( யாழ்ப்பாணத்திலிருந்து ஆர். ராம் )

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவரது வருகையை முன்னிட்டு பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முதலில் வடமாகண ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் யாழ்.பொது நூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் நிபந்­த­னை­யின்றி உடன் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தியும், போர்க்­குற்­றங்கள், இன­வ­ழிப்புக் குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச பக்கச் சார்­பற்ற விசா­ரணை நடத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தியும் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்­பெ­யர்ந்த மக்கள் அமைப்­புக்கள், காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளது அமைப்­புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டத்திலீடுபடுவோர் இறுதியில் யாழ் .  பொது நூலகத்திற்கு முன்னால் ஒன்று திரண்டு தமது கவனயீர்ப்பை  ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வெளிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.