ரணிலின் பாராளுமன்ற வருகையும் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலமும்..!

Published By: J.G.Stephan

22 Jun, 2021 | 11:05 AM
image

- ம.ரூபன்-
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து, ஒன்பது மாதங்களால் பாராளுமன்றம் வருகிறார்.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், அவரும் படுதோல்வியை சந்தித்தது அரசியல் வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரு பேரிடிக்கு காரணம் தலைமைப்பதவிப்போட்டியே.

1946 இல் கட்சியை ஆரம்பித்த டி.எஸ்.சேனாநாயக்கா, அவரின் மகன் டட்லி சேனாநாயக்கா, சேர் ஜோண் கொத்தலாவலை,ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ரணசிங்க பிரேமதாச ஆட்சியிலும் இக்கட்சிக்குள் சிறு பிரச்சினைகள் தோன்றியபோதிலும் கட்சியை விட்டு சிலர் விலகினார்கள். சிலர் விலக்கப்பட்டனர். ஆனால்,கட்சி பிளவுபட்டதுமில்லை, தலைமைப்பதவி போட்டியுமில்லை.

ரணிலின் சிறிய தந்தையும், அங்கிலிக்கன் திருச்சபையின் குருநாகல் ஆயருமான வண லக்‌ஷ்மன் விக்கிரமசிங்க,1983  ஜூலை கொடுமைகளைக்கண்டு ஐக்கிய தேசியக்கட்சியையும்,ஜே.ஆரின் சர்வாதிகார ஆட்சியையும் கண்டித்து இறைவன் தண்டிப்பான் எனக்கூறியிருந்தார்.

ஜே.ஆரின்,மருமகனும்,லேக் ஹவுஸ் அதிபர் ஒஸ்மன்ட் விக்ரமசிங்கவின் மகனுமான ரணில், 1977 தேர்தலில் பியகம தொகுதியில் இருந்து 28 வயதில் தெரிவாகி அமைச்சரானார். 1993 இல் பிரேமதாச மறைவால் பிரதமராக ஜனாதிபதி விஜயதுங்கவால் நியமிக்கப்பட்டார். 44 வருடங்கள் எம்.பி.பதவி. இருபத்தைந்து வருடங்களாக கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மேற்கொண்ட தவறான செயற்பாடுகளே கட்சியின் படுதோல்விக்கு மூலகாரணம் பதவி விலகவேண்டும் என முன்னணியின் செயலாளர் தினியாவல பாவித்த தேரர் ரணிலிடம் கோரி கையளித்த மகஜரை ரணில் ஏற்க மறுத்து கிழித்து வீசினார்.

இதேவேளை  கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜெயசூரியாவை  தலைவராக்குமாறும் பலரும் ரணிலிடம் கேட்டபோதும் நிராகரித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒரு கூட்டணியாக்கி ஒற்றுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கும் திஸ்ஸ அத்தனாயக்கா போன்றோர் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

ரணிலுக்கும், சஜித்துக்கும் இடையே தலைமைத்துவ மோதல் நீண்டகாலமாகவே நிகழ்ந்து வருகிறது. 2018 இல் பிரதமர் பதவியிலிருந்து ரணில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நீக்கப்பட்டபோதே ரணிலை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சஜித் ஆதரவு எம்.பிக்களும், ரணிலுக்கு எதிரானவர்களும் ஒன்றுபட்டு இரகசியமாக செயற்பட்டிருந்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சஜித்துக்கு எதிராக ரணில் ஆதரவு தரப்பினர் செயற்பட்டிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்காது செயற்பட்டதாலேயே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் கிடைத்தது. தேர்தல் முடிவுற்றதும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியலில் எம்.பி பதவி வழங்குவதில்லை என்று கூறப்பட்டது. ரணிலை அப்பதவிக்கு நியமிக்குமாறும் சிலர் வலியுறுத்தியபோதும் அதனை ரணில் நிராகரித்தார்.

பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கா 1946 இல் கட்சியை உருவாக்கி ஒற்றுமைப்படுத்தி அரசியல் பயணத்தை மேற்கொண்டவேளை பண்டாரநாயக்காவும்  சிலரும் கட்சியிலிருந்து விலகி 1951 இல் சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தபோதிலும் டி.எஸ்.சேனாநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடாது தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ தலைவர்களையும் அரவணைத்து அரசியலை முன்னெடுத்துச்சென்றார்.

1951 அவரது திடீர் மரணத்தினால் மகன் டட்லி சேனாநாயக்கா பிரதமரானதும் எதிரணியினர் கட்சியில் குடும்ப ஆதிக்கம், பிளவுபடும் என்றனர்.

1953 டட்லி ஆட்சியின் நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பட்ஜட்டில் அரிசி விலையை அதிகரித்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட வேலைநிறுத்தம், ஹர்த்தாலில் வன்முறைகளும் வெடித்தன. பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பத்துப்பேர் பலி! பலர் காயம்! இச்சம்பங்களால் பிரதமர் டட்லி தமது பதவியை துறந்தார்.

கட்சித்தலைவர்,பிரதமர் பதவி ஆசையின்றி,உறவினரான சேர்.ஜோண் கொத்தலாவலையிடம்  ஒப்படைத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி லண்டனில் அஞ்ஞாதவாசமிருந்தார். ஜே.ஆரிடம் இருந்த நிதியமைச்சர் பதவியும் கொத்தலாவலையால் பறிக்கப்பட்டது. அந்தவேளையிலும் கட்சி பிளவுபடும் என எதிரணியினர் பிரசாரம் செய்தனர்.

1959 தேர்தலில் பண்டாரநாயக்கா ஆட்சிமைக்க இதுவும் காரணம். ஐக்கிய தேசியக் கட்சி எட்டு தொகுதிகளையே கைப்பற்றி எதிர்க்கட்சித்தலைவர் பதவியைக்கூட பெறமுடியாத நிலை. சம சமாஜக்கட்சி 14 இடங்களில் வென்று எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுவிட்டது! அதன் சரித்திரம் முடிந்தது என டாக்டர் கொல்வின் ஆர்.டீ.சில்வா விமர்சித்திருந்தார்.

1956 கட்சியின் களனி  மாநாட்டில் 'தனிச்சிங்களமே'என்ற தீர்மானத்தை முன்மொழிந்ததன் மூலம் தான் பண்டாரநாயக்காவுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல எனக்காட்ட முயன்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் களனி தொகுதியில் தோல்வியடைந்தார். பௌத்தர்களின் முக்கிய தலங்களில் ஒன்றான களனி விகாரையை கட்டி நிர்வகித்தோரின் குடும்பத்தைச்சேர்ந்தவரான ஜே.ஆர்.இங்கு தோல்வியடையும் அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அந்நேரத்தில் பலவீனப்பட்டிருந்தது. டட்லியின் ஒன்று விட்ட சகோதரர் ஆர்.ஜி.சேனநாயக்காவிடமே ஜே.ஆர்.தோற்றார். இலங்கை அரசியலில் புதிய வேதனையான திருப்பு முனையை சிங்களவர் மூலம் இத்தேர்தல் ஏற்படுத்தியது.

1952 தேர்தலில் ஜே.ஆருக்கு எதிராக களனித்தொகுதியில் அவரது உறவினரும், ரணிலின் பேரனை மறுமணம் செய்திருந்த விமலா விஜயவர்த்தனா சுதந்திரக்கட்சியில் களமிறங்கி தோல்வியடைந்தார். 1956 தேர்தலில் மிரிகம தொகுதியில் வெற்றிபெற்று பண்டாரநாயக்கா அமைச்சரவையில் அமைச்சரானார். இலங்கையின் பண்டாரநாயக்கா கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்.

