பொலிஸ் துறை அரசாங்கத்தையோ அல்லது அரசியல்வாதிகளையோ பாதுகாக்கும் துறையாக அல்லாமல் பொதுமக்களைப் பாதுகாக்கும் ஓரு நிறுவனமாக இருக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

எமது நாட்டில் கடந்த சில தசாப்த காலம் தொடர்பாக கவனம் செலுத்துகின்ற போது சில அரசியல்வாதிகள் பொலிஸ் துறையை தமக்காகப் பயன்படுத்திக்கொண்டதைப் போல சில பொலிஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் நெருக்கமாகிக்கொள்வதற்கு முயற்சித்தமைக்கான பல்வேறு சாட்சிகளும் சான்றுகளும் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பம்பலபிட்டியவில் உள்ள பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற 150வது பொலிஸ் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கான ஒரு விரிந்த பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது பொறுப்பைப் பார்க்கிலும் ஒரு மனிதாபிமானக் கடமை என்றும் குறிப்பிட்டார்.

புதிய தொழிநுட்ப உலகுடன் எமது பொலிஸ் சேவையும் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்பதுடன், இன்றைப் பார்க்கிலும் நாளைய தினத்திற்காக பொலிஸ் சேவைக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய தொழிநுட்ப அறிவு, துறைசார்ந்த அறிவு, பயிற்சிகள் மற்றும் வழங்கப்படவேண்டிய எல்லா வளங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரச கொள்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

150 வருடகால சிறப்பான வரலாற்றைக்கொண்டுள்ள பொலிஸ் சேவைக்காக உயிர்நீத்த, அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இலங்கை பொலிஸ் துறையைச் சேர்ந்த உயர் மட்டங்கள் முதல் கீழ் மட்டங்கள் வரையிலான எல்லா அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி தமது நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச் சின்னம் இதன்போது வழங்கிவைக்கப்பட்டதுடன், 150வது ஆண்டுநிறைவை முன்னிட்டு ஒரு விசேட பதக்கத்தையும் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு அணிவித்தார்.