சசி

கடந்த கால கடத்தல்களுக்குக் காரணமானவர்கள் தொடர்பாக நடைபெறும் விசாரணைகளின் பயனாக அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். அதற்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக கடந்த காலங்களில் பலவிதமான போராட்டங்களும் ஆரப்பாட்டங்களும் செய்யப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்டவர்களது தாய், சகோதரங்கள், மனைவிமார் உள்ளிட்ட உறவினர்களது துன்பங்கள் அதிகம், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முறைப்பாடுகள் காரணமாக பலர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டது மாத்திரமல்ல. அவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தொடரப் போகின்றது. விசாரணைகள் தொடரப் போகின்ற காரணத்தினால் மீண்டும் தைரியத்தினை வைத்துக் கொண்டு அண்மையிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்களுக்கெதிராகவோ, அவர்கள் சார்ந்த குழுக்களுக்கெதிராகவோ உடனடியாகமுறைப்பாடுகள் பதிவு செய்தல் வேண்டும். கடந்த காலங்களில் பொலிஸாரால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கங்கங்களைத் திரும்பவும் கொடுத்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறு முறைப்பாடுகளை புதுப்பித்துப் பதிவதுடன், தங்களிடமுள்ள தகவல்கள், மேலதிக விபரங்களையும் வழங்கவேண்டும். எங்களுக்குக்கிடைக்கின்ற காலம் குறுகியது. வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிராக நீதி நியாயம் வேண்டும். அரசியல் ரீதியாக அரசியல் வாதிகள் வெறுமனே தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து இந்த விடயங்களைச் சொல்வதனால் ஒன்றும் நடைபெறப் பொவதில்லை. இழப்புக்களைச் சந்தித்தவர்கள் என்றவகையில் எங்களுடைய விடயங்களை நாங்களே செய்தல் வேண்டும். அண்மையிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று உங்களுடைய முறைப்பாடுகளைப் புதுப்பிப்பதன் மூலம் மேலும் இந்த விசாரணைக்கு வலு பிறக்கும். ஆகையினால் மிக விரைவில் சந்தேகங்கள் ஏதாவது இருப்பின் அதனைப் பதிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றார்.