வட கடலில் அமிழ்த்தப்பட்ட பஸ்கள்: “வாழிடங்களும், வழித்தடைகளும்”...

Published By: J.G.Stephan

04 Jul, 2021 | 05:52 PM
image

-ஆர்.ராம்-

கொழும்பு துறைமுகத்திலிருந்து வெறும் 17 கிலோமீற்றர் தூரத்தில் தீக்கிரையான எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் மொத்தமாக 1486 கொள்கலன்கள் காணப்பட்டன. அதில் 81 கொள்கலன்கள் நச்சு பொருட்களை உள்ளடக்கமாக கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் 26,000 கிலோகிராம் உள்ளடக்கத்தை கொண்ட மூன்று கொள்கலன்களில் பிளாஸ்டிக் துகள்களும் 5 தொன் நைத்திரிக் அமிலமும் காணப்பட்டுள்ளன. 

அதனைவிட, கப்பலை இயக்குவதற்காக பயன்படும் டீசல்  மற்றும்  பலவகை  ஓயில் பொருட்கள் என்று 333 தொன் அளவில் கப்பலின் இயந்திர பகுதிக்கு அருகாமையில் இருந்த கலன்களில் நிரப்பபட்டும் இருந்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் தான் தற்போது விசாரணைக்குழுவினரும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். எதிர்காலத்தில் ஆயிரம் விஞ்ஞான விளக்கங்கள் கூறப்படலாம். விபத்துக்காக காரணங்கள், பாதிப்புக்கள் என்று பல வகை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம். 

ஆனால், ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அதனை ஈடுசெய்வதற்கான ‘டொலர்கள்’ மீதான ஆசையும் தான் இந்த கப்பல் விபத்துக்கான அடிப்படைக் காரணம் என்பது எங்கும் சுட்டிக்காட்டப்படப் போவதில்லை. இந்தக் கப்பல் தீக்கிரையானதால் நீர்கொழும்பு முதல் கொழும்பு வரையிலான கடற்பகுதியும், தங்காலை  முதல் கொழும்பு வரையிலான  கடற்பகுதியும் முற்றாக சீரழிந்திருக்கின்றது. வட கடலின் மன்னாரிலும், கிழக்கு கடலின் மட்டக்களப்பிலும் அதன் எதிரொலிகள் இல்லாமில்லை. 

தற்போது வரையில், இந்த சம்பவத்தால் 200 கடல்வாழ் உயிர்கள் இறந்து நாட்டின் அனைத்துப் பாகங்களிலும்  கரையொதுங்கியுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, 176 கடலாமைகள், 20 டொல்பின்கள், 4 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியும் உள்ளது. 

இவ்வாறிருக்க, 1910இல் கலிபோர்னியா கடலில் நடந்த, லேக்வியூ குஷர் நம்பர் வன் கப்பல் விபத்து முதல் 2010 இல் மெக்சிகோ வளைகுடாவில் நடந்த டீப்வோட்டர் ஹொரைசன் கப்பல் விபத்து  வரையிலானவற்றின் ஆய்வுகள் கடல் வளங்களில் ஏற்படும் பாதிப்புக்களையும் மீண்டும் வழமைக்கு திரும்புவதற்கும் எடுக்கும் காலப்பகுதியையும் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளன.

அதன்பிரகாரம், மேற்படி கப்பல் தீக்கிரையானதால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு ஆகக்குறைந்தது அரைநூற்றாண்டுக்கு மேலான காலம் தேவையாகவுள்ளது. இதனை துறைசார் வாண்மைத்துவம் மிக்கவரான கலாநிதி அஜந்தா பெரேராவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவ்வாறிருக்க, கடலுணவுகள்  ஏற்றுமதியாளர்கள்  சங்கத்தின் தலைவர், டிலான் பெர்ணான்டோ, ஆண்டொன்றுக்கு கடலுணவுகள்  ஏற்றுமதியால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 350மில்லியன் டொலர்களை பங்களிப்புச் செய்வதாக குறிப்பிடுகின்றார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் நெருக்கடிகள் இருந்தபோதும் 300மில்லியன் டொலர்கள் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளி விபரங்களின் பிரகாரம், 2019ஆம் ஆண்டு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2.7சதவீதமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுவதோடு நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் வரையிலானவர்கள் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில் எதிர்காலத்தில் கடலுணவுகளால் பெறப்படும் பொருளாதாரத்துக்கான பங்களிப்பும் வீழ்ச்சி அடையும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தென்கடலில் தீக்கிரையான கப்பல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அதற்கொரு காரணமாக இருக்கின்றது. ஏற்கனவே, வட கடலில் தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுத் தொழில், வெடிபோட்டு (டைனமைட்) மீன் பிடித்தல், இரசாயன மாற்றத்தை உருவாக்கும் தாவரங்களை உபயோகித்தல், கடலடித்தள வலைகள், தங்கூசி வலைகள் உபயோகித்தல் போன்ற கடற்றொழில் முறைகளால், பவளப்பாறைகள் மற்றும் முருகைக்கற் பறைகள் அழிவடைந்துள்ளன. 