படுதோல்வியை சந்தித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீண்டும்  ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப இனவாத அரசியலை கையிலெடுத்தார்.பண்டா- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டி பாதயாத்திரையை மேற்கொண்டார்.லண்டனில் இருந்த டட்லியை அழைத்தார்.ரணசிங்க பிரேமதாச போன்றவர்களும் இணைந்து கொண்டனர்.

1960 மார்ச் தேர்தலில் 50 இடங்களை கட்சி பெற்று டட்லி பிரதமரானார். சிம்மாசனப்பிரசங்கம் தோற்கடிக்கப்பட்டதால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. மூன்று மாதங்கள் ஆட்சியில் இருந்தது. ஜூலை தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைந்து டட்லி எதிர்க்கட்சித்தலைவரானார். 1965 தேர்தலில் மீண்டும் பிரதமரானார்.

1970 தேர்தலில் ஐ.தே.க. தோல்வியடையவே,எதிர்க்கட்சித்தலைவர் பதவியை சுகயீனம் காரணமாக  கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடம் ஒப்படைத்தார். 1973 ஏப்ரல் 13 அவரின் மறைவையடுத்து ஜே.ஆர்.கட்சித்தலைவரானார். டட்லியின் பெறாமகன் ருக்மன் சேனாநாயக்க அவரது இடத்துக்கு தெரிவானார்.

1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாதவாறு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன்  168 தொகுதிகளில் 140 இடங்களைப்பெற்று ஆட்சியைப்பிடித்தது.இத்தேர்தலில் சுதந்திரக்கட்சி எட்டு இடங்களையே பெற்றது.ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பதவிக்காலம் முடிந்ததும் 1988 ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணசிங்க பிரேமதாச வெற்றிபெற்றார்.அவரின் சில நடவடிகையால் அதிருப்தியடைந்த காமினி திசநாயக்கா,லலித் அத்துலத் முதலி,ஜி.எம்.பிரேமச்சந்திரா ஆகியோரால் பிரேமதாசவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை (Impeachment) கொண்டுவரப்பட்டது.

சிலர் கட்சியில் இருந்து விலகினார்கள்.பிரேமதாசவின்  வெற்றிக்காக ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக பரப்புரை செய்தவர்கள். பிரேமதாச ஜனாதிபதியானதும் நிதியமைச்சராக,பிரதமராக டி.பி விஜயதுங்கவை நியமித்தார்.ஒக்ஸ்போர்ட் பட்டதாரி லலித் அத்துலத் முதலி,ஜே.ஆர்.ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சர்.புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்தவர்.காமினியும்,லலித்தும் பிரதமர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்தனர்.

பிரேமதாசவின் மறைவையடுத்து  காமினி உட்பட சிலர் மீண்டும் கட்சியில் இணைந்து கட்சி ஒன்றுபட்டு ரணில் தலைமைப்பொறுப்பை ஏற்றார். இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.எதிர்க்கட்சித்தலைவரானதும் கட்சியில் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆளும் மகிந்த தரப்புடன் இணைந்து அமைச்சுப்பொறுப்புக்களைபெற்றனர். ரணிலின் ஆதரவுடன் என்றே கூறப்பட்டது.

அதன் பின்னரே கட்சி மோசமான பின்னடைவுகளை சந்தித்தது.ஜனாதிபதி ஜே.ஆரின் மருமகனான இவர்  22 ஆம் திகதி பாராளுமன்றம் செல்லவுள்ளதை ஆளும் தரப்பினர் வரவேற்று,ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவை உருவாக்க முனைகின்றனர்.சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் ரணில் பக்கம் தாவுவார்கள் என்று  கூறியுள்ளனர். ரணில் வருவதால் ஆட்சியாளர்களே நன்மையடைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிக் கட்சியின் எதிர்கால பணிகள் எவ்வாறு அமையும் என்பதை ரணிலின் பாராளுமன்ற வருகைக்கு பின்னரே அறியலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22