ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் 40 பேரின் பணி  நீக்கத்தின் பின்னணி என்ன? 

Published By: Digital Desk 2

18 Jul, 2021 | 04:47 PM
image

சி.சி.என்

நுவரெலியா மாவட்டத்தின்  அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஓல்ட்டன் தோட்டம் ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்துள்ள பிரதேசமாகியுள்ளது. 

இவ்வருடம் பெப்ரவரி  மாதம் முதல் இங்கு ஏற்பட்டு வரும் சம்பவங்களே அதற்குக் காரணம். 

தேயிலை தூளை ஏற்றிச்சென்ற தோட்ட  வாகனத்தை இடையில் மறித்தமை, அதற்காக தோட்ட முகாமையாளருடன் ஏற்பட்ட முரணையடுத்து தொழிற்சங்க தலைவி தாக்கப்பட்டமையை முன்வைத்து தொழிலாளர்ளக் போராட்டத்தில் இறங்கியமை, பின்னர் தோட்ட முகாமையாளர்கள் தாக்கப்பட்டமை , தொழிலாளர்களை பொலிஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்தமை , அதன் பின்னர் தோட்ட முகாமையாளர்கள் சங்கம் தமக்கு பாதுகாப்பு வேண்டி அட்டனில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தமை, இந்த அனைத்து சம்பவங்களுக்கும் பிறகு ஓல்ட்டன் தோட்டத்துக்குள்ளேயே ஒரு பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை என இத்தோட்டம்  பேசுபொருளாகியுள்ளது.

எனினும் மேற்குறித்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டார்கள் என தோட்ட முகாமைத்துவ நிறுவனமான ஹொரண பிளாண்டேஷன் , 40 தொழிலாளர்களை வேலையிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதாக கடந்த மார்ச் மாதம்  அனைவருக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பியுள்ளது. 

அதில் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து  தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,  இறுதியாக, தொழிற்சாலை, தோட்ட காரியாலயம் மற்றும் வேலைத்தளங்கள் என்பன குறித்த தொழிலாளர்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்றும் கூறப்பட்டுள்ளது. 

தற்போது 40 குடும்பங்கள்  அத்தோட்டத்தில் வேலையிழந்து தவிக்கின்றன. வேறு தோட்டங்களுக்கு சென்று பணி புரிவதற்கான சூழ்நிலைகள் இல்லை.  தோட்டத்தில் வேலை இல்லாத காரணத்தினால் எதிர்காலத்தில் குடியிருப்புகளிலிருந்து முகாமைத்துவ கம்பனி அவர்களை வெளியேறக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில் வேலையிழந்த  தொழிலாளர்கள் சார்பாக எந்த தொழிற்சங்கங்களோ   அல்லது சிவில் சார் அமைப்புகளோ இது வரையில் குரல் கொடுக்கவில்லை என்பது முக்கிய விடயம். 

 இவர்களின் இந்த தொழில் இழப்புக்கான காரணத்தை ஆராய்ந்தால்  இதன் பின்னனியில்  பல காரணங்கள் வெளிப்பட்டுள்ளன.  காலா காலமாக தொழிற்சங்க சந்தா செலுத்தி தாம் அங்க வகித்த தொழிற்சங்கங்கள் தங்களை கை விட்டு விட்டதை இவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். 

பின்னணி என்ன? 

தொழிலாளர்களின்   1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து 05.02.2021 அன்று  இ.தொ.கா ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அது வரை தோட்டங்களிலிருந்து தேயிலை துளை கொண்டு செல்லும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில் ஓல்ட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து தேயிலை தூள் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று 02.02.2021 அன்று இரவு சாமிமலை மல்லிகைப்பூ சந்தியில் வழிமறிக்கப்பட்டு மீண்டும் குறித்த தொழிற்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளது. 

  இந்த வாகனத்தை திரும்ப கொண்டு வரும் செயற்பாட்டை முன்னெடுத்த மஸ்கெலிய பிரதேச சபை தலைவி உட்பட இன்னும் பல தோட்ட தொழிலார்களின் முன்னிலையில் ஒரு தொழிற்சங்கத்தின் தலைவி முகாமையாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து  முழு தோட்டமும் தோட்ட முகாமையாளருக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளது.   

இதையடுத்து  03.02.2021 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள்  இறங்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவியும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதே வேளை ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களினால்  முகாமையாருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம் ,  05.02.2021 அன்று முன்னெடுக்கப்பட்ட   1000 ரூபாய்  சம்பளத்திற்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் இணைக்கப்பட்டதால்   அது  சம்பள போராட்டமாகவே  வெளிக்காட்டப்பட்டது. பலருக்கு இப்போராட்டத்தின் உண்மைத் தன்மை தெரிந்திருக்கவில்லை. 

இந்நிலையில்    சம்பளத்திற்கான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் 05.02.2021  அன்று முடிவடைந்து மறுநாள்   ஏனைய  பெருந்தோட்டத்  தொழிலாளர்கள் வேலைக்கு  திரும்பிய நிலையில், ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

  தொழிலாளர்களை தாக்கிய முகாமையாளர் தமக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்   ஈடுபட்டு வந்தாலும்  அது சம்பளத்துக்கான  அடையாள வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியே என சில பெரும்பான்மை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. 

முகாமையாளரும் உதவி முகாமையாளரும் தாக்கப்பட்டனர்

இந்நிலையில் 17.02.2021 அன்று தோட்ட முகாமையாருடன் இந்த பிரச்சினை குறித்து  கலந்துரையாடி முடிவெடுக்கலாம் என  பிரதான கள உத்தியோகத்தர் கூறியதற்கிணங்க,  தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச்  சென்றுள்ளனர்.