“இந்த நிலைமைக்கு உள்ளுர் கடற்றொழிலாளர்களை விடவும், எல்லை தாண்டிய பிரவேசிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களே  அதிகளவில்  காரணமாக  உள்ளனர். குறிப்பாக போர் நிறைவின் பின்னர் இந்த நிலைமைகள் அதியுச்சத்திற்கு சென்றுள்ளன. இதனால் வடகடலின் வளங்கள் அழிவடைய ஆரம்பித்துள்ளன. அதன் விளைவு, கடற்றொழில், கடலுணவு உற்பத்திகள் நேர்மறையான நிலைநோக்கி செல்ல ஆரம்பித்துள்ளன” என்று வடக்கின் கடற்றொழிலாளர் சங்கங்கள் கூறுகின்றன. 

இவ்விதமான நிலைமைகளுக்கு மத்தியில் தான் திடீரென வடகடலில் பாக்கு நீரிணைக்கு அண்மித்த இலங்கை கடற்பரப்பில் நாற்பது பழைய பஸ்கள் கடலுக்குள் அமிழ்த்தப்பட்டன. தென்னிலங்கையில் முன்னெடுக்கப்படவிருந்த இந்த செயற்றிட்டத்தினை ‘தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி’ விடயதானத்திற்கு பொறுப்பான கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடகடல் நோக்கி திருப்பியிருக்கின்றார்.

அவரது வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்பாடு இலங்கைக்கு புதியதென்றாலும் உலகளவில் புதிய விடயம் அல்ல, ஏற்கனவே, உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடைமுறையொன்று தான். 

உதாரணமாக கூறுவதாயின் 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை, நியூயோர்க்கில் 2500 இக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள், அத்திலாந்திக்  சமுத்திரப்பகுதிகளில் அமெரிக்காவால் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. மேலும், பல நாடுகள், மூழ்கிய கப்பல்கள், விமானங்கள், உள்ளிட்ட பலவற்றை கடலுக்குள் அமிழ்தியிருக்கின்றன. 

இச்செயற்பாட்டிற்கு மீன்களின் உற்பத்தி அதிகரிக்கும், கடலில் அடித்தள தாவர  வளர்ச்சி அதிகரிக்கும், பவளப்பாறைகள் அல்லது  முருகைக் கற்கள் வளர்ச்சியடையும், இதனடிப்படையில் மீனவர்கள் பயனடைவார்கள் ஆகிய நான்கு காரணங்களும் கூறப்பட்டு வருகின்றது. 

அவ்வாறிக்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த ‘பஸ்களை கடலுக்குள் அமிழ்த்தும் திட்டம்’ தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மேலெழுந்துள்ளன. எனினும், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன், “அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் இருந்தாலும் பஸ்களை அமிழ்த்தும் செயற்பாட்டை ‘அரசியல் கலப்பின்றியே’ பார்க்க வேண்டும்” என்று பகிரங்கமாக கூறியிக்கின்றார். 



அத்துடன், “அமைச்சர் டக்ளஸ், சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் ஒரு செயற்பாட்டையே முன்னெடுத்துள்ளதாகவும், இதனால் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் அதிகரிக்கும்” என்றும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

“2013 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி உலகளாவிய ரீதியில் 1,20,000   மீன்களுக்கான உறைவிடங்கள் காணப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பஸ்கள் அமிழ்த்தப்படுதல் போன்ற செயற்கை கருவிகள் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் கடல்வாழ் உயிரிகளுக்கு உறைவிடங்களை ஏற்படுத்தல், பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தல், இனப்பெருக்கவிருத்திக்கு உதவுதல், உணவுபெறுவதற்கு வசதியளித்தல் போன்றவற்றிற்கு உறுதுணையாக அமைவதால் வரவேற்க கூடியதாக இருக்கின்றது” என்று கலாநிதி. சூசை ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், “2050 ஆண்டளவில் உலகளாவிய கடற்பரப்பில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருக்கும் என்று ஆய்வுத்தகவல்கள் எச்சரித்திருக்கின்ற நிலையில் இவ்விதமான உலோகப்பொருட்களை கடலுக்குள் போடுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கான  வாய்ப்புக்கள்  உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றார்  கலாநிதி.சூசை ஆனந்தன். 

