இலங்கைத் தரச் சான்றிதழ் பெற்ற, பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் நடைமுறையானது இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்துகள் நாட்டில் அதிகரித்துள்ளதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், இலங்கைத் தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி பெறப்படாத தலைக்கவசங்களை விற்பனை செய்தல், தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் அவ்வனுமதி பெறாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், அவ்வாறான தலைக்கவசப் பாவனையாளர்கள் தங்களது தலைக்கவசங்களை மாற்றிக்கொள்ள குறிப்பிட்டதொரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.