எனினும் அங்கு  சில தொழிலாளர்களால் திடீரென முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கப்பட்ட நிலையில் அதனை தடுப்பதற்கும் சில தொழிலாளர்கள் முற்பட்டதனால்  அங்கு பதற்றம்  ஏற்பட்டது. இதனை  சிலர் கைத்தொலைப் பேசியிலும் பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து  தாக்குதலுக்குள்ளான தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்த  பின்னர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முகாமையாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய காணொலி  சிலரால் சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு மஸ்கெலிய பொலிசார் அதில் காணப்பட்ட    சில தொழிலாளர்களை கைது செய்து அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மேலும் தொழிற்சங்கமொன்றினால் சில தொழிலாளர்களின் பெயர்களும் சேகரிக்கப்பட்டு பொலிஸாருக்கு வழங்கப்பட்டதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு காசு  மற்றும் சரீர பிணையில் பின்பு  விடுதலை  செய்யப்பட்டதுடன் இவர்களுக்கான வழக்கு தொடர்ந்து அட்டன் நீதவான் நீதி மன்றில் இடம்பெற்று வருகின்றது.  இந்த வழக்கு விசாரணைகளின் போதும்  குறித்த தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கம் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் நியமிக்கப்படவில்லை. தன்னார்வலர்களாக  முன்வந்து இவர்களுக்காக தனிப்பட்ட முறையிலேயே இரண்டு சட்டத்தரணிகள் ஆஜராகி பிணை பெற்றுக் கொடுத்தனர் என்பது முக்கிய விடயம். 

இந்நிலையில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 25 பேருக்கும் வழக்கு தாக்கல் செய்யப்படாத 15 பேருக்கும் என 40 பேருக்கு எதிராக முகாமையாளர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தே  தோட்ட நிறுவனத்தினால்  பதிவு தபாலில்  கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதங்கள் 22.03.2021 திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்  27.03.2021 அன்று தொழிலாளர்களுக்கு இந்த கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

இவ்வாறு தொழில் இழந்தவர்களி;ல் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  தாம் முகாமையாளரை  தாக்கவில்லை  என்றும் தம்மை பேச்சவார்த்தைக்கு அழைத்ததால் தான்  அவ்விடத்திற்குச்  சென்றதாகவும் அந்த இடத்தில்  முகாமையாளர் தாக்கப்படுவார் என  தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்று கூறும் இவர்கள்,  அதனை தடுக்க முற்பட்ட நிலையிலேயே தம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத்   தெரிவிக்கின்றனர;.

இவ்வாறு தாம் தொழில் இழந்துள்ளதால்  பணி செய்த காலத்தில் தாம் பெற்ற  போனஸ் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும்   நிறுத்தப்பட்டுள்ளதாக  கூறுகின்றனர்.

இவ்வாறு தமக்கான தொழில் மறுக்கப்பட்டதை தாம் இதுவரை அங்கம் வகித்த தொழிற்சங்கங்களுக்கு அறிவித்த போதும்  இது வரை அது குறித்து எவரும்  நடவடிக்கை   எடுக்காத  நிலையில் கடந்த  மூன்று  மாதங்களாக தாம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு நடாத்துவதாக தெரிவிக்கின்றனர். சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் தொழிலை இழந்துள்ளார்கள் என்பது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில் ஓல்ட்டன் தோட்டத்தில் இருந்து தொழில் இழந்த 40 பேரில் 15 பேர் மாத்திரம் சுமார் 15 கிலோ மீற்றர்களுக்கு  அப்பால் அமைந்துள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்துக்கு  தினக் கூலிகளாக சென்று தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கும் தினமும் தொழில் கிடைப்பதில்லை என்பதோடு தினமும் தாம் சுமார் 3 மணித்தியாலங்கள்  பயணம் செய்தே  செல்வதாகவும் தெரிவிக்கின்றனர் .  

இதில் பல குடும்பங்களின் பிள்ளைகளின்   உணவு மற்றும் கல்விக்கான செலவினை ஈடுகட்ட  முடியாத நிலையில்   சில நாட்களில் உணவு இன்றி தண்ணீரை மட்டும் பருகி உயிர் வாழ்வதாகவும் இவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். 

மேலும் பல குடும்பங்களில் வயது முதிந்த பெற்றோர்கள் இவர்களில் தங்கி வாழும் நிலையில் அவர்களின் மருத்துவ மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமத்தை தாம் எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

சில குடும்பங்களின் முதியவர்கள் இந்த பொருளாதார நெருக்கடியினால் தமது வைத்திய தேவைகளை கைவிட்டுள்ளமை முக்கிய விடயம்.  நடந்த விடயம் குறித்து தெளிவுபடுத்துவதற்கும்  இது சம்பந்தமாக முகாமையாளரை கண்டு கதைப்பதற்கும் முடியாது உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் தமக்கான தொழிலை மீள பெற்றுக் கொடுத்து தமது குடும்பங்கள் பட்டினியால் வாடுவதை  தடுப்பதற்கு வழிகாட்ட  யார் முன்வருவார்கள் என்ற ஏக்கத்துடன் இவர்கள் பல தரப்பினரையும்  அணுகி வருகின்றனர். போராட்ட காலத்தில் இவர்களின் பின்னணியில் செயற்பட்ட சில அரச சார்பற்ற அமைப்புகளையும் தற்போது காணக் கூடியதாக இல்லை. அதே வேளை இத்தனை வருடங்களாக இவர்கள் சந்தா செலுத்தி வந்த தொழிற்சங்கங்களும் இவர்களை கைவிட்ட நிலையில் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இந்த 40 தொழிலாளர் குடும்பங்களும் கேள்விக்குறியோடும் அச்சத்துடனும்  நாட்களை கடத்தி வருகின்றனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2021-07-18#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21