குறிப்பாக, “பஸ்வண்டிகள் அமிழ்த்தப்பட்ட கடற்பகுதியானது  செயற்கைப் பண்ணைகளுக்கு அல்லது உறைவிடங்களுக்குப் பொருத்தமற்ற பகுதியாகவே உள்ளது. காரணம் குறித்த கடற்பகுதியானது சிறிய நீர்ப் பரப்பைக்கொண்டதுடன் குறைவான (20மீற்றர்) ஆழம் கொண்ட பகுதியாகவும் உள்ளது. பெரும்பாலானோர் கில்வலைகளைப் பயன்படுத்துகின்ற ஓர் பகுதியாகவும் உள்ளது. இத்தகைய வலைகளுக்கு வழிச்சல், முறைகளுக்கும் அடியிடு கில்வலைகளுக்கும் தூண்டில் வரிசைகளுக்கும்  பாதிப்பினை ஏற்படுத்தலாம்” என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

அத்துடன், “பல நாடுகளிலும் ஆழ்கடலில் பயன்படுத்தப்படுகின்ற பல்வகை வலைத் தொகுதிகள் எதிர்பாராதவிதமாக கடலில் தொலைந்து போகின்ற சந்தர்ப்பங்களில் அவைகள் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இவ்வாறான செயற்கை கருவிகளில் சிக்குண்டு அழிவடைகின்றன. அத்தோடு கைவிடப்பட்ட நிலையில் அவ்வலைகளில் மீன்களும் சிக்குண்டு வீணாகின்றன இது சாத்தான் மீன்பிடி அல்லது பேய் மீன்பிடியென அழைக்கப்படுகிறது” என்றும் கலாநிதி.சூசை ஆனந்தன் கூறுகின்றார். 

இதனைவிடவும், “கடற்சூழலானது வங்காள விரிகுடாவிவில் நவம்பர், டிசம்பரில் ஏற்படும் தாழமுக்கம், மற்றும் வடகீழ் பருவக்காற்று நீரோட்ட வேகம் காரணமாக அமிழ்தப்பட்ட பஸ்வண்டிகள் போடப்பட்ட இடத்தில் இருந்து  நகர்த்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் குறிப்பிடும் கலாநிதி.சூசை ஆனந்தன்,  வண்டிகள் அமிழ்த்தப்பட்ட பகுதிகளில் மீன்கள் ஒருங்குசேருவதால் அங்கு ஜி.பி.எஸ் உதவிகொண்டு டைனமைட் வைத்து மீன்பிடியில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்களை நிராகரிக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றார். 

ஏற்கனவே, “வடக்கில் கண்டல் மரக்குற்றிகள் மற்றும் கற்றூண்கள், பழைய படகுகள் கடலில் அமிழ்தப்பட்டு அங்கு ஒருங்கு சேரும் மீன்கள் வெடிவைத்து பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பெருமளவு கண்டல் காடுகள் மன்னாரில் அழிவடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலை குறித்த பகுதிகளில் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளதாகவும்” கலாநிதி.சூசை ஆனந்தன் சுட்டிக் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், “2018ஆம் ஆண்டு இலங்கையின் கடற்பரப்பில் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு அமைவாக கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு  வழிசமைக்கும் வகையில் திருகோணமலையில் முதலில் மூன்று பஸ்கள் அமிழ்தப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தெரிவு செய்யப்பட்ட கடற்பரப்பில் ‘பஸ்கள் போடும்’ செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது” என்று தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனமான நாராவின் தலைவர் பேராசிரியர்.ஏ.நவரட்ணராஜா குறிப்பிடுகின்றார். 

அதுமட்டுமன்றி, “மூன்று மாதகால இடைவெளியில்  பஸ்கள் போடப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறும் அவர், சர்வதேச கடலாய்வுக் குழுவொன்றை விரைவில் அழைத்து கடல்வாழ் உயிரின இனப்பெருக்கம் பற்றிய ஆய்வொன்றை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதோடு, எதிர்காலத்தில் ரயில் பெட்டிகளை அமிழ்த்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்” கூறுகின்றார் பேராசிரியர்.ஏ.நவரட்ணராஜா.

ஆனால், மீன்கள் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் கடலுக்கு பிரவேசிக்க தயாரான தமிழக, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் பஸ்கள் அமிழ்த்தப்பட்ட செயற்பாட்டை கண்டித்தனர். 

குறிப்பாக, இராமேஸ்வரத்தினைச் சேர்ந்த, 17கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் போராட்டங்களை நடத்தியிருந்தன. இலங்கை  கடற்பரப்பில் அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதி மீன்வளத்தை கவர்ந்துவிடும். இதனால் இந்தியாவில் மீன்வளம் குறையும் என்று கூறி அச்சங்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. 

