பத்தோடு பதினொன்றாக சேர்க்கப்படுமா  ஹிஷாலினியின் மரணம்….! 

Published By: Digital Desk 2

18 Jul, 2021 | 04:01 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

“ஒரு மாதத்துக்கு முன்பு தங்கை  ஹிஷாலினியிடமிருந்து வீட்டுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் அவள் தான் பணியாற்றும் வீட்டில் ஒருவர் தன்னை அடிப்பதாகக் கூறினாள். ஆனால் பெயர் விபரங்கள் எமக்குத் தெரியவில்லை. எனக்கு எனது தங்கையைப் பற்றி தெரியும். உறவினர்கள் அருகில் வந்தாலே சற்று  தள்ளி நிற்க சொல்வாள். அப்படியான  எனது தங்கை இன்று தீக்கு இரையாகி விட்டாள் ‘ என்கிறார் ஹிஷாலினியின் சகோதரர் பிரசாந்த்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாளராக வேலைக்கு அமர்த்தப்பட்ட தலவாக்கலை டயகம மேற்கு பிரிவு 3 ஐ வசிப்பிடமாகக்கொண்ட ஜுட் குமார் ஹிஷாலினி கடந்த 15 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமானார். முன்னதாக அவர் இம்மாதம் 3 ஆம் திகதி கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

வைத்தியசாலையின்  73 ஆம் இலக்க வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவருக்கு வயது 16 ஆகும். மலையக பெருந்தோட்டங்களிலிருந்து தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் வீட்டு வேலைக்குச் செல்லும் சிறுமிகள் மற்றும் யுவதிகள்  கடந்த காலங்களில் மர்மமான முறையில் தொடர்ச்சியாக மரணத்தைத் தழுவி வந்தாலும் இது வரை அதன் பின்புலம் கண்டறியப்படவில்லை.  அல்லது காரணகர்த்தாக்களோ சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவில்லை.  அந்த பட்டியலில் தற்போது ஹிஷாலினி என்ற சிறுமியும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தில் வேதனைக்குரிய விடயம் என்னவெனில் கடந்த வருடம் பணிக்குச் சென்ற இஷாலினி இடையில் வீட்டுக்கு வரவேயில்லை. உயிருடன் சென்றவர் பிணமாகவே வீடு வந்துள்ளார்.

 

எம்.பி.வீட்டில் பணி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் ஹிஷாலினி. மேற்படி வீடு கொழும்பு  7  பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ளது.

இவர் பிறந்தது 12/11/2004 ஆம் ஆண்டாகும். அப்போது அவருக்கு 16 வயது பூர்த்தியாகவிருக்கவில்லையென்பது முக்கிய விடயம். இஷாலினி வசித்து வந்த டயகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு தரகர் மூலமாகவே இவர் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதை விட கூடுதலான சம்பளம் கிடைத்திருந்ததாக அவரது சகோதரர் தெரிவிக்கிறார். அங்கு பணிக்கு சென்றதிலிருந்து முறைப்பாடுகள் எதையும் அவர் தெரிவித்திருக்கவில்லையென்றே குடும்பத்தார் கூறுகின்றார்கள். 

இந்நிலையில் மே மாதமளவில் அவர் வீட்டாருடன் தொடர்பு கொண்ட போது தன்னை இங்கு வீட்டிலுள்ள ஒருவர் தாக்கியதாகக் கூறியுள்ளார். கொரோனா தொற்று காலத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நிலவிய காலமாகையால் பெற்றோர்களுக்கு உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இப்படியான நிலைமையின் போதே இம்மாதம் 3 ஆம் திகதி ஹிஷாலினி கடுமையான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவர் மீது தீ எவ்வாறு பற்றியது? அவரே தீ வைத்துக்கொண்டாரா அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து அப்போது ஆரம்ப கட்ட விசாரணைகளை மட்டுமே பொரளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். 

எனினும் இச்சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியதொன்றாகவே இருந்தது. ஹிஷாலினி கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதால் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான  சூழ்நிலைகளும் இருக்கவில்லை. இப்படியான நிலைமையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 15 ஆம் திகதி மரணித்துள்ளார். 

இத்தகவல் பொரளை பொலிஸாரினால் கொழும்பு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திரா ஜெயசூரியவுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தேசிய வைத்தியசாலைக்குச் சென்று ஹிஷாலினியின் சடலத்தை பார்வையிட்டதோடு பின்னர்  இஷாலினி பணி புரிந்த  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.  பின்னர்   உடற்கூற்று பரிசோதனை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு அவர் சட்ட வைத்திய அதிகாரிக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்பதாகவும் இவ்வாறு பல சம்பவங்கள் தலைநகரில் இடம்பெற்றுள்ளன. ஆனால் காலப்போக்கில் அவை அனைவரினதும் நினைவுகளிலிருந்து மறைந்து விட்டன. எனினும் தமது பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோர்களின் கண்ணீர் இன்னும் பெருக்கெடுத்து கொண்டே தான் இருக்கின்றது.

இந்த சம்பவங்களின் பின்னால் வருமானமின்றி தவிக்கும் மலையக பெருந்தோட்ட பெற்றோரின் இயலாமை பற்றி பேசுவதா ?அல்லது  இவ்வாறு பிள்ளைகளை தலைநகருக்கு அனுப்பி வைத்து விட்டு காசு பாக்கும் தரகர் தொழிலை செய்து வருவோரை சாடுவதா ? சட்ட மீறல் என்று தெரிந்தும் 18 வயதுக்குட்பட்டோரை வீட்டில் பணிக்கு அனுமதிக்கும் படித்தவர்களின்  அலட்சியப்போக்கை சுட்டிக்காட்டுவதா என்று தெரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு, ஏன் பெருந்தோட்ட பகுதி சிறுமிகள் இவ்வாறு தலைநகர் வீட்டு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதை அறிந்தும் அறியாமல் மௌனமாக இருக்கும் அரசியல் பிரதிநிதிகள் பற்றி பேச வேண்டியுள்ளது. 

இது வரை ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் எவருமே வாய் திறந்து பேசவில்லை. அல்லது தமது சமூகத்தின் சிறுமி ஒருவர் இவ்வாறு மர்மமான முறையில் இந்து விட்டிருப்பதை அறிந்தும் அது குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் ரீதியான எந்த அழுத்தங்களையும் முன்னெக்க முடியாது அல்லது தெரியாது வாய் மூடி மௌனம் காத்து வருகின்றனர் நுவரெலியா மாவட்ட பிரதிநிதிகள். சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நீதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகின்றது. 

16 வயது சிறுமியை பணிக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்குத் தெரியாதா?  அந்த அடிப்படையில் கூட அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ,மற்றும் நீதி அமைச்சு முன் வருமா? அது குறித்த அழுத்தங்களை யார் வழங்கப்போகின்றனர்? 

எது எப்படியானாலும் தலைநகரில் மரணத்தைத் தழுவும் சிறுமிகள், யுவதிகள் வரிசையில் ஹிஷாலினியின் மரணமும் பத்தோடு பதினொன்றாகவே சேர்க்கப்படப்போகின்றது என்பது மட்டும் நிச்சயம். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-07-18#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13