வெல்ல முடியாத போர்

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 12:56 PM
image

குமார்சுகுணா

இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாம் இட்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேற தொடங்கிவிட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் தலிபான் வசம் முழுமையாக  ஆப்கானிஸ்தான் செல்லகூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2001ஆம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படையினரால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தலிபான்கள் அகற்றப்பட்டனர். இதற்கு காரணம் என்னவென்றால், கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதி நியூயோர்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்த போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்க படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்த போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான்  இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது.

இது வெல்ல முடியாத போர் என்று ஆப்கானிஸ்தான் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்ற நிலையில் ஆப்கான் போர் நிலவரம் குறித்து தனது கருத்தை அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் மேலும் கூறும்போது, ''இது ஒரு வெல்ல முடியாத போர். ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைகளுக்கு இராணுவ நடவடிக்கை தீர்வு அல்ல. இன்னும் எத்தனை அமெரிக்க மகள்கள் மற்றும் மகன்கள் அவர்கள் வாழ்வை ஆபத்தில் வைக்க முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்காக நான் மற்றொரு தலைமுறையை அங்கு அனுப்பமாட்டேன். ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தின் பணி ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது.

நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு அந்த நாட்டைக் கட்டமைப்பதற்காகச் செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றுகூடி எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும்” என்றார்.

 அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பு தற்போது ஆப்கானிஸ்தான் இராணுவத்திடம் வந்துள்ளது. ஆயினும் அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில் அங்கு தலிபான்களின் கை ஓங்கியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதல்களை தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்து வருகின்றனர். அரசு படையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் 10 மாவட்டங்கள் தலிபான் வசம் சென்றுள்ளன. இதில் 8 மாவட்டங்களை எவ்வித சண்டையும் போடாமலேயே தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்கா எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்க துருப்புகளை முழுமையாக பின்வாங்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு தாலிபன் குழுக்கள் அமெரிக்கா உடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. கடந்த பெப்ரவரி 2020-இல் இரு தரப்புக்கும் இடையே  ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.

அதில் அமெரிக்கா தன் துருப்புகளை ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்குவதாகவும், தலிபான்கள் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அல்-கொய்தா போன்ற மற்ற தீவிரவாத அமைப்புகளை, தலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைக்குள் இருந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது எனவும், ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றலாம் எனவும் அச்சம் நிலவிக் கொண்டு இருக்கிறது. தலிபான்களின் ஆதிக்கம் அதிவேகமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1990களில்தான் இந்த தலிபான் அமைப்பு உருவானது.

ஆப்கானிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தலிபான் அமைப்பு, மிக குறுகிய காலத்திலேயே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. 1995 செப்டெம்பரில் ஹெராத் என்கிற ஈரான் எல்லையை ஓட்டியிருக்கும் மாகாணத்தை கைப்பற்றியது.

சரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் ஆப்கான் தலைநகரான காபூலைக் கைப்பற்றியது தலிபான். அப்போது ஆட்சியில் இருந்த  புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள். இந்த புர்ஹானுத்தின் தான் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன் அமைப்பை நிறுவி அவர்களை எதிர்த்து போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேகத்தில் 1998ஆம் ஆண்டில் ஏறத்தாழ 90 சதவீத ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பு கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தொடக்க காலத்தில் தலிபான்களின் வருகையை மக்கள் வரவேற்றனர். தலிபான்கள் வந்த இடங்களில் எல்லாம் ஊழலை ஒழித்தனர். சட்டமில்லாமல் இருந்ததற்கு ஒரு முடிவு கொண்டு வந்தனர். சாலை வசதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பாதுகாப்பாகவும் வணிக ரீதியாக செழித்து வளர முடிந்தது. எனவே மக்களும் அவர்களைத் தொடக்கத்தில் ஆதரித்தனர். அதே நேரத்தில் தலிபான்கள் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை அறிமுகப்படுத்தினர் அல்லது ஆதரித்தனர். 

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களை பொது வெளியில் கொல்வது, திருடுபவர்களின் கை கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகள் பின்பற்றப்பட்டன. ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் புர்காக்களை அணிய வேண்டும். டிவி, இசை, சினிமா போன்றவற்றை தலிபான்கள் தடை செய்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அந்த அமைப்பு தடை செய்தது. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தலிபான்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டன.

2001ஆம் ஆண்டு, மத்திய ஆப்கானிஸ்தானில் இருந்த உலகப் புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலையை சிதைத்தது தலிபான். இதற்கு சர்வதேச அளவில் மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இவ்வாறான தலிபான் அமைப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிவிடும் என தெரிவிக்கப்படுகின்றது. எது எப்படியோ உலகம் அமைதி வழிக்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம். அதற்கிணங்க அமெரிக்க ஜனாதிபதி எடுத்துள்ள முடிவும் நல்லதுதான். இனியாவது அந்த நாடு தன்னை செழுமைப்படுத்தி கொண்டு உயர்வடைய வேண்டும். துப்பாக்கி சத்தம் இல்லா தேசமாக மாறவேண்டும் எஎன்பதே அனைவரது விருப்பமும் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04