ஆனால், “அச்சங்கள் கூறும் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை” என்று குறிப்பிடும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட் அமிழ்த்தப்பட்டுள்ள பஸ்கள் இந்திய, தமிழக கடற்றொழிலாளர்களின் கடல் அடித்தள இழுவை வலைகளை சேதமாக்குவதுடன், இலங்கையின் மீன்வளங்களை கவர்ந்துகொள்வதற்கும் பாரிய தடைகளாயிருக்கும் என்பதாலேயே ‘அவர்கள்’ போராடுகின்றனர்” என்று சுட்டிக்காட்டுகின்றார். 

அத்துடன், “இவ்வாறான நடைமுறை மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள்,அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன.  நடத்தைச் சூழலியலின் உணவு சூழலியலில் இந்த அமிழ்க்கப்பட்ட வாகனங்கள், முக்கியமான பங்கை வகிக்கின்றன என்றும் ஏ.எம்.றியாஸ் அகமட் கூறுகின்றார்.

அதேவேளை, “ஆழங்களைப் பொறுத்து சிறிய புற்கள், அல்காக்கள் பிளாந்தன்கள் சேரும்போது, தாவரவுண்ணி, ஊனுண்ணி, அனைத்து முண்ணி போன்ற விலங்குகளின் உயிரியல் பன்மைத்துவம் அதிகரிக்கும் போது உணவுகளின் அளவும் அதிகரிக்கின்றன. ஒழிந்துகொண்டு மற்ற உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. வேகமாக நீந்தி உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத, நீரோட்டத்தினால் இலகுவில் அடித்துச் செல்லப்படக்கூடிய  உயிரினங்களுக்கும் இந்தச் சூழற்றொகுதி ஒரு வரப்பிரசாதமாகும்” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

“அத்தோடு இந்த சூழற்றொகுதியானது மீன்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து அதன் குடித்தொகையும், மற்ற விலங்குகளின் குடித்தொகையும் அதிகரிக்கும். அதேபோன்று நடத்தைச் சூழலியலின், இனப்பெருப்பெருக்கச் சூழலியலிலும், இடவாதிக்க சூழலியலிலும் முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விலங்குகள் தங்களுக்கான ஆதிக்க இடங்களையும், வீட்டு வீச்சு இடங்களையும், அதிபாவனை இடங்களையும் உருவாக்கிக் கொள்ளுகின்றன. வளங்களுக்கான பங்கீடுகளில் ஆரோக்கியத்தன்மை ஏற்பட்டு போட்டியும் குறைக்கப்படுகின்றன” என்றும் ஏ.எம்.றியாஸ் அகமட் தெரிவித்தார்.

“மேலும் பாதுகாப்பளிக்கக்கூடிய, உற்பத்திகூடிய மறைவிடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியானது, புணரும், இனப்பெருக்க, உணவு, பல்நோக்கு ஆதிக்க பரப்புக்களை உருவாக்குகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் “நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படாது, மீன்களின் முட்டைகளை ஒட்டிவைத்து, முட்டைகள் குஞ்சுகளாய் விருத்தியாவதற்கும் உதவுகின்றன. மேலும் அந்த குஞ்சுகளுக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றன. பெற்றார் கவனிப்புக்கு சக்திச் செலவு குறைவாக செய்யப்படுகின்றன. மேலும் தங்களுடைய இணைகைளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் விலங்குகளின் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளும், இனப்பெருக்க வெற்றியும் , வளர்ச்சி வேகமும் அதிகரிக்கின்றன” என்றும் ஏ.எம்.றியாஸ் அகமட் தெரிவித்துள்ளார். 

அதேநேரம், “பஸ்கள் அமிழ்த்தப்படுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை உள்நீர் மீனவர்களுடன் கலந்துரையாடி முன்னெடுக்கலாம்” எனக் கூறும் கலாநிதி.சூசை ஆனந்தன் “வடக்கில் வடமராட்சி வட கிழக்கு சார்ந்துள்ள பேதுரு மீன்தளத்திற்கு அப்பாலுள்ள ஆழமான பகுதிகள் பஸ்கள் அமிழ்தப்படுவதற்கு பொருத்தமாக அமைவதோடு அதனை உரியவாறு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், அமிழ்த்தப்பட்டுள்ள பஸ்கள் உள்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கு வழிகோலும் அதேநேரம் இந்திய, இலங்கை அரசுகள், அமைச்சு மட்ட அதிகாரிகள், ஈற்றில் மீனவர்கள் ஆகியோருக்கு இடையில் பேச்சுக்களை முன்னெடுத்தபோதும் தீர்வின்றித் தொடரும் இந்திய இழுவைப்படகுகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அத்துமீறல்களுக்குமொரு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்திருக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54