தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

14 Jul, 2021 | 09:59 PM
image

(நா.தனுஜா)

முல்லைத்தீவிலுள்ள விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரும் கண்டி - பல்லேகல இராணுவப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னிலை சோசலிஸக்கட்சி உறுப்பினர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட குழுவினரும் தம்மை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீண்டும் போராட்டம்!

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராகவும் இலங்கைப் பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய 9 ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராகவும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ  உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வலுகட்டாயமாகத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஒரு குழுவினர் முல்லைத்தீவிலுள்ள விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை, முன்னிலை சோசலிஸக்கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட மற்றொரு குழுவினர் கண்டி - பல்லேகலவில் உள்ள இராணுவப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்லேகல இராணுவப்படைத்தளத்தில் நடைபெற்ற போராட்டம்

இந்நிலையில் மேற்படி இரு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தொழிற்சங்கவாதிகள் அந்தந்த இடங்களிலிருந்து இன்று புதன்கிழமை எதிர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி பல்லேகல இராணுவப்படைத்தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்போது கருத்து வெளியிட்ட துமிந்த நாகமுவ கூறியதாவது:

எம்மை வலுகட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி ஒருவாரகாலம் ஆகின்றது. எமக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி நாம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறிருந்தும் எம்மை பலவந்தமாகத் தடுத்துவைத்திருப்பதன் நோக்கம் என்ன? தற்போது பல்வேறுவிதமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என்று அரசாங்கம் கூறுகின்றது.

அவ்வாறு கூறிவிட்டு அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கின்றது? இலங்கை பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நாம் எதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்? கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் அவரது விருப்பத்திற்கமைவாக ஊழியர்களைப் பணியிலிருந்து இடைநிறுத்தியமையினால், ஊழியர்களின் நியாயமான உரிமைகளை முன்னிறுத்தியே நாம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவாகவே விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் வீதிகளில் இறங்கிப்போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்குத் தேவையான உரத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டமை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமை, இலவசக்கல்விக்கட்டமைப்பைப் பாதிக்கும் வகையில் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தைக் கொண்டுவந்தமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்.

எனினும் பொறுப்புக்கூறுவதற்கும் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் தவறியமையினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். 

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்ற அனைவரையும் 'மோசமானவர்கள்' என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையிலேயே 'மோசமானவர்கள்' யார் என்று தற்போது மக்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள்.

நியாயமான போராட்டங்களை அடக்குவதற்கு கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்.

யாருடைய உத்தரவின்பேரில் எம்மைத் தனிமைப்படுத்தியிருக்கின்றார்கள்? இதனை இப்படியே விட்டுவிட்டால், எதிர்வருங்காலங்களில் தொழிற்சங்கவாதிகள் மீதும் மாணவர்கள் மீதும் தாக்குதல்களை நடத்துமளவிற்கு அரசாங்கம் செல்லக்கூடும்.

ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டு, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தொழிற்சங்கவாதிகளைப் பார்வையிடச்சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. 

அதிலிருந்து, இது தனிமைப்படுத்தல் அல்ல. சட்டவிரோத தடுத்துவைப்பு என்பது வெளிப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாட்டை முழுமையாக இராணுவமயப்படுத்துவதை நோக்கியே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

ஆகவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜனநாயகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணையுமாறு வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற போராட்டம்

அதேவேளை முல்லைத்தீவிலுள்ள விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:

எம்மை இங்கிருந்து விடுவிக்காவிட்டால், நாம் இதற்கும் அப்பால்சென்று போராட்டங்களில் ஈடுபடுவோம். அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலைக் காரணமாகக்கூறி மக்களின் ஜனநாயகப்போராட்டங்களை அடக்கும் வகையில் அமைந்துள்ளன.

எமக்காக நாட்டுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடுகின்றார்கள். எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசாங்கத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகளின் அடிப்படையில், எமது நகர்வுகள் அமையும் என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்களின் போராட்டம்

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41