(ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்)

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமல் இருக்குமாக இருந்தால் மீண்டும் நாம் ஆயுதம் எடுக்கமாட்டோம் ஆனால் எம்மை அவர்கள் ஆள முடியாமல் செய்வோம் என ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூனிடத்தில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது. 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கிமூனுக்கும் பிரதான எதிர்க்கட்சியான தழிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் மாவை.சோ.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

45 நிமிடங்கள் வரை நீடித்த இச் சந்திப்புக் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில்,

2009 ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னரான சூழ்நிலையில் அம் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. பொதுச் செயலாளரான தாங்கள் அப்போதைய  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெ ளியிட்டிருந்தீர்கள். அதன் பின்னர் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு தங்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இவற்றின்  பிரகாரமே தற்போதைய நல்லிணக்கச் செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு பொறுப்புக் கூறலுக்கான சிலசெயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கூறியதோடு அதற்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார். 

எடுத்துரைப்பு 

இதனையடுத்து வடமாகாணத்தில் தொடர்ந்தும் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றமை, அரசியல் கைதிகளாக தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாதுள்ளமை, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுகின்றமை , காணிகள் மீளக் கையளிப்பதில் தொடர்கின்ற தாமதம், ஆகியவை தொடர்பாகவும் கூட்டமைப்பினாரால் பான்கிமூனிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

அரசியல் தீர்வு குறித்த பேச்சு 

நீண்டகாலமாக நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. ஆனால் அப் பேச்சுவார்த்தை முற்றுமுழுதாக தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை சந்திக்கின்ற விடையமாக இருக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் செயலாளர் நாயகத்திடம் எடுத்துக்கூறினார். 

மூனின் பதில் 

இதற்குப் பதிலளித்த செயலாளர் நாயகம் இந்த விடையங்கள் அனைத்திலும் தானும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கூற்றுக்களுடன் இணங்குவதாகவும் அரசாங்கத்திடம் தான் இது தொடர்பில் எடுத்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். விசேடமாக ஜனாதிபதியிடத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்த வேண்டும். நூறு வீதம் நடைமுறைப்படுத்துவதற்கு முயன்றால்தான் 70 முதல் 80சதவீதமாவது நடைமுறைப்படுத்த முடியும். 50 சதவீதம் நடைமுறைப்படுத்த முயன்றால் 20 சத வீதம் நடைமுறைப்படுத்துவதே கடினமாக இருக்கும். ஆகவே இந்த விடயத்தில் சில துணிகரமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தான் வலியுறுத்தியதாகவும் எம்மிடத்தில் குறிப்பிட்டார். 

சர்வதேச பங்களிப்பு

மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலில் ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை தொடர்ச்சியாக தமிழ் மக்கள்  கோரி நிற்பதை தான் உணர்ந்திருப்பதாக தெரிவித்த ஐ.நா.செயலாளர் அதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுகின்றபோது தமது பங்களிப்பை செவ்வனே வழங்குவோமென உறுதிமொழி அளித்ததோடு ஐ.நா. தொடர்ந்தும் தமிழ் மக்களுடன் இணைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். 

அழுத்தம் திருத்தமான கருத்து 

அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எமது எதிர்பார்ப்பாகும் என வலியுறுத்திக்  குறிப்பிட்ட கூட்டமைப்பு அரசியில் அமைப்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமல் இருக்குமாக இருந்தால் மீண்டும் நாம் ஆயுதம் எடுக்கமாட்டோம் ஆனால் எம்மை அவர்கள் ஆள முடியாமல் செய்வோம் என அழுத்தம் திருத்தமாக ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூனுக்கு கூறப்பட்டுள்ளது என்றார். 

போராட்டம் குறித்த கருத்து

இதேவேளை கவனயீர்ப்புப் போராட்டம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடான சந்திப்பின் போது கருத்து வெ ளியிட்ட பான்கிமூன் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்திக் கொண்டு நிற்பதையும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருப்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது அந்த விடையங்கள் தொடர்பில் நான் கவனத்தில் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.