இலங்கையின் ஆடைத்தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Published By: Digital Desk 3

12 Jul, 2021 | 01:19 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வெறுமனே அவர்களது குடும்பங்களுக்கு அவசியமான வருமானத்தை மாத்திரம் ஈட்டவில்லை. மாறாக தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் பாரியதொரு பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். 

எனவே அவர்களுடைய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டிய அதேவேளை, அவர்களது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் தொழிற்சாலை ஊழியர்களை உரிய பாதுகாப்புடன் தனிமைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கமும் தொழிற்சாலை உரிமையாளர்களும் மேற்கொள்ளவேண்டும். அதேவேளை அக்காலப்பகுதியில் அவர்களுக்குரிய கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படுகின்றது என்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சுகாதாரப்பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் தொழிற்சாலை ஊழியர்களும் ஆடை உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

புதிய கொரோனா வைரஸ் பரவல் அலை உருவாவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி அதிதீவிர பயணக்கட்டுப்பாடு, ஒன்றுகூடுவதற்கான தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. 

இருப்பினும் அக்காலப்பகுதியிலும் ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தார்.

எனினும் இத்தகைய தொழிற்சாலைகளிலும் அவற்றின் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணிகள் ஏற்பட்ட சம்பவங்கள் தொழிற்சங்கங்களினாலும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினாலும் பல சந்தர்ப்பங்களில் அறிக்கைப்படுத்தப்பட்டிருந்தன.

தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பான சூழலில் பணிபுரிகின்றமை உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதேவேளை, அவர்கள் சுகவீனமடைந்தாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்குள்ளானாலோ அவர்களுக்குரிய ஊதியம் உரியவாறு வழங்கப்பட வேண்டும். 

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஒப்பந்தங்களும் வழிகாட்டல்களும் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் அதேவேளை, தொழிற்சாலைகளில் ஏற்படக்கூடிய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். மேலும் தமக்குரிய உரிமைகளைக்கோரும் ஊழியர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து, அவர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுக்குரிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஏழு பெண்களில் ஒருவர் என்ற வீதத்தில் ஆடைத்தொழிற்துறையில் பணிபுரிகின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆடைத்தொழிற்சாலைகளில் மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணிகள் பதிவாகி வருகின்றன.

அவ்வாறிருக்கையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளின்றி தொழிற்சாலை ஊழியர்கள் பணியை முன்னெடுப்பதற்கு அத்தொழிற்சாலைகளின் முகாமையாளர்களினால் நிர்பந்திக்கப்படுவதாக 4 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் ஐவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி பல்வேறு தொழிற்சாலைகளினதும் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டிய நிலைக்குள்ளானாலோ அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படுகின்றது என்றும் மேற்படி செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரென்டிக்ஸ் லங்கா லிமிடெட்டிற்குச் சொந்தமான ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியைத் தொடர்ந்து, அனைத்துத் தொழிற்சாலைகளிலும் அவற்றின் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய கொவிட் - 19 சுகாதாரக்குழு இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

எனினும் இம்மாத ஆரம்பத்தில் நாம் முன்னெடுத்த ஆராய்வுகளின்படி, அநேகமான தொழிற்சாலைகளில் மேற்படி குழுவானது நிறுவப்படவில்லை என்பதை அறியமுடிகின்றது.

போதியளவு காற்றோட்டம், தொடர்ச்சியான கண்காணிப்பு, பரிசோதனைகளை முன்னெடுத்தல், தொற்றுக்குள்ளான நோயாளர்களைத் தனிமைப்படுத்தல் உள்ளடங்கலாக ஆடைத்தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற போதிலும், தொழிற்சாலை நிர்வாகத்தினால் அவை கவனத்திற்கொள்ளப்படவில்லை என்று தொழிலாளர் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர்.

'தொழிலாளர் உரிமைகள் வெறுமனே ஒரு துண்டுக் காகிதத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. தொழிலை இழக்கவேண்டியேற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும்கூட ஊழியர்கள் தொடர்ந்தும் பணிபுரிகின்றார்கள்' என்று செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கொத்தணி ஏற்பட்டதன் பின்னரும் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு முகாமையாளர்கள் நிர்பந்தப்படுத்தியமைக்கு எதிராகக் கடந்த ஏப்ரல் மாதம் பிங்கிரிய தொழிற்சாலைக்கு முன்னால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரால் கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டு இருநாட்களின் பின்னர் தொழிலாள்ரகளின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் தொழிற்சங்கவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரால் அடக்கப்பட்டு, அதில் ஈடுபட்டவர்கள் வற்புறுத்தலின்பேரில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கமானது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை இராணுவத்திடம் கையளித்திருக்கும் நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களும் இராணுவத்தின் கீழேயே இயங்குகின்றன. தொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் 14 நாட்களுக்குரிய வருடாந்த மேலதிக கொடுப்பனவை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் தொழிற்சாலை ஊழியர்களை உரிய பாதுகாப்புடன் தனிமைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கமும் தொழிற்சாலை உரிமையாளர்களும் மேற்கொள்ளவேண்டும். அதேவேளை அக்காலப்பகுதியில் அவர்களுக்குரிய கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படுகின்றது என்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும். 

இலங்கையின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் வெறுமனே அவர்களது குடும்பங்களுக்கு அவசியமான வருமானத்தை மாத்திரம் ஈட்டவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27