பசில் ராஜபக்ஷ தலைமையில் இயங்குவதாகவும் அதில் டலஸ் அழகப்பெரும, பவித்திரா  வன்னியாராச்சி, ரோஹித்த அபேகுணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்படும் இந்தப் புதிய கட்சியானது அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.