ஜனாதிபதி பொது மன்னிப்பு : இலங்கையின் அதிகார அரசியல்

Published By: Gayathri

25 Jun, 2021 | 04:25 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்குவது என்பது ஆரம்பத்திலிருந்து பின்பற்றப்பட்டதொரு விடயமாகும்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பொது மன்னிப்பு என்பது காணப்பட்டது. அதாவது இலங்கையை ஆக்கிரமித்து காலணித்துவ நாடாக காணப்பட்ட காலத்திலும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது.

டொனமூர் மற்றும் சோல்பரி அரசியல் யாப்பு முறைமையிலும் ஆட்சியாளருக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் காணப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளாக தண்டனை பெற்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வில்லை என்பதே இங்கு முக்கியமாகின்றது.

உதாரணமாக 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக ஆட்சி பீடம் ஏறுவதற்கு அஸ்திவாரமிட்ட சம்பவமாக எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயகவின் படுகொலை விவகாரம் அமைந்தது. 

இந்நிலையில் 1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயகவை சுட்டுக்கொன்ற  தல்துவே சோமராம தேரரை விடுவிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

ஆனால் பொது மன்னிப்பு வழங்கவோ விடுவிக்வோ இல்லை. இதற்குக் காரணம், தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது என்ற எழுதப்படாத விதியை ஆட்சியாளர்கள் பின்பற்றினார்கள். இதனால் நீதிமன்ற அதிகாரமும் ஆட்சி அதிகாரமும் சம கோடுகளாக காணப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறானதொரு ஒருமித்த நிலை பயணத்தில் இந்த இரு துறைகளிலும் உள்ளதா? என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறானதொரு நிலையில் நீதிமன்ற  தீர்ப்புகளுக்கும் அதிகாரங்களுக்கும் சவாலை ஏற்படுத்தும் வகையில் 1978 ஆம் ஆண்டில் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதி வசமானது. அன்றிலிருந்து இன்று வரை வழங்கப்பட்ட - வழங்கப்படுகின்ற ஜனாதிபதி பொது மன்னிப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே அமைந்தது.

அன்றும் சிறையிலிருந்த பாதாள குழுவை சார்ந்த கோனவல சுனில்போன்றவர்களுக்கு விடுதலையளிக்க பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுப்பட்டது.

மறுப்புறம் இலங்கையின் அரசியல் வரலாற்றில்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்க கூடிய அதிகாரம் திருத்தத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பது மற்றுமொரு உண்மையாகும். இதனால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களும் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை விமர்சனங்களுக்கு உட்படும் வகையிலேயே  பயன்படுத்தினார்கள்.

இலங்கை அரசியலமைப்பின் 34 ஆவது அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் வழங்கப்படுகின்றது. மேலும் 34 (1) உப பிரிவு , இலங்கையின் எந்தவொரு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் குற்றவாளியானவருக்கும் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதியால் முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

அதேபோன்று குற்றவாளிக்கு வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பு முழுமையான விடுதலையா? அல்லது சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதா?  என்பதையும் ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியும். மேலும் தண்டனையை குறைக்கவும் அல்லது குற்றவாளியை முழுமையாக விடுவிக்கவுமான அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுகின்றது.  

ஆனால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திற்கு அரசியலமைப்பின் 34 (ஏ) உப பிரிவு ஓரளவு கட்டுப்பாட்டை விதிக்கின்றது. அதாவது குறித்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு முன்பு வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அறிக்கை  கோரப்பட வேண்டும். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் சட்ட மாதிபரிடம் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்பதே அந்த கட்டுப்பாடாகும். ஆனால் அதன் நடைமுறை தன்மை வெளிப்படுவதில்லை.

எனவே இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சர்ச்சைகளை தோற்றுவித்த சம்பவங்கள் ஏராளம் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோகராக இருந்த பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியான துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால் இவர் கடந்த பொசன் பௌர்ணமி தினத்தன்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார். இது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கையின் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட சவால் என்ற வகையில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கடும் அதிருப்தியை ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளனர்.

இதே போன்று 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் பெரிதும் பேசப்பட்ட றோயல் பார்க் படுகொலை விவகாரத்தின் குற்றவாளியான ஜுட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 19 வயது இளம் பெண்ணை படுகொலை செய்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தமை தொடர்பில் 2004 ஆம் ஆண்டு எஸ்.பி திசாநாயக சிறைவைக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியில் முக்கிய அமைச்சராக பதவி வகித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார். எவ்வாறாயினும் 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எஸ்.பி திசாநாயகவிற்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

1971 களவரத்தின் பிரதான குற்றவாளியாக கருதப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீர ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜே.ஆர். ஜயவர்தன விடுவித்தார். அதே போன்று நக்சலைட் குற்றச்சாட்டில் கைதாகி சிறைவைக்கப்பட்ட விஜய குமாரதுங்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கி ஜே.ஆர். ஜயவர்தன விடுவித்தார். இதே போன்று எத்தனையோ சம்பவங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இவை அனைத்திற்கும் இருக்கும் ஒற்றுமை யாதெனில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பாகும்.

நாட்டின் அனைத்து பிரஜைகளையும் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான சிறப்பதிகாரங்கள் பயன்பாடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எப்போதும் இருக்கின்றன. அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் எந்தவொரு ஜனாதிபதியும் அந்த அதிகாரங்களை மறுசீரமைக்க முன் வந்ததில்லை. 

குறிப்பாக பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது குறித்து  இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.  நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கூறினாலும் ஏதோவொரு வகையில் மீண்டும் அந்த அதிகாரம் இருந்த இடத்திற்கே வந்து விடுகின்றது.

கடந்த நல்லாட்சியிலிருந்து தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரையான அதிகார மாற்றங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகின்றது.  எனவே இவ்வாறான அதிகாரங்கள் அனைத்து பிரஜைகளுக்குமான சட்டத்தின் சமத்துவத்தையும் சமநிலையையும் சீர்குழைப்பதாகவே அமைகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21