எதிர்பார்ப்புகள் நிறைந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று ஆரம்பம்!

Published By: Vishnu

18 Jun, 2021 | 10:15 AM
image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தரவரிசையில் முதலிரு இடங்களை பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. 

ஒவ்வொரு அணிகளும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடின. கொரோனா அச்சத்தால் சில தொடர்கள் இரத்து செய்யப்பட்டன.

இதில் பெற்ற புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் முதலிரு  இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 

144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.


இந்தியா

தனிமைப்படுத்துதல் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 15 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு சென்று விட்டனர். 

பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி உள்ளனர். 

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தால்  நிச்சயம் சவாலான ஓட்டத்தை இந்தியாவினால் பெற்றுக் கொள்ள முடியும். 

நடுத்தர வரிசையில் விராட்கோலி, புஜாரா ஆகியோரைத் தான் அணி அதிகமாக நம்பியுள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் அதிரடியில் மிரட்டிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டின் துடுப்பாட்டத்தையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். 

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் ஷமி, இஷாந்த் ஷர்மாவின் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும். 

அணி நிர்வாகம் நேற்றிரவு அறிவித்த ஆடும் லெவனில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த டெஸ்டில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டது. 

ஆடுகளம் வறண்டு காணப்பட்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

விராட் கோலி தலைவர் ஆன பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி. பட்டத்தையும் வென்றதில்லை. அவரது  தலைமையில் இந்திய அணி 2017 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியிலும், 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கிண்ண அரையிறுதியிலும் தோல்வி கண்டது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான தலைவர் என்ற பெருமையை பெற்றிருக்கும் 32 வயதான விராட் கோலி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூட வேண்டியது முக்கியமாகும். 

 

நியூஸிலாந்து

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மனரீதியாக அவர்களின் நம்பிக்கைக்கு உத்வேகம் அளித்துள்ளது. 

முழங்கை காயத்தில் இருந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மீண்டு விட்டதால் அது நியூசிலாந்துக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே, வில்லியம்சன், டாம் லாதம், ரோஸ் டெய்லர் ஆகியோர் அவர்களின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நியூசிலாந்தின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் எதிரணி துடுப்பட்ட வீரர்களை திக்குமுக்காட வைக்கக் கூடியவர்கள்.

நியூசிலாந்து அணி ஐ.சி.சி. போட்டிகளில் இதுவரை 2000 ஆம் ஆண்டில் சாம்பியன் கிண்ணத்தை மட்டுமே வென்றுள்ளது. 

2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று போனது. 

கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு உலக அளவிலான கிண்ண ஏக்கத்தை தணிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிட்டாது. 

ஆக நியூசிலாந்து வீரர்களும் எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்பார்கள். 

இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41